DEENADAYALAN N

Tragedy Inspirational

4.1  

DEENADAYALAN N

Tragedy Inspirational

The Art of PATIENTING!(தமிழ்)

The Art of PATIENTING!(தமிழ்)

5 mins
141




கடந்த இருபது நாட்களுக்கும் மேல் நான் SMஇல் எழுத வில்லை!


(‘அப்பா.. நிம்மதியா இருந்தமடா சாமி..’ என்று யாரங்கே முணுமுணுப்பது?)


நானும் என் மனைவியும் மேற்கொண்ட இருசக்கர வாகனப் பயணத்தில் ஒரு U திருப்பத்தில் வண்டி சறுக்கி செமையாக கீழே விழுந்தோம்.

 

(கடந்த 1989 முதல் சுமார் முப்பது வருடங்கள் இருவரும் சேர்ந்தே இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை ஒரு முறை கூட விபத்தில்லை – விழுந்ததில்லை!)


(‘கீழே விழும் எல்லோரும் பாடும் வழக்கமான புராணம்தான் இது’ என்று யாரங்கே முணுமுணுப்பது!)



எனக்கு சிறிய அளவில் உள்ளங்கையில் ஊமை அடி. என் மனைவிக்கு வலதுகாலில் ஆழமான காயம் – ரத்தப் பெருக்கு. இடதுகால் மடங்கி முட்டியில் செமத்தியான பாதிப்பு! மெல்லிய சிதறல் மற்றும் ‘ஜவ்வு’ கிழி.


ஆனால் இப்போது விஷயம் இது பற்றி அல்ல!


 

விழுந்த சுமார் இருபது நிமிடத்தில் திரு / திருமதி வெங்கடேஷ்


(வெங்கிட்டாபுரம், கோவை – முன்பின் தெரியாத – சுமார் மூன்று மணி நேரம் உடனிருந்த)


தம்பதிகள் மற்றும் பத்துப் பதினைந்து மேன்மைமிகு பொது ஜனங்களின் உதவியுடன் மருத்துவனை அடைந்தோம். அவசரகால உதவிக்குப் பின் என் மனைவியை ‘அட்மிட்’ செய்து கொண்டார்கள். ஆனால் ரூம் கிடைக்க சற்று தாமதமாகுமாம்.


பின் ஒரு உறவினரை அழைத்து விபரம் சொன்னேன்.


‘ஆ… என்ன சொல்றே.. ஏக்சிடண்ட்டா.. எங்கே.. எப்படி.. அச்சச்சோ.. எந்த ஹாஸ்பிடல்.. வர்றோம்.. ‘


வந்தார்கள்! ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் வயதானவர்கள்.. மருத்துவ மனையில் நோயாளியுடன் ஒருவர்தான் தங்க முடியும் - இன்னோரன்ன காரணங்களால் அவர்களை திருப்பி அனுப்ப நேரிட்டது. இரவு பதினோரு மணிக்கு ரூம் கிடைத்தது. எங்கள் வெளிநாட்டு வாழ் குழந்தைகளுக்கு மட்டும் சொன்னோம்.


விஷயம் வெளியே பரவ இரவு சுமார் 12.30க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. நெருங்கிய உறவினர்.


‘என்னாச்சு?!?!


ஒன்னுமில்லே.. ஒரு சின்ன ஏக்சிடண்ட்..


என்னாச்சு..?


கீழே விழுந்துட்டோம்..


எப்பிடி?


வண்டி சறுக்கீருச்சி..


அப்புறம்..


செமையா விழுந்துட்டோம்


அச்சச்சோ.. என்னாச்சி?


கால்லே காயம்.. நிறைய ரத்தம் போயிருச்சி..


யாருக்கு


வீட்லேதான்.. (என் மனைவி)


ஆங்ங்.. அப்புறம்?


இன்னொரு கால்லே முட்டீலே அடி.. நடக்க முடியலே..


எங்கே..


முட்டிலே..


எந்த எடத்துலே..


முட்டிலே


இல்லே இல்லே எந்த எடத்துலே விழுந்தீங்க..


ராஜ் ஹாஸ்பிடல் பக்கத்துலே..


அங்கே எதுக்குப் போனீங்க..


துணி வாங்க..


துணி வாங்க எதுக்கு அங்க போனீங்க


இல்லே.. காந்திபுரந்தான் போனோம்.. அப்புறம்…(காரணம் சொல்லப் பட்டது)


ரொம்ப ரத்தம் போயிருச்சா…


ஆமா..


