DEENADAYALAN NARAYANASWAMY

Tragedy Inspirational

4.6  

DEENADAYALAN NARAYANASWAMY

Tragedy Inspirational

மாற்றம் ஓர் ஏமாற்றம்

மாற்றம் ஓர் ஏமாற்றம்

7 mins
849




'அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

................................................. '


பின் மதிய நேரத்தில் நினைவுக்கும் நித்திரைக்கும் இடையில் ஆழ்ந்திருந்த அகிலாவிற்கு, அருகிலிருந்த துவக்கப் பள்ளியில் இருந்து வந்த இந்தப் பாட்டு சுகமான தாலாட்டாய் இருந்தது.


பச்சைப் பசேல் என்று இயற்கை அன்னையின் தாராளமயத்தில் மூழ்கி இருந்தது அந்த மலைசூழ் முருகப்பாளையம் கிராமம். அந்த கிராமத்தின் ஒரே ஒரு தேசிய வங்கியின் மேலாளர் ராமனாதன் மாற்றலாகி மனைவி அகிலாவுடன் வந்து ஒரு வருடம் ஆகிறது. வீட்டின் அருகிலேயே அரசு துவக்கப் பள்ளி இருந்தது. ஆரம்பத்தில் தொந்தரவாகத் தெரிந்த பள்ளியின் இரைச்சல் நாளாக நாளாக சுகமாகிப் போனது. கணவர் வங்கியிலிருந்து வரும் வரை தனிமையை உணராத வண்ணம் குழந்தைகளின் செயல்களும் சப்தங்களும் அகிலாவிற்கு ஆனந்தம் தந்தன.


‘பேங்கு மேனேஜரு’ என்கிற ஹோதாவில் ராமனாதனுக்கு எங்கே போனாலும் தனி மரியாதை. கறக்க கறக்க பசும் பால், பறிக்க பறிக்க வந்து சேரும் காய்கறிகள், எப்பொழுது போனாலும் இரண்டு முறை சுடு நீரில் கழுவப்பட்ட டம்ளரில் புத்தம் புது தூளில் தேனீர் தரும் டீக்கடை, எல்லாவற்றிற்கும் வற்புறுத்தி உரிய காசு தந்து விடும் அவருடைய நேர்மையினால் வந்த மரியாதை.


அகிலாவும் ‘பேங்க்கம்மா’ ஆகிப் போனாள். இரண்டே பேர் உள்ள வீட்டில் இருக்கும் ஓரிரு வேலைகளையும் உரிமையுடன் வந்து செய்து கொடுக்கும் அக்கம் பக்கத்துப் பெண்கள். அவ்வப்போது வந்து ‘டவுனு கதை’களை கேட்கும் அவர்களது ஆர்வம். வீட்டு ஆண்களால் எழும் சின்னச் சின்ன பிரச்சினைகளைச் சொல்லி – ‘கொஞ்சம் ஐயாகிட்ட சொல்லி புத்தி சொல்ல சொல்லுங்கம்மா’ – என்று கெஞ்சும் அவர்களின் வேண்டுகோள்.


வ்வளவு இருந்தும் அகிலாவிற்கு அவ்வப்போது ஒரு சோகம் எழும். அது – கோயமுத்தூர் ஜி சி டி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் கண்ணனைப் பிரிந்திருப்பதால் வருவது. பள்ளிக் குழந்தைகளின் குரல் ஒலிகளைக் கேட்கும்போது அவளுக்கு அடிக்கடி தன் மகனின் நினைவு வந்து விடும்.


கோயமுத்தூர் அவ்வளவு ஒன்றும் தொலைவு இல்லை. நூறு கிலோமீட்டர்தான். கண்ணனும் ஆரம்ப நாட்களில் வாரம் தவறாமல் அம்மாவின் மடியில் வந்து விழுந்து விடுவான்.


