யார் வெற்றியாளர்?
யார் வெற்றியாளர்?
மண்ணுக்குள்ளே மூடிய விதை
வெளி உலகைப் பார்ப்போம்
என்ற நம்பிக்கையில் துளிர்க்கும்
ஒவ்வொரு விதையும் வெற்றியாளர் தான்.
தங்கள் குழந்தைகளை வெற்றி அடைய செய்ய
அவர்களிடம் விளையாடி பொய்யாகத் தோற்று
குழந்தைகளின் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்கும்
ஒவ்வொரு பெற்றோரும் வெற்றியாளர் தான்.
எதுவுமே நிச்சயமில்லாத இவ்வுலகில்
நாளைய விடியல் நமக்கானது தான் என
நம்பிக்கையோடு தூங்கச் செல்லும்
ஒவ்வொரு மனிதனும் வெற்றியாளர்தான்.
என்றாவது ஒரு நாள் கரையைக் கடப்போம்
என்ற நம்பிக்கையில்
இடைவிடாமல் கரையை முத்தமிடும்
ஒவ்வொரு அலையும் வெற்றியாளர் தான்.
வானம் கட்டாயம் மழையைப் பொழியும்
என்ற உறுதியான நம்பிக்கையில்
விதைகளை விதைக்கும்
ஒவ்வொரு விவசாயியும் வெற்றியாளர் தான்.
தோல்வி எனும் முதல் படிக்கட்டில் ஏறி
வெற்றி இலக்கை அடைய
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்
நீயும், நானும் வெற்றியாளர்தான்.
நம்பிக்கை என்ற வார்த்தையால்
பூமிப்பந்தை விட வேகமாக
சுழன்று கொண்டிருக்கும்
அனைவருமே வெற்றியாளர்தான்.