DEENADAYALAN N

Drama Crime Thriller

4  

DEENADAYALAN N

Drama Crime Thriller

ஜிஞ்சுமலை ரகசியம்!

ஜிஞ்சுமலை ரகசியம்!

6 mins
338


Suspense

ஜிஞ்சுமலை ரகசியம்!

(கோவை என். தீனதயாளன்)


ஜிஞ்சுமலை! பெரியதிரை, சின்னத்திரை துறைகளில் இருப்போருக்கும் சினிமா / சீரியல் ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான பெயர். கொலைக்காட்சியா, கொள்ளைக்காட்சியா, பேய்ப்படமா, த்ரில்லரா, சஸ்பென்ஸா, சண்டைக் காட்சியா, தற்கொலைக்காட்சியா - எல்லாவற்றிற்கும் பயன் படும் ஒரு வெளிப்புற படப்பிடிப்பு இடம். கொரோனா காலத்திற்கு முன்பு, மலை மேலேயும் கீழே அடிவாரங்களிலும் எப்போதும் படப்படிப்பு நடந்து கொண்டே இருக்கும். ஏறத்தாழ எல்லா பெரிய, சின்ன திரை நடிகர் நடிகைகள் இங்கு வந்து சென்றிருப்பார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இப்போது…


ஜிஞ்சுமலை அடிவாரத்தில் கூட்டம் கூடி இருந்தது. அந்த குறுகலான இடத்திலும் இரண்டு போலீஸ் ஜீப்புகளும், காவல் அதிகாரிகளின் இரண்டு கார்களும், ஒரு ஆம்புலன்சும் நெருக்கியடித்து நின்றன. அடிவார கிராமங்களிலிருந்து ஜனங்கள் எறும்புகளாய் மொய்த்தனர்.


‘யார்றா அது..?’ என்று ஒரு விதமான ஏற்ற இறக்கத்துடன் உள்ளூர் மொழி பாணியில் கேட்டுக்கொண்டு குப்பன் வந்து சேர்ந்தான். குப்பன் அந்த பகுதியில் எதற்கும் முன் வந்து பேசும் ஒரு தைரியசாலி.


‘ஏண்டா அதுக்குள்ளே இம்புட்டுக் கூட்டம் கூடீருச்சா.. போலீசு வண்டியெல்லாம் கூட வந்தாச்சா.. சைரன் வண்டி (ஆம்புலன்ஸ்) வேற வந்துருச்சி. ஏண்டா எம்புட்டு நேரம் ஆச்சுடா.. நான் இப்பொதன் ஒறங்கி எழுந்தாறன்’ - இறந்தவர் பற்றிக் கேட்காமல், மேலோட்ட விவரங்களை குப்பன் கேட்டதிலிருந்து இது போல விபத்துக்கள் அங்கே நடப்பது சகஜம் என்பது போல் இருந்தது.


‘பொஞ்சிறிக்கியா.. ஆங்கிறுக்கனா..? (பெண்ணா-ஆணா) என்று தன் பேச்சு பாஷையில் ஒரு கேள்வியை பொதுவாய் தூக்கி கூட்டத்துக்குள் போட்டான் குப்பன்.


‘பொஞ்சிறிக்கிதான் லோய்’ என்று ஒரு குரல் ‘கர கர’ வென்று வெளியில் வந்து விழுந்தது.


‘குப்பண்ணா.. செத்தது ஆரு தெரீமல்லா.. சினிமால ஆக்ட் குடுக்கற வுகளாமா..’ வாயைப் பிளந்து இன்னொருவன் கத்தினான்.


‘ஹாங்.. அதார்றா அது? எந்த பட்த்துலே ஆக்ட் குடுத்திருக்குதாம்..’ குப்பன்


‘அதான் குப்பா.. ‘புஜப்ரியா’ வாம்..!’