‘உன்னை விட்டு விட்டு இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா! அப்பா வேணுமின்னா இங்கே இருக்கட்டும். நீ வந்தியன்னா கோயமுத்தூர் சாய்பாபா காலனியிலேயே ஒரு வீடு எடுத்து நாம் தங்கிக்கலாம்’ என்று அழைப்பான். ஏதேதோ சொல்லி மகனை சமாதானம் செய்து அனுப்புவாள். என்றாலும் அவளுக்கும் நெஞ்சில் ஏக்கம் இருக்கும். இப்படியே சில மாதங்கள் ஓடி விட்டன. இப்போது கண்ணன் ஓரளவிற்கு மாதம் இருமுறை வரும் அளவிற்கு ஆகி விட்ட்து.


ன் அகிலா.. சாய்ந்தரமா தேங்காய் பூர்ணம் வெச்சி வெல்லப் போலி செய்யேன், சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..’ – என்று ஒரு நாள் ராமனாதன் ஆசையாய்க் கேட்டார்.


‘இப்பொ வேண்டாங்க.. பையன் வருவானில்ல.. அப்பொ செஞ்சிக்கலாம்’ என்று கூறி விட்டாள்.


மற்றொரு நாள் ‘கலக்கு தோசைக்கு தொட்டுக் கொள்ள பூண்டு-மிளகாய் சட்னி செய்யேன்’ என்றார்.


‘கண்ணனுக்குப் புடிச்ச ஐட்டம் ஆச்சே.. நாம் மட்டும் எப்பிடிங்க செஞ்சு சாப்பிடறது..’ – மறுத்து விட்டாள்.


ராமனாதனும் வேறு வழி இல்லாமல் அதற்கு ஒத்துப் போய் விடுவார். ரொம்பவும் நாக்கு தொந்தரவு செய்தால் பஜார் தெருவில் இருக்கும் ‘விசுவநாத அய்யர் மிட்டாய் கடை’யை நாடி விடுவார். அங்கே பாதாம் அல்வாவும் அப்பள பஜ்ஜியும் மிகவும் பிரசித்தம். ‘வால்பாறை’ செல்லும் எல்லா வண்டிகளும் அங்கே நின்று விசுவநாத அய்யர் கடையில் ஒரு கை பார்த்து விட்டுத்தான் போவார்கள்.


ஒருமுறை அய்யர் கடையில் ராமனாதனைப் பார்த்ததாக யாரோ சொல்லிவிட, ‘ஏங்க, நம்ம பையனை உட்டுட்டு இப்பிடி வாய்க்கு ருசியா சாப்பிட எப்பிடீங்க உங்களுக்கு மனசு வருது’ என்று கேட்டு விட்டாள்.


குறைந்த படிப்பானாலும் அவளின் குறையாத பாசத்தை ராமனாதன் நன்கு அறிவார்.


ஒருமுறை கண்ணனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் ரவிக்கையின் கொக்கி அவன் இடது கண்ணில் மாட்டிக் கொள்ள, அடித்துப் பிடித்து அவசர அவசரமாய் மருத்துவ மனைக்கு செல்ல – ‘ஒன்றும் பயப்படத் தேவையில்லை’ – என்று டாக்டர் சொன்ன பிறகுதான் அவளுக்கே உயிரே வந்தது.


மற்றொரு முறை மருதமலை கோயிலுக்கு போயிருந்த போது, நான்கு படிகள் உருண்டு பத்தடி பள்ளத்தில் விழுந்தும், ஒரு கீரல் கூட இல்லாமல் அந்த மருதமலை முருகன் அவனைக் காப்பாற்றிய போது அங்கப் பிரதட்சணம் செய்து கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.


இன்னும் ஒரு முறை பத்து மாதக் குழந்தையாய் கண்ணன் காய்ச்சலில் அவதிப்பட்ட போது, தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்காமல் அகிலா பார்த்துக் கொள்ள – அதைப் பார்த்த அகிலாவின் தந்தை அவள் உடல் நிலையைப் பற்றிக் கவலைப் பட – ‘உங்களுக்கு எப்படி உங்க மகள் உடல் நிலை பெருசோ, அப்படி என் மகன் உடல் நிலை எனக்குப் பெருசு’ என்று ரொம்ப சீரியசாய் சொல்லி விட்டாள்.


