DEENADAYALAN N

Tragedy

4.8  

DEENADAYALAN N

Tragedy

தாயே யசோதா உந்தன்…

தாயே யசோதா உந்தன்…

4 mins
675
என் தந்தை இறந்த போது நான் கோவை ஒப்பணக்கார வீதி ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு அக்கா மற்றும் நான்கு அண்ணன்கள். எங்களோடு அம்மா!


அக்காவுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் இருந்தார்.


நம்புவீர்களோ மாட்டிர்களோ! என் அப்பா இறக்கும் வரை அண்ணன்கள் யாரும் வேலைக்குப் போனதில்லை. நாடகம், இசை, கலை ஆர்வத்தில் மூழ்கி இருந்தனர். அதன் பின் ஒவ்வொருவரும் ஒரு வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். நான்காவது அண்ணன் படிப்பில் ஆர்வமில்லாததால் வாடகை ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார்.


இந்நிலையில், நான் ஐந்தாம் வகுப்பில் நுழைந்த சமயம் என் பெரிய அண்ணனுக்கு திருமணம் ஆனது! எங்கள் வீட்டின் முதல் மருமகளாக எங்கள் அண்ணியார் – யசோதா – காலடி எடுத்து வைத்தார்.


வீட்டின் முழுப் பொறுப்பும் அண்ணியாரிடம் வந்து சேர்ந்தது!


உடனே, ஏதோ நாங்கள் பெரிய பணக்காரப் பரம்பரை போலவும், கஜானாவின் சாவியை அவரிடம் கொடுத்து விட்டது போலவும், ஆள், அம்பு, சேனை, நிலபுலன், தொழிற்சாலைகள், மில்கள் என எல்லா பொறுப்புகளையும் அவர் பொறுப்பில் விட்டு விட்டது போலவும் கற்பனை செய்து கொண்டு விட்டீர்களோ! மன்னிக்கவும்!


எளிமையாகச் சொன்னால் எங்கள் கூட்டுக் குடும்ப (அப்போது ஏழு பேர்!) மொத்த சமையல் பொறுப்பும் அவரிடம் வந்து சேர்ந்தது.

                         சே… அவ்வளவுதானா..!


அதாவது காலை டிபன், மதிய உணவு, மாலை காபி, இரவு உணவு (டிபன் / சாப்பாடு) தயார் செய்யும் சிம்பிள்(!) வேலைதான்!

                                ஐயோ சாமி…..?


அத்தோடு பத்துப் பாத்திரங்களை துலக்கும் பொறுப்பும்!.

  ஹூம்.. என்ன!!!


அத்தோடு துணிமணிகளை துவைத்து காயப்போடும் வேலையும் அவருக்கு ‘போனஸ்’ஸாக வந்து சேர்ந்தது. (என்னது?! வாஷிங் மெஷினா!! அந்த நாட்களில் அப்படியெல்லாம் ஒன்று இல்லவே இல்லை. மேலும் வைட்டமின் ‘ப’ வும் இருக்கவில்லை!)

                           அப்பாடா முடிந்ததா..!


‘வெய்ட்.. வெய்ட்..! வாரத்தில் ஓரிரு நாட்கள் இட்லிக்கு மாவாட்ட வேண்டும்! (‘அதற்காவது க்ரைண்டர்…? - ‘க்ரைண்டரா!! மூச்.. அப்படி ஒன்று இருக்கவும் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் அதை வாங்கும் அளவு பொருளாதாரமும் இல்லை!)


                 இன்னும் ஏதாவது இருக்கிறதா!


அத்தோடு அவர் பெற்றுக் கொண்ட குழந்தைகளின் பராமரிப்பு! (எண்ணிக்கை ஆறு!)

                                 - ?!?!?!?!?!


அத்தோடு அவர் பெறாத குழந்தையாகிய என் பராமரிப்பு !

                                  - !!!!!!!!


இதில் என் தாயார், காய்கறி வாங்க கடைகளுக்கு செல்வது, துவைத்த துணிமணிகளை மடித்து வைப்பது போன்ற, அவரால் முடிந்த சில எளிய உதவிகளை அண்ணியாருக்கு செய்வார்.
நான் பெரியவன் ஆன பிறகு அவர் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட விதங்களைப் பற்றி இப்படி சொல்லுவார்கள் –
-   யசோதா எங்கே!