‘அட அதா.. அதான் நம்ம ‘டிக்ரிடோய்’ படத்துலே ‘ பட்டா பட்டா பாட்டா.. பத்து ரூவா நோட்டா’ ன்னு பாடிகிட்டு டம்முடும்முன்னு ஒரு ஆட்டம் போடுமே அந்த ஆக்ட்காரவுங்களா.’ கண்கள் விரிய குப்பன் கேட்கவும்,


‘அட முந்தாநா கூட, சூட்டிங் நடந்தாப்புலே இருந்தப்போ, இந்த அம்மா புட்டுகினு, நம்ம வூட்டு முன்னாடி, ப்ளசர்லே(கார்)லே இருந்த ஒரு ஆளோட பேசிகினு இருந்திச்சி குப்பு மச்சான்’ என்று குப்பனின் பொஞ்சாதியின் ஒன்று விட்ட சகோதரன் சொல்லிக் கொண்டிருந்த போது



‘குப்பண்ணே கூவுறாங்க..’ என்று அதிகாரிகள் அழைப்பதாக குப்பனுக்கு அழைப்பு வர சரியாக இருந்தது.


அடித்து பிடித்து கூட்டத்தை கிழித்துக் கொண்டு குப்பன் நுழைந்தான். அடிக்கடி அங்கே விபத்துகள் நடப்பதுவும், ஒரு தலைவனைப் போல் இருந்து குப்பன் அதிகாரிகளுக்கு முந்தைய விபத்துக்கள் பற்றி சொல்வதும் சாதாரணமாக நடைபெறுகிற ஒரு செயல்தான்.


‘என்ன குப்பா.. ஒரு நடிகையே விழுந்து கிடக்கிறாங்களே..’ குப்பனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு அதிகாரி கேட்கவும், குப்பன், சிதறிக் கிடந்த அங்கங்களில் முகத்தை மட்டும் உற்றுப் பார்த்து விட்டு வந்து ‘டிக்ரிடோய்’ல ஆடுனவங்கதானங்களே இவுங்க.?’ என்று அதிகாரியைப் பார்த்தான்.


‘அட கண்டு பிடிச்சிட்டியே.. ‘ என்ற அதிகாரி சொல்லிக் கொண்டிருந்த போது, பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு டிடக்டிவ் ரோஹனின் கார் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து நின்றது. அதிலிருந்து ஸ்டைலாக ரோஹன் இறங்கினான்.


நடிகை புஜப்ரியா உடலைச் சுற்றி . கேமராக்கள் தொடர்ச்சியாக ‘பளிச்’சிட்டுக் கொண்டிருந்தன.


ரோஹனைப் பார்த்த உயர் அதிகாரி ‘வா ரோஹன்.’ என்றார்.


அருகில் வந்த ரோஹனிடம் மெல்லிய குரலில் ‘என்ன ரோஹன் உன்னோட ஒன்னு விட்ட அண்ணன் தம்பிகள் விவான், அவ்யுக்த், ரிஷி, நித்தின், நீ எல்லாருமே டிடெக்டிவ்ஸ் ப்ரொஃபெஸ்ஸனை தேர்ந்தெடுத்து சூப்பரா பேர் வாங்கிட்டு இருக்கிங்களே.. எப்பிடிப்பா எல்லாருக்கும் ஒரே மாதிரி மைண்டு?’ அதிகாரி ஜாலியாகக் கேட்க ‘ சார் எங்க கொள்ளுத் தாத்தாவோட தாத்தா ஒருத்தர் - ‘ஹெட் கோர்ட் நாராயணசாமின்னு இருந்தாராம். அவருக்கு ரொம்ப க்ரியேட்டிவான ஆராய்ச்சி மைண்டாம். நல்ல பேரோட இருந்ததா சொல்றாங்க. நாங்களும் அதே ஜீன்தானே அதனாலே எங்களுக்கும் அந்த காத்தடிச்சிருக்கும் சார்..; என்றான் ரோஹன் சிரித்துக் கொண்டே.


ஒரு முறை அந்த இடத்தையும் உடலையும் பார்த்து விட்டு வந்த ரோஹன் அதிகாரி அருகில் நின்றிருந்த குப்பனைப் பார்த்ததும், ‘என்ன குப்பா சவுக்கியமா’ என்று கேட்டுக் கொண்டே குப்பனின் தோளில் கை போட்டான்.‘பவ்யமாக’ வளைந்து கொடுத்த குப்பன், ‘நல்லாக்குறன் சாரு’ என்றான்.