இப்படி அகிலாவின் பாச நினைவுகளில் ஆழ்ந்த வண்ணம் அப்படியே தூங்கிப் போனார் ராமனாதன்.


ன்று கண்ணன் வருகிறான். வீடு அல்லோலகல்லோலப் பட்டது. திரட்டுப் பால் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனாள் ஒரு பெண். கண்ணனுக்குப் பிடித்த வாழைப்பூ வடை செய்வதற்காக வாழைப்பூ வந்தது. அரிசி முருக்கும் அதிரசமும் தயாராகி டின்னில் அடைக்கப்பட்டு கண்ணனின் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தன.


‘எதுக்கு அகிலா இவ்வளவு முருக்கும் அதிரசமும்?’ – ராமனாதன்.


‘இருக்கட்டுங்க. இந்த தடவை கண்ணன் பத்து நாள் லீவுல வர்றான். நிறைய நொறுக்குத் தீனி கேட்பான்’ – அகிலா


படிப்பதற்காக செய்தித்தாளை எடுக்கப் போனார் ராமனாதன்.


‘என்ன நீங்க? இப்பொ போய் பேப்பர் படிச்சுகிட்டு.. உடனே ஸ்கூட்டர் எடுத்துட்டு பஸ் ஸ்டேண்டுக்கு கெளம்புங்க. கண்ணனை கூட்டிட்டு வந்திடுங்க’


‘அட பஸ் வர்றதுக்கு இன்னும் நேரம் இருக்கு..’


‘பரவாயில்லே கெளம்புங்க.. ஒரு வேளை பஸ் சீக்கிரம் வந்துட்டா..’


‘அட.. இங்க இருக்கிற பஸ் ஸ்டேண்டிலிருந்து அவனே வந்துட மாட்டானா..’


‘நீங்க முதல்லே கெளம்புங்க..’


சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார் ராமனாதன்.


ண்ணா.. ‘ என்று ஆசையாய் கன்னத்தைத் தடவி நெட்டி முறித்து மகனை வரவேற்றாள் அகிலா.


எப்போதும் அம்மாவைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் கண்ணன் ‘ஹை அம்மா’ என்று இரட்டைச் சொற்களோடு நிறுத்திக் கொண்டது அகிலாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.


குளித்து விட்டு வந்த மகனுக்கு ஆசை ஆசையாய் சூடான தாளித்த கொழுக்கட்டைகளை பரிமாறினாள். உடன் சாப்பிட்ட ராமனாதன் ‘ கண்ணா நீ வந்தாதாண்டா எனக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு..’ என்று நகைச் சுவையாய்க் கூறிச் சிரித்தார்.


‘அப்படியா அப்பா’ என்று ஒப்புக்கு கண்ணன் சொன்னானே தவிர அந்த நகைச்சுவையில் அப்படி ஒன்றும் பெரிதாக ஈடுபாடு காட்டியதாய்த் தெரியவில்லை.


அவன் ரசித்து ருசித்து சாப்பிடும் பட்சணங்களையெல்லாம் வேண்டி வேண்டிஆகிலா கொடுத்தாலும், ‘இருக்கட்டும்மா..’ என்று ஆர்வமில்லாமல் சொல்லி விட்டது சற்று ஏமாற்றம்தான்.


வந்தால் ஒரு நிமிடம் கூட பிரியாமல் அம்மாவைச் சுற்றி சுற்றி வரும் கண்ணன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பறைக்குச் சென்று விட்டதும் ஆச்சரியந்தான்.


ரிரு நாட்கள் கழிந்த்து. கண்ணன் எப்போதும் போல் இல்லை என்று தோன்றியது.


