Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...! பாகம் 3

இதயத்தில் ஓர் இசை...! பாகம் 3

4 mins
295


இதயத்தில் ஓர் இசை...!


பாகம். 3


விதி சில சமயங்களில் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும். அப்படித் தான் வினிதாவின் வாழ்க்கையிலும் விளையாடியது. ஒரு நாள் இரவு கடலுக்குச் சென்ற தீரன் திரும்ப வேயில்லை. அவன் உடலை மட்டும் அவனுடைய நண்பர்கள் கொண்டு வளர்ந்தார்கள். நடுக் கடலில் போட்டின் அடியில் சிக்கிக் கொண்டதால் இவ்வாறு நடந்து விட்டது என்று என்னென்னவோ சொன்னார்கள். இவள் காதில் எதுவும் விழ வில்லை. அப்படியே பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அந்தச் சமயத்தில் வினிதாவின் அம்மாவும் தங்கையும் இவள் மீது இரக்கம் கொண்டு மிக்க ஆறுதலாக இருந்தார்கள். அந்த சோகத்தில் இருந்து மீள வினிதாவிற்கு ஒரு வருட காலம் ஆனது. ஒவ்வொரு நொடியும் அவனுடன் வாழ்ந்த நினைவுகள் அவளைச் சந்தோஷப் படுத்தியும், இனி அந்த வாழ்க்கை இல்லை என எண்ணும் போது துக்கம் மேலோங்கியும் அவளது மனதை ரணகளப் படுத்தியது. நாட்கள் செல்லச் செல்ல அவளின் அம்மா மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மிகவும் வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். தீரனும் அதையே தான் விரும்புவான். முதல் இரவிலேயே அவன் இவளிடம், தனக்கு ஏதாவது ஒன்று நடந்தால், இவள் மற்றொரு திருமணம் கண்டிப்பாகச் செய்து கொள்ள வேண்டும் என்று இவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான். அப்படிப்பட்ட உயர்ந்த குணம் கொண்ட நல்லவன் அவன். இவளும் படிப்படியாக கடந்த காலத்தை மறந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவ்வப்போது நினைத்தாலும் தீரன் இவள் மனதை ஆக்கிரமித்தது போல் எந்த ஒரு ஆண் மகனும் இவள் மனதைத் தொட்டதில்லை. தீரனைச் சுற்றி எப்போதும் ஒரு எனர்ஜி இருக்கும். ஒரு சந்தோஷம் இருக்கும். அவன் இவளைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவனைப் போல் இன்னொருவனைப் பார்ப்பது அரிது தான். இவளது தாயும், தங்கையும் இரண்டு மூன்று வரன்களைக் கொண்டு வந்தார்கள். இவளுக்கு இஷ்டமில்லை. இவளுடைய சிம்பிளான வாழ்க்கைக்கு நகரம் ஒத்து வராது என்று நினைத்தாள்.


இவளுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த ஆசையும் கிடையாது. அவள் இங்கேயே மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறாள். ஒவ்வொரு நாளையும் நிதானமாகச் சந்தித்து அதன் போக்கில் வாழ்கிறாள். இவள் யாருடைய அங்கீகாரத்திற்கும் ஏங்கவில்லை. பெரிய பங்களாவில் தான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ ஆசையோ அவளுக்குக் கிடையாது. தீரனுடன் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. எதற்கும் அவசரமில்லாத எளிமையான வாழ்க்கை. இந்த வாழ்க்கையை அவள் ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் வசிப்பது இந்த மீனவர்கள் கிராமமாக இருந்தாலும் அவள் வேலை பார்க்கும் இடம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில். அதில் அவள்தான் ஹெட் ரிசப்ஷனிஸ்ட். மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம். அது அவளது செலவுகளுக்கு எதேஷ்டம். தன் செலவுகள் போக மீதி உள்ள பணத்தில் அந்த கிராமத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு உதவி செய்வாள். நேரம் ஆகிறது. வேலைக்குச் செல்ல ரெடியாக வேண்டும் என்று எண்ணியபடியே அந்தக் கடற்கரையை நோட்டம் விட்டாள்.

இரவில் கடலுக்குள் சென்று திரும்பி கடற்கரை நோக்கி வந்த தோணிகள். மணல்பரப்பு குடிசைகள். விரிக்கப்பட்டிருந்த வலைகள் என்று பிரதேசம் ஓர் ஒழுங்கற்ற ஒழுங்கில் விரிய, இரண்டு நிர்வாணக் குழந்தைகள் ஒன்றை ஒன்று துரத்தின. நாய் ஒன்று வேடிக்கை பார்த்தது. வீடு நோக்கி நடந்து கதவென்ற பெயரில் இருந்த ஒரு தட்டியைத் தள்ளி உள்ளே நுழைந்தாள். ஆகாயத்தில் மேகங்கள் இஷ்டத்துக்கு தங்கள் உருவை மாற்றி காட்சி அளிப்பது போல வேறு வேறு மாடல்களில் நிழல் உருவங்களாகத் தெரிந்தன. மழை வருமா வராதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.