ரோஹன் தன் துப்பறிவு டூட்டியைத் தொடங்கி விட்டான் என்பதை புரிந்து கொண்ட உயரதிகாரி, ‘குப்பனை முன்னமே தெரியுமா?’ என்று ரோஹனைப் பார்த்து கண்ணடித்தார். ‘தெரியும் சார்.. இந்த பகுதியிலே ஒரு முறை நடந்த ஒரு சம்பவத்துலே எனக்கு பல விஷயங்களை சொன்ன குப்பந்தானே எனக்கு குரு’ என்று சொல்லி, ரோஹன் குப்பனை அருகில் இருந்த ஒரு பெரிய பாறை அருகில் அழைத்து சென்றான்


‘என்ன குப்பா… இந்த மாதிரி இங்கே அடிக்கடி நடக்குமா?’


‘மாசம் ஒன்னு ரெண்டு நடக்கும் சாரு..’


‘இப்பொ செத்திருக்கிறது ஒரு சினிமா ஆர்டிஸ்ட். இந்த பகுதிலேதான் அடிக்கடி சூட்டிங் நடக்குமே.. இவங்களெ இதுக்கு முன்னாடி இங்க பார்த்திருக்கியா?’


‘சாரு, நெதத்துக்கும் இங்கே நறையா ஆக்டுருங்க வர்றாங்க.. இவங்களையும் இங்கே பாத்திருப்பன்.. ஆனா நாவகம் இல்ல சாரு.’


‘ஏன் குப்பா உன்னோட சகாக்கள் யாருகிட்டையாவது விசாரிச்சுப் பாறேன்’ என்று ரோஹன் சொல்லவும், குப்பனுக்கு பளிச் என ஒரு பல்பு எரிந்தது.


‘கொஞ்ச இரு சாரு’ என்று சொல்லி விட்டு.. ‘மச்சான்’ என்று குப்பன் ஒரு கூப்பாடு போட, ‘என்ன மச்சான்..’ என்று சொல்லிக் கொண்டே அவன் மச்சான் ஓடி வந்தான்.


‘சாரு கேக்குதில்லா.. அந்த ‘ஆக்டரு, காரு, முந்தா நா’ன்னு ஏதோ சொல்லிகினு இருந்தியே, இத்தா.. சாருகிட்டியுஞ்சொல்லுலா..’ என குப்பன் கூற, அந்த ‘மச்சான்’ ஆரம்பித்தான், ‘ஆமா சாரு.. மூனு நாலு நாள் அந்தல்ல (மூன்று நான்கு நாட்களுக்கு முன்) அந்த அம்மாளும், ப்ளசர்ல ஒரு ஆளும் கோவமா பேசிக்கினே இருந்தாங்க சாரு’


‘என்ன பேசுனாங்கன்னு தெரியுமா..?


‘அந்த ஆளு அந்த புள்ளையாண்ட சொல்லுதியான் சாரு.. ‘நீ பொறப்ட்டு வந்துர்லா.. நானு இக்கறேன்.. நீனு அங்கன போய் கூட ஆக்கட் குடுக்கலாம்லா.. நமுக்கு.. ம்.. இன்னாது.. ம்.. நமுக்கு ‘ரஜ்ஜு’’ இருக்காரில்லா.. சானஸ் குடுப்பாரு.. அதுக்கு நானாச்சி..’ன்னாரு அந்த ஆளு. ஆன இந்த செத்தம்மா.. ‘நீ அந்த ‘வில்லாத்தா’ சீரியல் ஆர்டிஸ்ட்டுைகிட்டே கூட இதான் சொன்னியாமா.. கட்சீலே கடுக்கா குடுத்துட்டியாம்மா.. உன்ன நம்ப முடியாதுபான்னுச்சு.. அதுக்குள்ளே ‘டாட் (ஸ்டார்ட்)கட்’ சொல்ற ஆளு வந்து இந்த அம்மாவெ வல்ச்சிகினு கேமரா பொட்டிகிட்டே போய்கினாரு..’


‘அப்புறம் என்ன நடந்தது? அந்த ப்ளசர் ஆளு போய்ட்டானா?’


‘இல்ல சாரு.. ரொம்ப நேரம் நின்னுகினிருந்தான்.. எம்பொஞ்சாதிகிட்டே கூட ‘நீரு’ வாங்கி குட்சான்..’ அப்பாலே அந்த ஆக்டு கார அம்மா வந்த ஒடனெ ரெண்டு பேரும் ப்ளசர்ல போயிட்டாங்க..’


