DEENADAYALAN N

Tragedy Inspirational

3.9  

DEENADAYALAN N

Tragedy Inspirational

பயணங்கள் பலவிதம்!

பயணங்கள் பலவிதம்!

2 mins
754





பொருளாதார கெடுபிடிகள் நிறைந்த காலம் அது. இருந்தாலும் செல்ல விரும்பிய இடங்கள் நிறைய இருந்தன. மலம்புழா டேம், கல்லாறு, ஊட்டி, ஆழியாறு டேம், டாப் ஸ்லிப்! இவை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த இடங்கள். குற்றாலம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, சென்னை! இவை தொலைதூர இடங்கள்.



பசு மரத்தாணி போல் என் மனதில் பதிந்திருப்பது பள்ளி இறுதி வகுப்பில் சென்ற சுற்றுலாதான். நான் விரும்பிய முக்கிய இடங்கள் அதில் அடங்கி இருந்தன. கொச்சின், திருவனந்தபுரம், கன்னியா குமரி, குற்றாலம், தேக்கடி என மனம் நிறைந்த பயணம் அது. தெய்வசீலன் சாரின் பொறுப்பில், சுற்றுலா பேருந்தில், ஐந்து நாள் பயணம், வெறும் நூறு ரூபாய் கட்டணம், வகுப்புத் தோழர்களுடன் ஆங்காங்கே அந்தந்த ஊர் பள்ளிகளில் தங்கிச் சென்றோம்..


திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி திருக் கோயிலில் வேட்டி கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் பத்மனாபசுவாமியின் திவ்ய தரிசனம் பார்த்தது! இரவு உணவை முடித்து, ஆசிரியரோடு மாணவர்களும் மொத்தமாக (சுமார் ஐம்பது) டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு, ஒரு பிரபலமான திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ திரைப்படம் இரவுக் காட்சி பார்த்தது! இவையெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்!


கன்னியாகுமரியில் சூரியோதயம். குமரி அம்மன் தரிசனம், விவேகனந்தர் பாறை எல்லாமே மனதில் பதிந்திருக்கிறது!


இன்னொரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்த இடம் குற்றாலம். அங்கு சென்ற போது எனக்கு காய்ச்சல். அருவிக் குளியலுக்கு வரவில்லை என்று தெய்வசீலன் சாரிடம் சொன்னேன். அவரோ, ‘ஏம்பா.. நீ குளிக்கலேன்னாலும் பரவாயில்லே. வந்து அருவி கொட்டும் அழகையாவது பார்’ என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார். எல்லோரும் உடம்பு முழுக்க எண்ணை தேய்த்துக் கொண்டு கொட்டும் அருவிக்குள் நுழைய தயாராய் இருந்தனர். நான் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயம் பார்த்து ஆசிரியர் ஒரு சமிக்‌ஷை செய்ய இரண்டு மாணவர்கள் பாய்ந்து என்னை பிடித்துக் கொள்ள மற்றொரு மாணவர் தலை முகம் கைகால் என எல்லா இடத்திலும் எண்ணையைப் பூசி விட்டார். இந்த ‘செல்ல’ச் சதியால் நானும் அவர்களோடு ஐக்கியமாகி அந்த பிரம்மாண்ட நீர் வீழ்ச்சியின் கீழ் நின்று அனுபவித்த அந்த குளியல் சுகத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. 


ஆனால் வெகு ஆச்சரியமான விஷயம். குளியலுக்குப் பிறகு காய்ச்சல் என்கிற சுவடுகூட இல்லாமல் மிக மிக புத்துணர்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் சூடான இட்லி தோசை சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம். (மிக்க நன்றி ஜெயசீலன் சார்)


சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் விருப்பத்துடன் நான் மேற்கொண்ட சென்னைப் பயணம் ஒரு சோகப் பயணமாக அமைந்தது.. என் அப்பா முக்கிய வேலையாக சென்னை செல்ல, அவர் உடல் நலம் கருதி என் அம்மாவும் உடன் செல்ல, நானும் அவர்களுடன் தொற்றிக் கொண்டேன். சென்னையில் என் மாமாவின் மகனோடு கடற்கரை, சினிமா, எக்மோர் அருங்காட்சியகம் என்று பல இடங்களுக்கு என்னை அனுப்பி வைத்தனர். ஒரு வாரம் கழித்து ரயிலில் (அப்போதைய இரண்டாம் வகுப்புப் பெட்டியில்) கோவை திரும்பினோம். திருப்பூர் தாண்டும் சமயம் என் அப்பாவின் உடல்நிலை சற்று மோசமாகி விட்டது. கோவை அடைந்த போது அவர் இறந்து விட்டார் என்று அறிந்தோம்.


ஐம்பது வருடத்திற்கு முந்தைய அந்த என் சென்னைப் பயணம் ஒரு சோகப் பயணமாய் அமைந்தது.







Rate this content
Log in

Similar tamil story from Tragedy