மதுரை முரளி

Tragedy Classics Inspirational

5.0  

மதுரை முரளி

Tragedy Classics Inspirational

அம்மா வா

அம்மா வா

10 mins
581


               


            மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்.

            டவுன் பஸ்களின் ஹாரன்களுக்கும்,  வெளியூர் பஸ்களின் இன்ஜின் உறுமல்களுக்கும் இடையே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த பயணிகளால் பரபரப்பாய் இருந்தது.

         ‘ சென்னை’ -- போர்டு தாங்கிய திருவள்ளுவர் பஸ், பஸ் ஸ்டாண்டின் கிழக்கு வாயில் வழியாக வெளிவர, வெகு அவசரமாக மனைவி திவ்யா அரை வயது அரவிந்த் ஆகியோருடன் குறுக்கே வந்து பஸ்சை நிறுத்தினான் ராஜசேகர்.

        ‘சட்’ டென பிரேக் பெடலில் கால் வைத்து, வண்டியை நிறுத்திய டிரைவர், 

        “  யோவ், கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம.. குடும்பத்தோட வந்து , இப்படியா குறுக்கே வர்றது? “ சலித்துக்கொள்ள,

        “ விழுப்புரம் ஏறலாங்களா? “  என்றவனுக்கு,

       “ அதான் நிறுத்திட்டியே பஸ்ஸை.  பஸ்ஸே காலியா கிடக்கு.  உள்ள போய் உட்கார சொல்லு  குடும்பத்தை. “ டிரைவர் விரட்டியவாறே வண்டியை நகர்த்த,

       அரவிந்துடன் திவ்யாவை ஏற்றிவிட்டு, தானும்  தொற்றிக்கொண்டான் ராஜசேகர்.

       பஸ் மதுரை அவுட்டரைத் தாண்டியதும்,  மெல்ல கியரை மாற்றி வண்டியின் வேகத்தை கூட்டினார் டிரைவர்.

      சுற்றிலும் இருந்த பொட்டல் காடுகளிலிருந்து காற்று உஷ்ணமாக முகத்தை தாக்கியது.

      குழந்தை அரவிந்து அழத்தொடங்கி விட்டான். 

      “ என்னங்க,  நீங்க பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஊர் தானே இது. அப்பறம் என்ன வேடிக்கை வேண்டி கிடக்கு?  இவனை கொஞ்சம் படிங்க “  திணிக்கப்பட்ட அரவிந்தை  திவ்யாவிடமிருந்து வாங்கிக்கொண்டான் ராஜசேகர்.

      குழந்தை  பெரிதாய்அழ ஆரம்பித்தது.

      எரிச்சலடைந்த திவ்யா,

     “  ஒரு குழந்தையை வைச்சுக் கொள்ள துப்பில்ல . அப்படி,  என்ன தான் வளர்த்தாங்களோ உங்க அம்மா?. சோத்து கைக்கு, மாத்து கை இல்லாம ஒருத்தியே கிடந்து உருசிர  விட வேண்டிருக்கு? “ என்றவளாய்

 ' வெடுக்' கென பிடுங்கிக்கொண்டாள். 

     “ஏய்,  ஏண்டி இப்படி எல்லாம் பேசுற?  இலேசாக முணுமுணுத்தான் ராஜசேகர்.

    அரவிந்தனின் அழுகை.. கதறல் ஆக மாறியது .

    சக பிரயாணிகளில் ஒரு பெரியவர்,

    “ குழந்தைக்குப் பசிக்குது போலம்மா. “  சொன்னவரைத் திரும்பி பார்த்து முறைத்தாள் ஆத்திரமாய்.

     இவன் கையிலிருந்த பையை பறித்து,  ‘பால்’  புட்டியை  குழந்தை அரவிந்தின் வாயில் திணிக்க, 

   ‘ க்ளுக், க்ளுக் ‘ என நுரையைத் தள்ளியது வாயில். 