எதுக்கு அட்மிஷன்


காயத்துக்கு தையல் போடணும்.. முட்டிக்கு எக்ஸ்ரே எடுக்கணும்..


அதுக்கு எதுக்கு அட்மிஷன்


இல்லே நாளைக்கு ஆபரேஷன் தியேட்டர்லே வெச்சிதான் பண்ண முடியும்னு டாக்டர் சொல்லிட்டார்..


எதுக்கு ஆபரேஷன் தியேட்டர்..


இன்ஃபெக்‌ஷன் ஆகாம இருக்கணுமாம்..


கூட யாரு இருக்காங்க


யாருமில்லே நான் மட்டுந்தான் இருக்கேன்..


‘என்ன ஆளு நீ.. தனியாவா இருக்கே.. அப்பொ நாங்க எல்லாம் எதுக்கு இருக்கறது…?


இல்லே நைட்லே ஒரு ஆள்தான் இருக்க முடியுமாம்


சாப்ட்டியா


ஊம்


வீட்லே (என் மனைவி) சாப்ட்டாளா


ம்..


சரி நாளைக்கு காலைலே அஞ்சு மணிக்கெல்லாம் நானும் அலமேலுவும் அங்க ஆஸ்பத்திரிலே இருப்போம்..


வேண்டாம்.. பதினோரு மணிக்கு வந்தா போதும்.. பதினோரு மணிக்குதான் ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டு போவாங்களாம்.. விசிட்டர் நேரமும் பதினொன்னு டு ஒன்னுதான்..


சரி வந்தர்றோம்.


தொலைபேசி வைக்கப்பட்டு விட்டது.



‘எவ்வளவு ஆத்மார்த்தமான அக்கறை’ என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டேன்.




அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணி.


இன்னொரு உறவினர்.


‘என்னாச்சு?!?!


ஒன்னுமில்லே.. ஒரு சின்ன விபத்து.


என்னாச்சு..?


கீழே விழுந்துட்டோம்..


எப்பிடி?


வண்டி சறுக்கீருச்சி..


அப்புறம்


இரவு 12.30 சம்பாஷனையைப் போலவே இதுவும் தொடர்ந்து முடிந்தது. இவர்களுக்குத்தான் எவ்வளவு அன்பு.




பின் காலை எட்டு மணிக்கு ஒரு தொலைபேசி.


‘என்னாச்சு?!?!


ஒன்னுமில்லே.. ஒரு சின்ன விபத்து.


என்னாச்சு..?


கீழே விழுந்துட்டோம்..


12.30 சம்பாஷனை இங்கும் ஏறத்தாழ அப்படியே பிரதிபலித்தது.


முடியும் தருவாயில்..


தீன்.. நம்ம ராமசாமி மகன் சின்னசாமி பக்கத்துலே இருக்கார்.. பேசணுமாம்..


சின்னசாமி பேசினார்.


மிண்டும் 12.30 சம்பாஷனையில் தொன்னூறு சதவிகிதம் நடந்தேறியது.




காலை பதினோரு மணிக்கு சுமார் பத்து பேர் என் உடன் இருந்தார்கள்.


ஆபரேஷன் தியேட்டர் தையல், முட்டி எக்ஸ்ரே அது இது என மதியம் மூன்று மணி ஆகி விட்டது. மனைவியும் ரூமிற்கு வந்து விட்டார்.


சாதாரணமாக நடக்க இரண்டு மாதங்கள் ஆகலாம். மருந்து மாத்திரைகளின் ஆக்கிரமப்பால் வலி பெரிதாக இல்லாததால் அவரும் உறவினருடன் கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பித்தார்.


அன்று மாலை ஐந்து மணி. ரூமிற்கு வெளியில் நின்றிருந்த ஒரு உறவினர் அவசர அவசரமாக போனுடன் உள்ளே வந்தார்.


‘இந்தாங்க.. என் சம்மந்தி பேசறாரு..’ போனைக் கொடுத்தார்.


மீண்டும் 12.30 சம்பாஷனையில் 75 சதவிகிதம் நடந்தேறியது.


‘வீட்லே (என் மனைவியிடம்) பேசலாமா..’


போன் என் மனைவி கைக்கு மாறியது. அந்தப்பக்கம் அவர் கையிலிருந்த போன் அவர் மனைவி கைக்கு மாறியது.


மீண்டும் ஒரு 12.30..!



அடுத்த இரண்டு நாள் முழுவதும் பெரும்பாலும் போனிலும் நேரிலும் இப்படி 12.30 சம்பாஷனை போய்க் கொண்டேதான் இருந்தன!



