Arivazhagan Subbarayan

Drama Romance Classics

4  

Arivazhagan Subbarayan

Drama Romance Classics

ஹார்மோன்களின் உலா

ஹார்மோன்களின் உலா

3 mins
205



முதல் பார்வையிலேயே

அவன் அழகு என்னைக் கவர்ந்தது! ரோஜா நிற ஈறுகளில் பதிக்கப்பட்ட வெண் பற்கள் தெரியப்

புன்னகைத்தான்! அவன் புன்னகையில் நான் மெய்மறந்தேன்! அவன் பார்வையில் ஒரு மின்சாரம் இருந்தது! அவன் கம்பீர நடையில் காதல் வயப்படலாம் போல் தோன்றியது! என் காதலை எப்போது அவனிடம் சொல்வது? அந்த ஒரு குறிப்பிட்ட

நாளுக்காகக் காத்திருந்தேன்!

எனக்குத் தெரிந்தவன்தான்

என்றாலும் அவனுடன் பேசிப் பழகியதில்லை!

ஆச்சரியம்!

இதோ இப்போது என்வீட்டில்

அவனும் அவன் குடும்பமும்!

என் அக்காவைப் பெண் பார்க்க

வந்திருக்கிறார்கள்!

என் கனவுகள் உடைந்து சுக்குநூறானது. சொல்வதற்கு முன்பே என் காதல் கருகி விட்டது. என் மனதில் ஒரு ஏமாற்றம் வெறியுடன் உலா வந்தது. மனதின் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா? சிலருக்கு முடியும். அப்படி முடிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெளியே சொல்லி ஆறுதல் தேடிக் கொள்வார்கள். என்னால் முடியவில்லை. 


நேரம் ஆக ஆக நெஞ்சு கனத்தது. என் வாழ்வின் பாதை மறைந்தது போலிருந்தது. கனவில் அவனுடன் வாழ்ந்திருக்கிறேன். கானகங்களில், கடற்கரையில், புல் வெளியில், மழைச் சாரலில் தென்றல் தழுவலுடன் அவனுடன் கைகோர்த்து உலவியிருக்கிறேன். அது ஏதோ நிஜமாகவே நடந்தது போல், ஏதோ தினமும் நடந்தது போல் என் மனதில் பதிந்து விட்டிருந்தது. அதை இனிமேல் எவ்வளவு முயன்றும் அழிக்க முடியுமா தெரியவில்லை.


காதல் என்பது இதுதானோ? கண்களை மறைத்து விடுமோ? மூளை மழுங்கி விடுமோ? வேறு எதையும் என்னால் எண்ணவே முடியவில்லை! ஏனென்று தெரியவில்லை. காதல் என்பது வெறும் உடற்கவர்ச்சி, அது ஹார்மோன்களின் வேலை என்று சொல்வார்களே! அதுவா இது? அப்படியானால் காதல் என்பது உண்மையில் காமம்தானா? இரண்டும் ஒன்றென்றால் ஏன் அதற்கு வேறு வேறு சொற்கள்? இரண்டிற்கும் ஒரு சிறு வித்தியாசமாவது இருக்கும். அந்த வேறுபாடு என்ன? நான் எதற்கு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது என் காதலோ, காமமோ, என்ன கண்றாவியோ, அது முடிவுக்கு வந்து விட்டது. அவ்வளவுதான். வெரி சிம்பிள்.


