முடிவு
முடிவு
இதை உன்னிடம் சொல்லிவிட்டுப்போகத்தான்
இவ்வளவு தூரம் வந்தேன்:
இவ்வளவு வருத்தங்களை
என்னால் தாங்க முடியவில்லை
இவ்வளவு காயங்களை
எனக்கு சகிக்க முடியவில்லை
இதற்கெல்லாம் ஒரு முடிவு
இருந்தால் நல்லது
நீ என்னை ஒரு மலரைக்
கசக்குவதுபோலக்கூட அல்ல
தவறாக எழுதப்பட்ட ஒரு காகிதத்தை
கசக்குவதுபோல கசக்குகிறாய்
என்னால் ஒரு முறைகூட
இதையெல்லாம்
சொல்ல முடிந்ததே இல்லை
வழக்கம்போல
உன்னிடம்
ஒரு புதிய மலரை நீட்டினேன்
உனது ஆடை
மிகவும் நன்றாக இருக்கிறது
என்று சொன்னேன்
வழக்கம்போல
இருளில் தனியாக
நடந்து சென்றேன்
இதெல்லாம்
இனியும் இப்படித்தான்
இருக்கப்போகிறது
சந்தேகமே இல்லை
ஆயினும்
உன்னிடம்
என் நியாயத்தைக்கூறும் வாக்கியங்களை
இன்றிரவு முழுக்க
மறுபடி ஒத்திகைபார்த்துக்கொண்டிருப்பேன்