புகை நமக்கு பகை
புகை நமக்கு பகை
புகை மனிதனுக்கு மட்டுமல்ல
சுற்றுச் சூழலுக்கும் பகை!
திரும்பிய திசையெல்லாம் தொழிற்சாலைகள்!
கார்மேகமோ? என மயிலும் அஞ்சிடும்!
காற்றில் கார்பன் அளவைக்கூட்டி…
காற்றை சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளாம்….
மரங்களை அழித்து…… கரியைப் பெருக்கி…..
ஓசோனில் ஓட்டையைப் பெரிதாக்கி!
நெருப்பாய் வெயில் சுடுகிறது!
மேனியும் விறகாய் எரிந்து கருகுகிறது!
நிலமும்…. நீரும் வறண்டு…
வெயிலின் தாக்கத்தில் மிரண்டு…
தண்ணீர் இல்லாமல் கானகத்தில் மட்டுமல்ல…
காய்ந்து போன பகுதிகளிலும் சுருண்டு….
அல்லாடும் உயிர்களைக் கண்டாயோ?
உலகமே பாலை போல் மாற்றி…
உல்லாச வாழ்வைப் போற்றி நடம் ஆடும் மனிதா1
பருவ மழையைக் காணோம் பதற்றம் இல்லை!
பாதிக் காடுகளைக் காணோம் வாட்டம் இல்லை!
சுவாசிக்க சுத்தக் காற்றைக் காணோம் அச்சம் இல்லை!
கஞ்சியூட்டும் கழனிகளைக் காணோம் கரிசனம் இல்லை!
வறுமையில் உழல்கிறார்கள் மக்கள் இரக்கம் இல்லை!
வாய்க்கஞ்சிக்கு வழியில்லை பாவப்பட்ட பணம் வரவில்லை!
உலகைப் பதற வைக்கும் வெப்பமயமாதல்…
உள்ளத்தை உதற வைக்கும் அமில மழை
இரசாயனத்தால் அழிந்து போக
ும் மண்ணுயிர்கள்!
உன் பேராசையால் காணாமல் போகும் காடுகள்…
கழனிகள்…. விலங்குகள்…. பறவைகள்!
ஐப்பசி வந்தால் அடை மழைக் காலம்!
ஐ………யோ…… பசி வந்துவிட்டது…. அட ஒரு துளி
மழையைக் காணோம்
உன் ஆடம்பரம் உன்னை மட்டுமல்ல…
உன்னைச் சுற்றியுள்ளவற்றையும் அச்சுறுத்துகிறது!
உன் மனம் உனக்கு உறுத்தவில்லையா?
அல்லது உணர்த்த வில்லையா?
உயிர் வாழ்வதே இனி கேள்விக்குறியான போது…
உயிரைக் கொடுத்து ஓடி… ஓடி… உழைக்கிறாயே?
காற்றின்றி 5 நிமிடம் வாழ முடியுமா?
அல்லது சிலிண்டிரைத் தூக்கிச் செல்ல
முடிவு செய்திட்டாயா?
சந்திரனையும் செவ்வாயையும் நம்பி அலட்சியமா?
இவை அனைத்தும் ஒருநாள் சாத்தியமா?
எனில் இந்த புவிவாழ் மற்ற உயிரினங்கள்?
ஏழைப் பாழைகள்? எனக்கென்ன?
சக்தியுள்ளவன் பிழைக்கட்டுமே… என்கிறாயா?
எத்தனை சுயநலம் உன்னிடம்!
இயற்கை எல்லோருக்கும் சொந்தம்!
மாசு என்னும் அரக்கனை ஒழிக்க மறந்துவிட்டால்…
அவன் உன்னை அழிக்க மறக்கமாட்டான்!
நினைவில் கொள்!
மாசைத் தடுப்போம்! உயிர்களைக் காப்போம்!
இயற்கை நமக்கு கொடுத்ததை….
நாம் பிறருக்கும் கொடுப்போம்!