சாத்தான் மனம்
சாத்தான் மனம்
என்ன துயரோ!
இவ்வுலகில் இருந்து துண்டித்துக்கொண்டு
யாரோடும் ஒட்டாமல்
நீ தனியாய் இருந்தாய்,
நீயாக ஒன்றும் வந்து கேட்கவில்லை
நானாகத்தான் உன்னருகில் துணையாய் நின்றேன்.
உன் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டேன்
துயரில் சாய்ந்துகொள்ள ஒரு சுவரேனும் ஒரு தூணேனும் தேவை
உனக்காக சுவராகவோ தூணாகவோ ஆகிப்போகாத வாழ்வே வீணெனத் தோன்றியது.
நான் மட்டுமே உனக்காக இருக்கவேண்டுமென
உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென மன ஆவல்.
பா
ர்த்துக்கொண்டேன்.
என்னோடிருந்தாய்
உன் துயர் வடிந்து
நீ இயல்புக்குத் திரும்பினாய்
புதிய நண்பர்களைப் பெற்றாய்
உன்னோடான என் நேரம் குறைந்தது.
நீ எப்போதும் துயருற்றே இருக்கலாமல்லவா என சிந்தித்தது சாத்தான் மனம்,
என்னோடே இருப்பாயல்லவா!
பின்னொருநாள்
உன் வாழ்வில் புது நபர்கள் வந்தார்கள்,
நான் அமைதியாகிக்கொண்டேன்.
என்ன துயரோ
இவ்வுலகில் இருந்து துண்டித்துக்கொண்டு
யாரோடும் ஒட்டாமல்
இப்போது நான் தனியாய் இருக்கிறேன்.