-   இப்பொதான் வெள்ளை ரவை உப்புமா செய்து எல்லோருக்கும் கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டு விட்டு, ‘டெலிவரி’க்கு

ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார் (முதல் குழந்தை)-   யசோதா எங்கே!

-   இப்பொதான் மாவாட்டி உப்பு போட்டு கலக்கி வைத்து விட்டு மருத்துவ மனைக்கு ‘டெலிவரி’க்குப் போயிருக்கிறார். நாளை மறுநாள்

வந்து விடுவார். (அடுத்த குழந்தை)


-   யசோதா எங்கே!

-   இப்பொதான்…..


ஆம்! அவரது ‘டெலிவரி’ முழுவதும் இப்படித்தான். ஆறும் ‘நார்மல்’ டெலிவரி!சரி இது இருக்கட்டும்! அவர் பற்றிய மற்ற விவரங்களைத் தொடருவோம்!


‘சாப்பா…டு…’ - நான்

‘கொஞ்சம் பொறுப்பா.. கை வேலையா இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் பொறுத்து சாப்பாடு போடறேன்’ என்று அம்மா கூட சொன்னதுண்டு.


ஆனால் என் அண்ணி ஒரு நாளும் எனக்கு அப்படி சொன்னதில்லை!


(அண்ணியின் வாய்ஸ்: அய்யோ.. அவன் பசி தாங்க மாட்டான்.. மொதல்லே அவனுக்கு சாப்பாடு போட்டுட்டு வந்துடறேன்)‘அந்த காக்கி ட்ராயர் அழுக்கா இருக்கு.. நாளைக்கு ஸ்கூலுக்கு அது வேணும்’


அடுத்த நாள் அந்த ட்ராயர் துவைத்து காயப்போடப்பட்டு தயாராக இருக்கும்.


(அண்ணியின் வாய்ஸ்: அய்யோ.. இல்லேன்னா அவன் பயங்கரமா கத்துவான்..’)
முட்டை உள்பட அசைவ சாப்பாடு எனக்கு அறவே ஆகாது. எப்போது அசைவம் செய்தாலும், அசைவப் பொருளை கலக்கும் முன், எனக்கென்று தனியாக குழம்பு, க்ரேவி, சைவப் பொரியல் என எடுத்து வைக்க ஒரு நாளும் தவறியதில்லை!


(அண்ணியின் வாய்ஸ்: ‘அசைவம் கலந்துடாமெ ஜாக்கிரதையா தனியாதான் அவனுக்கு செய்யணும்!’)
காலையில், டிபனை எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு, என் அண்ணி, என் அம்மா சில சமயம் என் அக்கா மூவரும், கடைசியாக உட்கார்ந்து, சுமார் பத்தரை மணி அளவில் – ஸ்பெஷலாக பூண்டு-வரமிளகாய்-உப்பு சட்னி அரைத்து அதை தேங்காய் எண்ணையில் குளிப்பாட்டி மூழ்கடித்து, குண்டு குண்டான செண்டு செண்டான மல்லிப்பூ இட்லிகளை அந்த எண்ணை-மிளகாய்க் குளத்தில் தோய்த்து தோய்த்து, லேசாக பிசைந்து பிசைந்து, மெலிதான ஒரு அழுத்தத்தைக் கொடுத்து, நாக்கை சற்றே வெளியே நீட்டி, அதன் மேல் அந்த விள்ளலை வைத்து, மேல் அன்னத்தால் ஒரு அமுக்கு அமுக்கி, உள்ளே தள்ளும்போது உருவாகும் பாருங்கள் ஒரு ருசி...


(“பாவம் தேவர்கள்! இது இருக்கும் போது, ஏன் தேவாம்ருதத்தின் சுவைதான் ஆகச்சிறந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே” என்று நினைக்கத் தோன்றும் வகையில்..)


..ப்ப்…ப்ப்ப்…பா..!


நான் ஏற்கனவே டிபனை முடித்திருந்தாலும், என் அண்ணியார் அந்த ‘காம்பினேஷ’னுக்காகவே ஓரிரு இட்லிகளை என்னை அழைத்துக் கொடுப்பார் பாருங்கள்….!