எனக்குத் தேவையானது கிடைக்காது எனத் தெரிந்ததனால் வந்த விரக்தியில் இப்படி எனக்கு எண்ணத் தோன்றுகிறதா? ஒருவேளை என் ஒரு தலைக் காதல் கைகூடியிருந்தால் இப்படியெல்லாம் நினைக்க மாட்டேனோ, என்னவோ? சோகத்தில்தான் தத்துவங்களும், கண்ட கண்ட சிந்தனைகளும் ஊற்றெடுக்குமோ? எதையெதையோ எண்ணியபடி வீட்டின் பினபக்கம் வந்தேன். அவனுடைய பெற்றோர்கள் ஹாலில் அமர்ந்து என்னுடைய பெற்றோருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் உரையாடலில் மகிழ்ச்சி ஔிர்ந்தது. ஆனந்தம் மிதந்தது. என் அக்காவிற்குத் திருமணம் என்றால் நானும் ஆனந்தப்பட வேண்டும். ஆனால், முடியவில்லை. இதை வெளிக்காட்டக் கூடாது. எனக்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டியதுதான். வெளியே சொன்னால் அனைவரின் மகிழ்ச்சியும் பறந்து போய்விடும். அது மட்டுமின்றி என்னையும் ஏளனமாகப் பார்ப்பார்கள். ஏன் தங்கையாய் இருந்தால் அக்காவிற்கு முன் அதே பையனைக் காதலிக்கக் கூடாதா? அவர்களைப் பொறுத்தவரையில் இது அரேஞ்ட் மேரேஜ். என்னைப் பொறுத்தவரையில் இது காதல் திருமணம். எனக்குத்தான் முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும். என்ன நான்? என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்? மற்றவர்களின் மகிழ்ச்சி என்னாவது? இருங்கள்...என்னைப்பற்றி நான் ஏன் சிந்திக்கக் கூடாது? என்னைப் பற்றி நான்தானே சிந்திக்க வேண்டும்.


அருகே மரத்தடியில் சத்தம் கேட்டது. அக்காவும் அவனும் தனியே பேசட்டும் என்று அனுப்பி வைத்திருப்பார்கள் போலும். மற்றவர்கள் அந்தரங்கமாகப் பேசுவதை நாம் ஒட்டுக் கேட்கக் கூடாதுதான். இருந்தாலும் நான் இருந்த மனநிலையில் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. 


"என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?", இது அக்கா. குரலில் மென்மையும், வெட்கமும் கலந்திருந்தது. 


"பிடித்தருக்கிறது. ஆனால், நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே!"


"எதையும் வெளிப்படையாகப் பேசுங்கள். நான் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்"


"உங்களை விட உங்கள் தங்கையை மிகவும் பிடித்திருக்கிறது. சாரி"


இதை அவனிடமிருந்து கேட்டதும், மறைந்திருந்த எனது இதயம் படபடத்து, உடம்பில் வேக வேகமாக இரத்தம் பாய்ந்து சூடாக்கியது. இது மகிழ்ச்சியால் ஏற்பட்டதா அல்லது நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்ததால் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், உடம்பில் ஏற்பட்ட, இந்த ஹார்மோன் மற்றும் இரசாயன மாற்றங்களால், ஒரு நடுக்கம் தலையிலிருந்து கால் வரை பரவியது.


"நீங்கள் சொல்வது சரிதான். என் தங்கை என்னைவிட அழகானவள். அதனால் இது சகஜம்தானே!"


இந்த வார்த்தையை என் அக்காவிடமிருந்து எதிர் பார்த்தேன். என் அக்கா என் மீது அதீதமான அன்பு வைத்திருப்பவள். எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. இவளை அக்காவாக அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 


"அதனால், நான் உங்கள் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்", என்றான் தயங்கித் தயங்கி.


"என்ன, தங்கையையா? என்னுடைய ஃபோட்டோ பார்த்துதானே வந்தீர்கள்? பிறகு என்ன இங்கு வந்தவுடன் என் தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எப்படி வரும்", சற்றே கோபம் கலந்திருந்தது அக்காவின் குரலில். 


'அக்கா, ப்ளீஸ், கோபப் படாதேயேன். நான் உன் தங்கைதானே. நானும் அவரைக் காதலிக்கிறேன் அக்கா' என் மனது சத்தமின்றிக் கதறியது.


"அதுதான் சொன்னேனே. இங்கு வந்து உங்கள் தங்கையைப் பார்த்ததும், அவர்களைப் பிடித்து விட்டது"


"மிஸ்டர், அப்படியென்றால், என் தங்கையை விட அழகான இன்னொரு பெண்னைப் பார்த்தால், அவளையும் விட்டு விடுவீர்களா?"


அக்காவின் இந்தக் கேள்விக்கு அவன் பதிலின்றித் தலை குனிந்தான். 


ஆனால், எனக்கு ஒன்று புரிந்தது. இதுவரை என்னுள் உலா வந்து விளையாடியது காதல் இல்லை, ஹார்மோன்கள்தான் என்று!






Rate this content
Log in

Similar tamil story from Drama