முகமூடி
முகமூடி


கொரோனா…
நீ ….. நீண்ட தூரம் பயணம் செய்து
களைத்து விடுவாய்!
பயணக் களைப்பில் இளைத்து விடுவாய்!
அஞ்ச வேண்டாம்! எம்மை மிஞ்சி
என்ன செய்திடுவாய்? என்றிருந்தோம்!
ஒரு சிறிய கண்ணுக்குத் தெரியாத உயிர்
கண்னுக்கு எட்டிய தூரம் வரை….
மக்கள் முகத்தில் ஓர் பதற்றம்!
தெருவெங்கும் நிசப்தமாய்….
வேலைகளை இழந்து…
அன்றாட அலுவல்களை மறந்து….
கனவனைக் களைப்பாற கட்டியணைக்காமல்…
மனைவியை மார்போடு சேர்த்து தழுவாமல்….
பெற்ற பிள்ளைகளை ஆரத் தழுவி
அள்ளி அணைக்க முடியாமல்
மனிதனைப் பார்த்து மனிதனே பயந்து….
உருமாறி…. பெயர் மாறி….
ஆண்டு தோறும் அச்சுறுத்த வருகிறாய்!
மனிதனின் ஆணவத்தை அழிக்க
இறைவன் (இயற்கை) அனுப்பிய தூதுவனா?
நேசத்தில் கட்டியணைத்தவர்கள் நீண்ட தூரம் ஓடுகின்றனர்!
கரங்களை நீட்டியதும் பாசக் கயிராய் காண்கின்றனர்!
தொட்டுப் பேசி ஆரத் தழுவி கலகலப்பாய் இருந்தவர்கள்…
தீண்டத் தகாதவர்களைப் போல் வெகு தூரத்தில் நிற்கின்றனர்!
இதழோடு இதழ் பதித்து முத்தம் சிந்தியவர்கள்…
முகமூடி அணிந்து மூச்சடக்கி கிடக்கிறார்கள்!
ஒன்று சேர்ந்த உறவுகளைத் தனிமைப் படுத்தினாய்!
சுவாசத்தில் கலந்து…. மூச்சை மூர்ச்சையாக்குகிறாய்!
மனித இனத்தின் மீது உனக்கென்ன கோபம்?
இன்னும் எத்த்னை உயிரைக் காவு வாங்க நினைக்கிறாய்?
உலகையே முகமூடிப் போட வைத்து…..
வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து….
போதும்…. போதும்….உன் சோதனைகள்!
வந்த வழியே சென்றுவிடு!