அணையா விளக்கு!
அணையா விளக்கு!
அறியாமை இருள் கற்றி
அறியா சனங்களின்
அரியாசனத்தை அலங்கரிக்க
அவனியிலே உதித்தவராம்!
விருதுநகர் தன்னதிலே
வித்திட்டு விளைந்தவராம்;
குமாரசாமி சிவகாமியம்மையின்
ஈடிலாப் புதல்வராம்!
வறுமையில் வளர்ந்தாலும்
வல்லமை படைத்தவராம்;
தானுற்ற துயர் பிறரெண்ணக்
கூடாதென்ற நல்லெண்ணம் கொண்டவராம்!
படிப்பின் அவசியத்தை உணர்ந்திட்ட
படிக்காத மேதையாம்;
ஏழை மாணவர்கள் அருகிலே படித்திட
மூன்று மைலுக்கொரு பள்ளியை அமைக்க முனைந்தவராம்!
பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு
மதிய உணவளித்து பசியாற்றி மகிழ்ந்தவராம்;
பாடம் படிப்பதில் பாகுபாடு கூடாதென
சீறுடை மூலம் சீர்படுத்தியவராம்!
>தொழில் வளம் பெருக்க நாட்டில்
தொழிற்சாலைகள் பல அமைய வித்திட்டவராம்;
நீர் வளம் பெருக ஆறு, குளம்,
அணைகள் பலவற்றை அமைத்தவராம்!
கதராடை மட்டுமே அணிந்திட்ட
கருப்பு காலா காந்தியாம்;
மும்முறை முதலமைச்சராய் இருந்தாலும்
முனைப்போடு கடமை ஆற்றியவராம்!
உண்மை, நேர்மை, வாய்மை என
உயரிய குணங்கள் கொண்டவராம்;
பார் போற்றும் பலர் வந்த போதும் – இவர்போல
யார் இருப்பார் என வாழ்ந்த உத்தமராம்!
காலம் கடந்து வாழும்
கண்ணியமான தலைவராம்!
கர்மவீரராம்!!
காமராஜர்!!! - தான்
இறந்தாலும் இரவாப் புகழுடன்
என்றும் எம் நெஞ்சில் ஒளி வீசிடும்
அணையா விளக்கு!!!