ரெண்டு ஸ்லைஸ் ரொட்டியை ஜாம் தடவி சாப்பிட்டு விட்டு, ஒரு கப் காஃபியையும் விழுங்கி விட்டு, தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் போது அவளுடைய செல் ஃபோன் அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். மஞ்சு தான். விரல் தொட்டு ஆன் செய்து காதில் வைத்து இவள் 'என்ன மஞ்சு?' என்று கேட்பதற்கு முன்பே மஞ்சுவின் குரல் செல் ஃபோனிலிருந்து அவசர அவசரமாகத் திமிறிக்கொண்டு வந்தது. 


"வினிதா, எங்க இருக்க?"

மஞ்சுவின் பேச்சில் ஒரு அவசரம் தெரிந்தது. அவள் எப்பொழுதும் இப்படித்தான். ஏதோ ஒரு டெரரிஸ்ட் அட்டாக்கிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் எமர்ஜென்சி அவள் பேச்சில் தெரியும். எப்பொழுதும் ஒரு ஸ்டிரஸ்ஸிலேயே இருப்பாள். கேட்டால், தான் ஒரு கைனகாலஜிஸ்ட், அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று சொல்வாள். ஆனால், அவளுடைய ஹஸ்பென்ட், டாக்டர். சுந்தர், மஞ்சுவுக்கு நேர் ஆப்போசிட். எப்பொழுதும் ஜாலியான, பயங்கர ஸென்ஸ் ஆஃப் ஹியூமர் உள்ள ஒரு நபர். இத்தனைக்கும் அவரும் ஒரு பிஸியான சர்ஜன். மஞ்சுவின் டென்ஷனைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பவர். சுந்தர் ஒரு டேலன்ட்டட் சர்ஜன். ஆனால், தன் திறமையைப் பற்றிய இறுமாப்பு கொள்ளாத ஒரு நல்ல ஜீவன். மஞ்சுவும் நல்லவள்தான். ஆனால், அவள் வினிதாவை நடத்தும் விதம் அவளுக்குப் பிடிக்க வில்லை. 


"சோளிங்க நல்லூர் கிட்ட இருக்கேன். ஏன்?", வினிதாவிற்கு அலுப்பாக இருந்தது. மஞ்சு எப்பொழுதும் இவளை 'நீ எப்படி இருக்கிறாய்?' என்று ஒரு தடவை கூட விசாரித்ததில்லை. அவளுடைய தேவைகளை மட்டும் சொல்லும் சுயநலம், வினிதாவிற்கு சுத்தமாகப் பிடிக்க வில்லை. சின்ன வயதில் இருந்தே மஞ்சுவிற்கு, வினிதாவை டாமினேட் செய்தே பழக்கமாகி விட்டது. அதிலிருந்து மீள வேண்டும் என்று வினிதா எவ்வளவு முயன்றும், இதுவரை அவளால் முடியவில்லை.


"யப்பா, நல்ல வேளை. உடனே கிளம்பி அடையார் வா!", அடையாரில் தான் அவள் பங்களா உள்ளது. சில சமயம் வினிதாவிற்கு யார் அக்கா, யார் தங்கை என்பதே மறந்து போய்விடும் அளவிற்கு வினிதாவை வேலை வாங்குவாள். 


"எதுக்கு இப்ப என்னை அங்க வரச் சொல்றே?" வினிதாவிற்கு லேசாக எரிச்சல் வந்தது. 


"எனக்கு இங்க ஒரே டென்ஷன். என்னோட ஸர்வன்ட் வரலை. ஊருக்குப் போறாளாம். நான் இன்னும் ஒருமணி நேரத்தில மும்பை ஃபிளைட்டைப் பிடிச்சாகணும்" அடையாரில் மஞ்சுவின் ஆடம்பர பங்களா, அந்த ஏரியாவிலேயே ரொம்பப் பெரிசு. அழகுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால், வினிதாவிற்கு அது தேவையில்லை. மஞ்சு எப்படி வினிதாவின் குடிசையை மதிக்கிறாளோ, அப்படியே வினிதாவும் மஞ்சுவின் சொகுசு வீட்டை மதித்தாள். அவளுடைய எல்லாவிதமான அவசரத் தேவைகளுக்கும், மஞ்சு, இவளை யூஸ் பண்ணிக் கொள்வாள். வினிதாவிற்கென்று ஒரு பிரத்யேக வாழ்க்கை இல்லை என்று மஞ்சு நம்பியதால், வினிதாவை, தனக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமெனும் போதெல்லாம் கூப்பிடுவாள். 'முடியாது' என்று மட்டும் கூற வினிதாவால் முடிவதில்லை. மஞ்சு அந்த வார்த்தையைத் தயக்கமின்றிக் கூறுவாள். அதுவே, அவள் சக்ஸஸிற்குக் காரணம். 


"வீட்டைப் பார்த்துக கொள்ள பாதுகாப்பாக ஒரு நபர் தானே வேண்டும். ஹோட்டலில் இருந்து ஒரு நம்பிக்கையான வாட்ச் மேனை அனுப்பி வைக்கிறேன்" எனறாள் வினிதா எச்சரிக்கையுடன். இருப்பினும் அவள் பேச்சு எடுபடுமா?.... மீண்டும் சந்திப்போம்.

                 -தொடரும்



Rate this content
Log in

Similar tamil story from Romance