(அவனுக்கு இது ரொம்பப் பிடிக்கும்!’)கல்லூரி படிப்பு முடித்து, முதன் முதலில் நான் ஜி.டி.நாயுடு கம்பெனிக்கு வேலைக்குப் போன நாட்களில் பன்னிரண்டு முதல் ஒரு மணி வரை உணவு இடைவேளை! சொந்த சைக்கிள் கிடையாது! ஒரு (ஓட்டை) வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு, வேகு வேகு என்று அவசர அவசரமாக மதிய உணவைச் சாப்பிட வீட்டிற்கு வருவேன். எங்கள் வீட்டில் அவ்வளவு பேருக்கும் உணவு தயார் செய்ய குறைந்தது மதியம் இரண்டு மணியாவது ஆகும். (ஏழு பேருடன் என் அண்ணியாரின் குழந்தைகளையும் சேர்த்து – திருமணமான ஓரிரு அண்ணன்களைக் கழித்து, பத்து பேர்) ஆனால் என் அண்ணியார், எனக்காகவே ஏதோ ஒரு பொரியல், ஒரு சாம்பார் அல்லது ரசம் என்று தயாராக வைத்திருப்பார். எனக்கு இருக்கும் ‘டென்ஷனி’ல் அவர் மீது ஏதாவது குறையைச் சொல்லி சத்தம் போடுவேன். ஆனால் மகராசி.. ஒரு நாளாவது அதற்கு கோபித்துக் கொண்டிருக்க வேண்டுமே. சிரித்துக் கொண்டே ‘ ஐ தீனன் கோபப்படுகிறான்’ என்று ஒரு கமெண்ட் சொல்லி, ‘கவலைப் படாதே நாளைக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறேன்’ என்று சமாதானம் சொல்லி, ‘ஓட்டை சைக்கிளில் பார்த்துப் போ.. பத்திரம்..’ என்று அக்கறையுடன் வழி அனுப்பி வைப்பார் பாருங்கள்! அப்படி ஒரு தாய் நிகர் அண்ணி யாருக்கு கிடைப்பார்?பொதுவாக, தன் குழந்தையையும் இன்னொரு குழந்தையையும், கவனித்துக் கொள்ளும் சூழல் உருவாகும் போது ஒரு பெண் அல்லது தாய் அவரையும் அறியாமல் சில நேரங்களில் தன் குழந்தைக்கு சிறப்பு செய்து விடுவது இயல்பு. ஆனால் சுமார் பதிமூன்று வருடம் கூட்டுக் குடும்பத்தில் இருந்த காலத்தில் ஒரு நாளாவது.. ஒரு முறையாவது.. ஒரு சந்தர்ப்பத்திலாவது.. என் அண்ணியார் என்னைத் தவிர்த்து அவருடைய எந்தக் குழந்தைக்காவது ஸ்பெஷலாக எதுவும் ஒரு போதும் செய்ததில்லை! இது என் மனசாட்சியின் மனசாட்சி அறிந்த உண்மை! ஒரு முறை கூட அவரது குழந்தைகளை என்னை விட உயர்வாக சொன்னதில்லை. இன்னும் சொல்லப் போனால் என் நல்ல பழக்கங்களைத்தான் அவரது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக சொல்லுவார்.


இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். என்னை / குடும்பத்தை கவனித்துக் கொண்டதில் என் மூன்றாவது அண்ணிக்கும் பெரும் பங்கு உண்டு என்றாலும், இரண்டு-மூன்று வருடங்கள் கழித்து – அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்த போது, வசிப்பிட வசதித் தேவை காரணமாக அவர்கள் தனிக் குடும்பம் அமைத்துக் கொள்ள வேண்டி வந்தது. 


எனவே நான் (வெளியூர் வேலைக்கு செல்லும் வரை - சுமார் பதிமூன்று வருடங்கள்) எங்கள் பெரிய அண்ணியின் பராமரிப்பிலேயே இருக்க நேர்ந்தது.


எந்த பாகுபாடும் இன்றி, எந்த வித வித்தியாசமும் இல்லாமல் தன் குழந்தைகளுக்கு இணையாக – ஒரு படி மேலாக - என் தாயினும் சாலப் பரிந்து என்னை கவனித்துக் கொண்ட என் அண்ணி எனும் தாயார் உலகறிந்த பெண்மணியாக இல்லாதிருக்கலாம் – ஆனால் இந்த உலகம் அறிய வேண்டிய சத்தியமான ஒரு பெண்மணி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


அந்த அப்பாவித் தன்மையும், பொறுமையும், அக்கறையும், கள்ளம் கபடற்ற பாசமும் அன்பும் நிறைந்த அந்த தெய்வம் இறைவனடி சேர்ந்து பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன!

  
Rate this content
Log in

Similar tamil story from Tragedy