ஞாயம்தானா? – எட்டு
ஞாயம்தானா? – எட்டு


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
குறுஞ்செய்திகள் மூலமாகவும், மின் அஞ்சல்கள் மூலமாகவும், குரல் வழியாகவும், பொருளாதார உதவிகள் கேட்டு நாள் தோறும் பல வேண்டுதல்கள் சமூக ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.
நோயாளிகள், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள் என பல வேண்டுதல்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பலநூறு கிலோமீட்டர் தொலைவு முகவரிகளில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்படுவதால், அவற்றின் நம்பகத் தன்மையை ஐயம் திரிபற அறிய முடிவதில்லை..
அதிலும் குறிப்பாக மின் அஞ்சல்களில் வரும் வேண்டுகோள்கள் புகைப் படங்களோடு வருகின்றன. மருத்துவ மனை சூழலில் - ஒரு குழந்தை அல்லது ஒரு பெண்மணி அல்லது ஒரு பதின்வயது பெண்/ஆண் நோயாளியின் பரிதாபகரமான புகைப்படம் வெளியிடப்படுகிறது. அவரோடு அவரது (தாய், தந்தை போன்ற) உறவினர் படமும் இடம் பெற்றிருக்கும். . அத்தோடு அவர்களின் கையறு நிலைக்கு ஒரு கொடிய நோயைக் காரணமாக குறிப்பிட்டிருப்பார்கள். அவர்களின் இயலா நிலைக்கு அவர்களின் மோசமான பொருளாதார நிலையையும் குறிப்பிட்டு இருப்பார்கள்.
உருக்கமான சொற்களில் பொருளாதார உதவி கேட்டு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டிருக்கும். சில / பல லட்சங்கள் இருந்தால்தான் அவர்கள் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். பெரும்பாலான படங்கள் நம் மனதை நெருடுவதும்; பாடாய்ப் படுத்துவதும் உண்மை.
நடுத்தர வர்க்கத்தவருள் சிலர் தம்மால் முடிந்த ஒரு தொகையை இது போன்ற உதவிகளுக்கு ஒதுக்குவார்கள் துவக்க காலங்களில் தம்மால் முடிந்த அந்தத் தொகையை ஓரிரு வேண்டுதல்களுக்கு மனம் கனிந்து அனுப்பி வைத்திருப்பார்கள்.
ஆனால் தற்போது, நாளொரு விளம்பரம் பொழுதொரு வேண்டுகோள் என மிக அதிகமாக இவை வெளி வருகின்றன. இதனால் உதவ முயல்பவர்களுக்கு ஒரு தயக்கமும் இவை அனைத்தும் உண்மைதானா என்கிற சந்தேகமும் எழுகிறது. நம் உழைப்பின் வேர்வைத் துளிகள் படிந்திருக்கிற அந்த உதவிகள் உண்மையான தேவை உள்ளோருக்குதான் போய்ச் சேருகிறதா என்கிற ஆதங்கமும் ஏற்படுகிறது.
ஒரு முறை ஒரு பிரபலமான நிறுவன வேண்டுகோளுக்கு உதவி செய்த ஒரிரு நாட்களுக்கு பிறகு அந்த நிறுவனம் பற்றிய பின்னூட்டக் கருத்துக்கள் படிக்கும் வாய்ப்பு ஏதேச்சையாக ஏற்பட்டது. அதில் சிலர், பல குறைகளை அந்த நிறுவனம் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள்.
அதன்பின் உண்மைத் தன்மையை அறிந்து தான் உதவ வேண்டும் என்று மனதில் படுகிறது. ஆனால் உண்மைத் தன்மையை அறிவதற்கான மூலத் தகவல்கள் எங்கிருந்து எப்படி சேகரிப்பது என்று தெரியவில்லை. அதை ஒரு வேலையாக எடுத்து செய்வதற்கும் நடுத்தர வர்க்கத்திற்கு, வாழும் சூழலும் கால நேரமும் அமைவதில்லை. சரி.. அடுத்த வாய்ப்பில் இதையும் சேர்த்து செய்து விடுவோம் என்று உதவுவதை தள்ளிப் போட்டு விடுகின்றனர்..
கோடான கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இந்த மாதிரி உதவி தேவைப் படுபவர்கள் நிச்சயமாக லட்சக் கணக்கில் இருப்பார்கள் என்பது உறுதி. கொடுப்பவர்களும் தங்களால் இயன்ற சிறிய அளவில் கொடுத்தாலும், ‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதற்கேற்ப ஏழை எளியவர்களுக்கு அது ஒரு பேருதவியாய் சென்று சேரும்.
இப்போது நம் கேள்வி என்னவெனில் உண்மைத் தன்மையை ஆய்ந்து அறிய இயலாதவர்கள்:
சமூக ஊடக வலை தளங்களில் வரும் மேற்கண்ட வகை வேண்டுதல்களை ஏற்று தம்மால் இயன்றதை அனுப்பி வைக்கலாமா?
அல்லது
உள்ளூரிலேயே ஏதோ ஓரிரு நற்காரியங்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்து விட்டுப் போகலாமா?
உங்கள் கருத்து என்னவோ?