‘வர்றியா கண்ணா.. கோட்டை கந்தன் கோயிலுக்குப் போயிட்டு வரலாம்..’ என்று அப்பா அழைத்த போதும் ‘இல்லப்பா.. நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க’ என்று சொல்லி விட்டான்.


‘உடம்பு கிடம்பு சரியில்லையா கண்ணா..’ என்று வாஞ்சையாய் அகிலா நெற்றியில் கை வைக்க ‘அதெல்லாம் இல்லம்மா.. நீங்க போயிட்டு வாங்க’ என்றான்.


சென்ற முறை இதே கோட்டை கந்தன் கோயிலுக்கு பாதை சரி இல்லாததால் ஒரு மாட்டு வண்டியில்தான் போனார்கள். அப்போது கண்ணன் எவ்வளவு உற்சாகமாக இருந்தான். வண்டிக்காரரை வண்டி ஓட்ட விடாமல் தானே வண்டியை ஓட்டி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு வந்தவன் இப்போது ஏன் வர மாட்டேன் என்கிறான்.


ன்று இரவு பதினோரு மணி இருக்கும். கண்ணனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ராமானாதனும் கவனிக்கத்தான் செய்தார். கண்ணனின் படிப்பறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்த்து. ஏதாவது பேசலாம் என்று ராமனாதன் அறைக்குள் நுழைந்தார். ஆனால் கண்ணன் தூங்கி விட்டிருந்தான். இரைந்து கிடந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து அடுக்கிய போது ஒரு புத்தகத்திலிருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.


புகைப்படத்தில் ஓர் இளம்பெண். கண்ணனுடன் படிப்பவளாக இருக்க வேண்டும். அந்த புகைப்பட்த்தோடு பென்சிலால் வரையப்பட்ட இன்னொரு படமும் இருந்த்து. அது கண்ணனைப் போலவே அச்சு அசலாக வரையப்பட்ட படம் – ‘காதலுடன் பிரியதர்சினி’ என்று கையொப்பத்துடன் இருந்தது.


அன்று இரவு வெகு நேரம் ராமனாதன் தூங்கவில்லை., திரும்பித் திரும்பிப் படுத்த அகிலாவும் தூங்கவில்லை.




டுத்த நாள் காலை ராமனாதன் வங்கிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.


‘அப்பா.. நான் சாய்ந்தரம் காலேஜிக்கு கெளம்பறேன்பா..’ என்றான் கண்ணன்.


அகிலாவிற்கு அதைக் கேட்டு அதிர்ச்சியாய் இருந்த்து.


‘என்ன கண்ணா.. இன்னும் மூன்று நாள் லீவு இருக்கிறதே.. ஏன் இன்னிக்கே கெளம்பறே..’ – கேட்டாள் அகிலா.


‘இல்லம்மா.. கொஞ்சம் பாடம் சம்மந்தப் பட்ட நோட்ஸ் தயார் செய்யணும். அதுக்கு காலேஜ் போயிட்டா வசதியா இருக்கும்.’ – கண்ணன்.


ன்று மாலை கண்ணனை கோயமுத்தூர் பஸ்ஸில் ஏற்றி விட்டு ராமனாதன் சோர்வாக வீடு திரும்பினார். அகிலாவும் மிகுந்த மன இறுக்கத்தில் இருந்தாள். இருவரும் ஒப்புக்கு சாப்பிட்டார்கள். வழக்கமான நேரத்துக்கு முன்னாலேயே படுத்துக் கொண்டார்கள்.


சற்று நேரத்தில் அகிலாவின் விசும்பல் ஒலி கேட்டது.


‘அகிலா. ‘ என்று ராமனாதன் குரல் கொடுத்தார்.


‘ஏங்க கண்ணன் இப்பிடி மாறிட்டான்..?’


‘இல்லம்மா.. ஏதோ படிப்பு சம்மந்தமா சீக்கிரமா.. போகணுமின்னு..’ இழுத்தார் ராமனாதன்.


