மீனுக்குட்டி
மீனுக்குட்டி


(28.12.2019 அன்று பிறந்த என்பேத்தி மீனாட்சியின் நல்வரவுக்கு வாழ்த்து)
செல்லப்பாப்பா வந்தபோது
செவ்விழிகள் திறந்தபோது
வெல்லமாய்மனம் இனித்தபோது
வெல்லுகின்ற மன்னனானேன்!
பிள்ளைகளைப் பெற்றபோது
பேறுபெற்றேன் வாழ்க்கையில்
பேத்தியவள் வந்தபோது
பெரும்பேறு என்கையில்!
தவமாய்த் தவமிருந்து
காத்திருந்த காலத்தில்
சுகமாய் என்கையில்
சொர்க்கமே வந்ததம்மா!
கருப்பையில் உதித்துவந்த
கட்டழகுச் சூரியமதி
பெருமையில்
பூமிக்கு
வந்தது ஓர் அன்புவிதி
தேனாட்சி செய்கின்ற
திருச்சோலை மதுரையின்
மீனாட்சி வந்துவிட்டாள்
மீண்டுவிட்டோம் வாழ்க்கையில்
புதுநிலவே பூத்துநிற்கும்
பொன்விடியல் தாமரையே
சதிராடும் கால்கைகள்
சப்தங்கள் தேன்மழையே!
மான்குட்டிப் பூவழகே
மன்றத்துத் தேன்தமிழே
மீன்குட்டிச் செல்லமே!
மென்பட்டின் அன்னமே!
சொல்லாண்டு சுகமாண்டு
சொர்க்கத்தின் அழகாண்டு
பல்லாண்டு வாழ்கநீ
பைந்தமிழின் சுவையாண்டு!