‘அந்த கார் என்ன கலர் தெரியுமா’


‘சாம்ப(ல்) கலரு சாரு’



குப்பனையும் அவன் மச்சானையும் அனுப்பி விட்டு, ரோஹன் மீண்டும் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், எல்லாம் ‘க்ளியர்’ செய்யப்பட்டு விட்டன. ‘போஸ்ட் மார்ட’த்துக்கென ஆம்புலன்ஸ் கிளம்பிச் செல்ல, காவல் அதிகாரிகளும், புகைப்படக்கார்கள், ரேகை நிபுணர்கள் போன்ற தொழில் நுட்ப நிபுணர்களும் கிளம்பினர். தன் உயர் அதிகாரியிடம் பேசி அனுப்பி விட்டு, சம்பவ இடத்தை மீண்டும் ஒரு வலம் வந்தான் ரோஹன். ஒரு சில பொருள்களை சேகரித்துக் கொண்டான்.


பிறகு ஜிஞ்சுமலை மேல் ஏறலானான். சுமார் ஐநூறு படிக்கட்டுகள் இருந்தன. மலையின் உச்சியை அடைந்த போது, அங்கே யாரும் இல்லை. ஒரு சிறிய கோயில் மட்டும் அழகாக இருந்தது. ‘எங்கிருந்து குதிச்சிருப்பாங்க’ என, அடிவாரத்தை உத்தேசமாக வைத்து, மலையின் மேல் உள்ள பகுதிகளை ரோஹன் ஆராய்ந்தான். அங்கே கிடந்த ஓரிரு பொருட்களில் ஒரு கயிறு அவனை ஈர்த்தது. அதை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஒரு ராக்கி கயிறு போல் இருந்தது. அதன் மத்தியில், மணிக்கட்டிற்கு வரும் பகுதியில், ரோஸ் வண்ணத்தில் வட்ட வடிவமாக இருந்த ஒரு தளத்தின் மேல் ஒரு பெயர் பேனாவால் எழுதப் பட்டு இருந்தது. அதை பத்திரப் படுத்திக் கொண்ட ரோஹன் மலையிலிருந்தும் கீழே இறங்கும் போது, சில பிச்சைக்கார்களுக்கு காசு போடுகிற சாக்கில், சில விவரங்களை அவர்களின் வாயிலிருந்து சொல்லக் கேட்டுக் கொண்டான். அவற்றை ரகசியமாக தன் கைப்பேசியில் பதிவேற்றிக் கொள்ளவும் செய்தான்.



அடுத்த நாள், சின்னத்திரை/திரைத் துறையில் தனக்கு இருந்த நெருங்கிய நண்பர்கள் மூலம், புஜப்ரியாவைப் பற்றிய சில விவரங்களையும், ஜிஞ்சுமலை அடிவாரத்தில் காரில் வந்திருந்த நபரைப் பற்றியும் அறிந்து அந்த நபரை அணுகினான். அது புஜப்ரியாவின் அக்காவின் கணவர். அவர், “சார்.. நான் புஜப்ரியாவையும், புஜப்ரியாவின் சொத்துக்களை விற்று பணமாக்கி அதையும் எடுத்துக் கொண்டு மும்பை சென்று விட திட்டமிட்டது உண்மைதான். ஆனால் புஜப்ரியாவிற்கு என் மேல் ஓரளவுதான் நம்பிக்கை இருந்தது. அதனால் தயங்கினார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். ப்ளீஸ் என்னை நம்புங்கள் சார்.’ என்று அழாத குறையாக கெஞ்சினார்.


‘சரி நீ இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் உனக்குத் தெரிந்த – புஜப்ரியா சம்மந்தப் பட்ட எல்லா விவரங்களையும் எனக்கு சொல். அதிலிருந்து உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க ‘துப்பு’ கிடைக்குமா பார்க்கலாம். அப்படி கிடைக்கவில்லை என்றால் உன்னை கைது செய்து தீவீரமாக விசாரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை’ என்று ஒரு மிரட்டல் ‘பிட்’டைப் போட்டவுடன் பல விஷயங்களை சொன்னான். அதில் முக்கியமான சில விஷயங்கள், ரோஹன் உண்மையான குற்றவாளியை ஓரளவு நெருங்க உதவியது.