‘இல்லீங்க. உங்களுக்குப் புரியாது. என்னை விட்டு ஒரு கனம் கூட அவன் பிரிய மாட்டாங்க. என் முந்தானையைப் புடிச்சிகிட்டே எப்பவும் சுத்தறவன்.

அப்பிடிப்பட்டவன் இன்னும் மூனு நாள் லீவு பாக்கி இருக்கறப்போ எப்படீங்க கெளம்பினான்? ஏங்க.. ஆசை ஆசையாய் அவனுக்காக எவ்வளவு செஞ்சி வெச்சிருந்தேன். எதையுமே அவன் சட்டை செய்யலீங்க. எப்பவுமே எனக்குப் பக்கத்துலே படுத்து தலைமுடியை கோதி விடச் சொல்லிதாங்க தூங்குவான். ஆனா இந்த தடவை பக்கத்திலேயே வரலீங்க’




‘சரி விடு..’


‘இல்லீங்க. அவன் ரொம்ப மாறிட்டான்..’ அகிலா தேம்பித் தேம்பி அழுதாள். கணவனின் நெஞ்சில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஆதரவாய் அவள் தலையை ராமனாதன் தடவிய போது இன்னும் வெடித்து வெடித்து அழுதாள். அவளின் சோகம் தொற்றிக் கொள்ள அவருடைய கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.


‘பாருங்க.. இந்த ஆம்பள பசங்களே இப்பிடிதாங்க.. பொம்பள குழந்தையா இருந்தா இப்பிடியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க.. நாம தப்பு பண்ணிட்டோங்க.. ஒரு பெண் குழந்தையை பெத்திருந்தா இப்பொ நமக்கு இவ்வளவு பெரிய ஏமாற்றம் இருக்காதுங்க..’ பேதைப் பெண்ணாய் அரற்றிக் கொண்டே இருந்தாள் அகிலா.


‘சரி.. சரி.. தூங்கு அகிலா..’


ராமனாதனுக்கு முந்தின நாள் இரவு நிகழ்வுகள் நெஞ்சில் பயணித்தன. காதல் என்பது தவறான அல்லது ஆச்சரியமான உணர்வு அல்ல. ஆனால் பெற்றோருடன் கொண்டிருக்கும் இயல்பான ஒரு உறவைக் கூட அது ஏன் இப்படி பாதிக்கிறது என்று யோசித்தார். அகிலா-கண்ணன் இடையே இருந்த அந்த தெய்வீகமான தாய்-மகன் உறவு இப்படி ஆட்டம் கண்டு போனதே என்று கலங்கினார். அகிலா போன்ற படிப்பறிவற்ற அப்பழுக்கற்ற தாய் இதை எப்படி தாங்கிக் கொள்வாள்! காதல் – உறவு - இயல்பு என்று தத்துவங்களெல்லாம் சொல்லி எப்படி அவள் மனத்தைத் தேற்ற முடியும். எந்த அளவிற்கு வாஞ்சையுடன் அகிலா இருந்தாளோ அதே அளவு வாஞ்சையுடன்தானே கண்ணனும் இருந்தான். அவன் ஏன் இப்படி மாறிப் போனான்!

 


இந்தப் பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள்தான் உண்டு. ஒன்று ‘உலகம் இப்படித்தான் ‘ என்று சொல்லி அகிலாவைத் தேற்ற வேண்டும். அல்லது வந்திருக்கும் புதிய காதல் உறவு, தாயுடனான உறவில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் – ஆனால் அதுவே அந்தத் தாய்க்கு கொடுக்கப்படும் பெரிய ஏமாற்றமாக இருக்கக் கூடாது என்பதை கண்ணனுக்கு உணர்த்த வேண்டும்.



மறுநாள் கண்ணனைப் பார்த்துப் பேச கல்லுரிக்கு செல்ல முடிவு செய்தார் ராமனாதன்!



                          



Rate this content
Log in

Similar tamil story from Tragedy