12.30 சம்பாஷனை தவிர கூடுதலாக பேசப்பட்டவை


கூடுதல் சம்பாஷனை – 1:

அட நம்ம ப்ரியாம்மாவோட அம்மாவுக்கும் இதே மாதிரிதான்.,, ஆனா உனக்குப் பரவாயில்லை. தையலோட போச்சு. அந்தம்மாக்கு உள்ளே தகடு வெச்சிருந்தாங்கலாம்.’


கூடுதல் சம்பாஷனை – 2

நம்ம முறுக்கு மீச நாகு கூட இப்பிடிதாம்பா.. பத்து நாள் படாத பாடு பட்டுட்டான்.. வீட்டுக்கு வர்றதுக்குள்ளே மூனு பெரிய ரூபா பழுத்திருச்சாம்..


கூடுதல் சம்பாஷனை – 3

மெட்ராஸ்லே என் மச்சானோட எதிர் வீட்லே ஒருத்தர் இருக்காரு.. அவர் ஆபீஸ்லே கதிருன்னு ஒருத்தரு.. இந்த ஆஸ்பத்திரிலேதான் இருந்தாராம்.. இந்தாங்க அவருகிட்டே பேசுங்க..


கூடுதல் சம்பாஷனை – 4:

டாக்டர் எப்பிடி.. கெட்டிக்காரரா? ஏன்னா.. டெல்லிலே ஒரு டாக்டர் ஆபரேஷன் செய்யறப்போ..


கூடுதல் சம்பாஷனை-5:

ஏம்மா..(மனைவியிடம்) உனக்கு நம்மா கனகாவோட படிச்சாளே சாந்தாமணி..அவளெத்தெரியுமா..

தெரிலீங்களே (என் மனைவி)

அட கனகாவோட ஸ்கூல் போட்டோவுலெ ரெண்டாவது ரோலே மூனாவதா உக்காந்திருப்பாள்லே… உன்னே நல்லாத் தெரியுமாம்..

இந்தா அவ பேசறா..



கூடுதல் சம்பாஷனை: 6

நீங்க யூ-ட்யூப்லே பாலும் பழமும் சினிமாலே பாருங்க.. அதுலே சிவாஜிய வீல் சேர்லே ..


கூடுதல் கமெண்ட்ஸ் – 7

அப்ப்..பா… ஸ்கேனுக்கு ஆறாயிரமா.. ரொம்ப ஜாஸ்தி…


கூடுதல் கமெண்ட்ஸ் – 8

நேத்துதானெ முப்பத்திநாலாயிரம் கட்டினே.. இன்னிக்கு திடீர்னு முப்பத்தெட்டு கட்ட சொன்னா எப்பிடி.. ரொம்ப…



கூடுதல் கமெண்ட்ஸ் – 9

இனிமேல் நீங்க ஸ்கூட்டரைத் தொடக்கூடாது.. அந்த ஸ்கூட்டரை மொதல்லே நான் எடுத்துகிட்டுப் போயி வீட்டுலே வெச்சுக்கப் போறேன்.. இனிமே ஊபர்.. ஓலா.. தான் உங்களுக்கு வாகனம்.. என்ன.. புரிஞ்சிதா…?


கூடுதல் கமெண்ட்ஸ் – 10

காசு போனா போகுது.. குணமாயி பழைய மாதிரி வீடு வந்து சேந்தா சரி..



இப்படியாக ஆஸ்பத்திரியில் நான்கு நாட்கள் கழிந்தது. டிஸ்சார்ஜ் ஆகி ஐந்தாம் நாள் வீடு வந்து சேர்ந்தோம். மனைவிக்கு படுக்கை தயார் செய்து கொண்டிருந்தேன்.



தொலைபேசி ஒலித்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து என் மிக நெருங்கிய ஆத்ம நண்பன் கண்ணன் பேசினான்:


இப்பொதாண்டா விஷயம் கேள்விப்பட்டேன்…


 என்னாச்சு?!?!










குறிப்பு:

ஆயிரம் சொன்னாலும் உறவுகளின் நட்புகளின் உண்மையான அன்பும் அக்கறையும் கவலையும் தான் ஒரு நோயாளி விரைவில் குணமடைவதற்கான முதல் மருந்து!


நன்றி!

(சம்பவத்திற்கு முன் பார்த்தறியா) திரு / திருமதி வெங்கடேஷ் தம்பதிகள் (வெங்கிட்டாபுரம், கோவை). மற்றும் பத்துப் பதினைந்து மேன்மைமிகு பொது ஜனங்கள்!






Rate this content
Log in

Similar tamil story from Tragedy