வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்...
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்...
(செழிப்பாக வாழ்ந்த மரங்கள் செயற்கை தனத்தில் ஊறிப்போன மனிதர்களால் வெட்டப்படுகின்றன. அவைகள் சொர்க்கத்திலே சந்தித்துக்கொண்டால்...)
கருவேல மரம் தானே
காவாலி நீ ஏன்’னு
என்னையத் தான் வெட்டுனாங்க;
நிழலைக் கொடுத்து, நீரைக் கொடுத்து
பழத்தைக் கொடுத்து பசியாத்தும்
உங்களை ஏன் வெட்டுனாங்க?
பாவத்தை ஏன் பண்ணுனாங்க?
வாய்க்கா தண்ணிய குடிச்சிக்கிட்டு,
வந்து அமர நிழல் கொடுத்து,
வகை வகையாய்ப் பழமும் தந்து,
வயலோரம் வளர்ந்த என்னை
வரப்பு வெட்ட வேணுமுன்னு
வண்டி வச்சிப் பிடுங்கிட்டாங்க – என்
வம்சத்தையே அழிச்சிட்டாங்க!
குலை குலையா காய்ச்சிக்கிட்டு,
கொல்லையிலே வளர்ந்த என்னை
தென்னையின்னு அழைச்சாங்க;
இளநீரைக் குடிச்சாங்க; தேங்காயைப் பறிச்சாங்க
கிணறு தோண்ட வேண்டுமுன்னு
கொலை பண்ணிப் போட்டாங்க – என்
குலத்த முழுசா சாச்சிட்டாங்க!
நெடுஞ்சாலை ஓரத்திலே
நெடு நெடுன்னு வ
ளர்ந்து நின்னேன்;
நிழல் கொடுத்து காத்து நின்னேன்;
நகரமயம் ஆக்குறோம்னு
நீண்டகாலம் வாழ்ந்த என்னை
நிலைகுலைய செஞ்சிட்டாங்க – எங்க
நிலத்தையெல்லாம் கெடுத்துட்டாங்க!
மழையைத் தந்து மண்ணைக் காத்து
மனசுக் குளிர வயித்த நிரப்பி
மூச்சுக் காத்தாய் வாழவைக்கும்
மரங்களையே வெட்டுறாங்க!
இப்படியே போச்சுதுன்னா
பொட்டு மழை இல்லாம
பொசுங்கித் தானே போவாங்க?
பொறவென்ன ஆவாங்க?
மழைத் தண்ணி இல்லாம
மண்ணு காஞ்சி போனப் பின்ன
மரத்த நட்டு வளக்கலனு
மனசுக் கிடந்து துடிப்பாங்க!
வெக்கயில வேகுறோமே
வெளியப் போக முடியலன்னு
வெந்து நொந்து சாவாங்க!
சாபமெல்லாம் விட வேணாம்;
சாந்தமாவே இருந்துக்குவோம்!
மனுசப்பய மனந் திருந்தி
மரத்தை நட்டுப் பாதுகாத்து
மண் வளத்தை செழிக்க வெச்சு
மத்த உசுர வாழ வெச்சு
இயற்கையோட இணைஞ்சி வாழ
இறைவனைத் தான் வேண்டிக்குவோம்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