காதல் சூரியன்
காதல் சூரியன்


தூரப்பார்வைகள் போதுமென்றே சூரியனை நேசிக்கும் தாமரையாய் தள்ளியிருந்தேன்
கண நேர மாற்றத்தில் பேருந்து நெருக்கத்தில் உன் கூந்தல் அலைகள் என் முகத்தில் சாமரம் வீச அருகே நிற்பேன் என அவதானிக்கவில்லை
உன் தேகம் தொடும் வியர்வைத்துளிகளை சபிக்கிறேன் உந்தன் தேக வாசத்தில் மூழ்கி திளைக்கிறேன்
உன் இதழ் கண்டு மோகமுற்ற கூந்தல் பேரலைகள் அவ்வப்போது முன் நெற்றியில் படர்ந்து இதழ் முத்தம் பருகி செல்கிறது
வெயிலுக்கேன் இவ்வளவு மோகம் உன் இதழ் ரசம் குடித்து வறட்சியை தருகிறது அதனால் என்னவோ நீ அடிக்கடி நாவினால் அமுதம் நிரப்புகிறாய்
பிறையை பலர் ஆகாயத்திலும் சிலர் சிகையிலும் தேடி அலைகிறார்கள் நான் கூட அப்படித்தான் உன் இடை காணும் வரை
உன் பார்வை படும்போதெல்லாம் உயிர் இரண்டடி எட்ட பறக்கிறது கிட்ட நின்றும் உனக்கது தெரியவில்லையா
மதகில் தேங்கிய நீராய் வார்த்தைகள்
முட்டி நிற்கிறது வெள்ளமென என் காதலை சொல்லி செல்வதற்கு
நீயோ இறங்கிவிட்டாய் நான் கிரங்கிப்பார்க்கிறேன் என் சூரியனின் வீதி உலாவை.