“, ஒரு காலத்துலே ‘அனல்புல்’ சீரியல்ல புஜப்ரியாவோட நடிச்சிகிட்டிருந்த அந்த ரிச்சிராமும் அவனோட மனைவியும் இப்பொவெல்லாம் புஜப்ரியாவை ‘தங்கச்சி.. தங்கச்சி’ன்னு கூப்ட்டுகிட்டு ரொம்ப நெருக்கமா இருந்தாங்க.’ என்கிற தகவலும், தான் ஜிஞ்சுமலையின் மேல் கண்டெடுத்த நைந்த நிலையில் இருந்த ராக்கி கயிறில் இருந்த பெயரும், ‘ரிச்சி’ என்ற பெயரும் ஒத்துப் போனவுடன், ரோஹனுக்கு ஏதோ பொறி தட்டியது. அதோடு பிச்சைக்காரர்கள் மூலம் ‘இரண்டு பெண்கள் – ஒரு ஆண் மலைமேல் மாலை ஏழு மணிக்கு மேல் ஏறிப்போனார்கள் என்னும் தகவலும் ரோஹனின் ஐயத்திற்கு வலு சேர்த்தது.


அடுத்த அரை மணி நேரத்தில்,ரோஹன், ரிச்சிராமின் வீட்டில் இருந்தான். முதலில் மறுத்த ரிச்சிராம் பின் வேறு வழியின்றி உண்மையை சொல்லத் தொடங்கினான்: உண்மைதான் சார்.. இந்த ராக்கியை புஜப்ரியாவுக்கு நான் தான் அணிவிச்சேன். புஜப்ரியாவோட அக்காவும் அக்கா புருஷனும், புஜப்ரியா பேர்லே இருந்த மூனு கோடி ரூபாய் சொத்துக்களையும் முப்பது லட்சம் வங்கிப் பணத்தையும் எப்படியாவது தங்கள் வசப்படுத்திக்கப் பார்த்தாங்க. புஜப்ரியா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தப்பொ எங்கிட்டையும் என் மனைவிகிட்டையும் சொல்லி ரொம்ப அழுதது. அப்புறம் மூனு பேரும் சேர்ந்து புஜப்ரியா பேர்லே இருந்த சொத்துக்களை வித்து எல்லாத்தையும் பணமாக்கி டெபாசிட் பண்ணனும்னு முடிவு பண்ணினோம். சொத்துக்களை விக்கிறதையும் வந்த பணத்தை டெபாசிட் செய்யறதையும் புஜப்ரியா எங்க பொறுப்புலே விட்டுடுச்சி. ஆரம்பத்துலே நல்ல மனசோட ஆரம்பிச்ச நாங்க, அப்புறம் ஆசைப்பட ஆரம்பிச்சிட்டோம். சொத்தை வித்து வந்த பணத்தையெல்லாம் எங்க பேர்லே டெபாசிட் பண்ணிட்டோம். விவரம் தெரிஞ்ச உடனே, புஜப்ரியா போலீசுக்கு போறதா மிரட்டினாங்க. அப்புறம் மன்னிப்பு கேட்கற மாதிரி கேட்டு அடுத்த நாள் பணத்தையெல்லாம் புஜப்ரியா பேருக்கு மாத்தீருவோம்னு உறுதி அளிச்சோம். அப்புறம் சாமி கும்பிட போகலாம்னு மூனு பேரும் ஜிஞ்சுமலை கோயிலுக்கு போனோம். அங்கே மலையிலிருந்து புஜப்ரியாவை கீழே தள்ளிட்டோம்.


அவர்களின் முழு வாக்கு மூலத்தையும் கைபேசியில் பதிவு செய்து கொண்ட ரோஹன், துரைராம், அவன் மனைவி, புஜப்ரியாவின் அக்கா, அக்காள் கணவர், குப்பன், குப்பனின் மச்சான் என அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான். அன்று மாலை ஐந்து மணிக்கு உயரதிகாரிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு, ரோஹன் புறப்பட்டான்.


உயரதிகாரிகளின் சந்திப்பு ஆரம்பமானது. வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் வெளி அறையில் காத்திருந்தனர். யாரையும் விட்டு வைக்காமல், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து உயரதிகாரிகள் விசாரித்தார்கள். உயரதிகாரிகள் நடத்திய, அவர்களின் பங்கிற்கான விசாரணைகளின் முடிவுகள், ரோஹனின் உளவுத் திறனை பறைசாற்றி உறுதி செய்தது.


ரோஹனைப் பாராட்டி விட்டு அதிகாரிகள் செல்ல, தன்னுடைய பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு வாகனத்தில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, டிடெக்டிவ் ரோஹன் கிளம்பினான்.



கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Drama