   ‘சீ!  சனியன்!  எப்பப் பாரு அழுகை.  எனக்குன்னு வந்து பிறந்து இருக்கு பாரு.  வாச்சவனும் சரியில்ல ! வாரிசாவது ஒழுங்கா இருக்க கூடாதா? “  சலிப்புடன் தோளில் சாத்தி , ஓங்கி ஓங்கி முதுகில் தட்டினாள் திவ்யா.

      “ இந்தாம்மா.  பார்த்தும்மா. பச்ச பிள்ளைய இப்படியா தூங்க வைக்கிறது?  குழந்தையை பெத்தா மட்டும்  போதுமா?  வளர்க்க தெரியவேண்டாமா? “  பக்கத்து வீட்டு பாட்டியின்  திவ்யாவுக்கானஅறிவுரை, 

      ராஜசேகருக்கு அவனுடைய அம்மாவை நினைவுபடுத்தியது.

      தான் எட்டு வயதில் டைபாய்டில் படுத்து ஒரு மாதம் கஷ்டப்பட்ட போது இரவு,  பகல் பாராது மடியில் கிடத்தி கை விசிறியை வீசியவாறு தாலாட்டிய அன்பு.. தாயின் அன்பு மனக்கண் முன்னே வந்து நின்றது ராஜசேகருக்கு. 

     குழந்தை அரவிந்த் பலமாக குரல் கொடுத்துஅழ, 

     பஸ்ஸில் இருந்த பலரும் பல்வேறு அபிப்பிராயங்களை சொன்னார்கள்.

    ‘ குழந்தைக்கு தூக்கம் வந்துருச்சு போலாம்மா.  நல்லா தூங்குவைம்மா.  மார்போடு அணைத்து தட்டிக்கொடுத்துப் பார்த்தாள் திவ்யா.

     பலனில்லை. ‘ ஏதாவது  புடவையிருந்தா கைப்பிடியில கட்டி தூளிலப் போடும்மா.’ அறிவுரைகள் தொடர்ந்து வர, 

    திவ்யாவின்  முழங்கை இடித்த வலியில் , வேதனையில்  திரும்ப தன் நினைவிற்கு வந்தான் ராஜசேகர்.

   “ ஹ..ஹ.. என்ன திவ்யா? “

   “ ஹ..மண்ணாங்கட்டி. குழந்தை கதறுது. சுத்தி உள்ளவங்க எல்லாம் சொல்றது தெரியல? தூளியைக் கட்டுங்கன்னு.. நான் வேற உங்களுக்குச் சொல்லணுமா? “ முறைத்தவளைப் பார்த்து,

    மறுபேச்சின்றி அவசர, அவசரமாக துளியைக் கட்டி குழந்தையை தோளில் போட்டு,

    அம்மாவின் ‘ஆராரோ ஆரிரரோ’ பாடினாரன் இராஜசேகர்.

    பாடியவன் பாட்டிலேயே லயிக்க, குழந்தை தன் குரலில் சுருதியைக் கூட்டியது.

    “ ம்., அப்படி என்ன நினைப்போ? “

    “ அ.. அது,  திவ்யா அம்மா ஞாபகம் வந்திடுச்சு..”

    “ ஆமா..அம்மா ?  பொல்லாத அம்மா.  அதான் இப்பதானே போயிட்டு வந்தோம் . ஒரே பையன் நீங்க.  இருக்கிறது ஒரு வீடு.  ஓட்டு வீடு . அதுவும், ஒரே ஓட்டை வீடு. அதை  உங்க மேல எழுதி வைக்க அவங்களுக்கு மனசு வரல.  முடியாதுன்னுட்டாங்க. அப்ப, அம்மா என்ன? அம்மா?. அவங்க அங்கேயே அனாதையா கிடந்து சாகட்டும். “

     “ இங்க பாரு.  இதப் பாரு.  என்னைய என்ன வேணும்னாலும் பேசு. பொறுத்துப்பேன்.  ஆனா,  எங்க அம்மாவைப் பத்தி மட்டும் தாறுமாறா பேசின..பஸ்ஸுன்னு கூடப் பார்க்க மாட்டேன். அறைஞ்சுப்புடுவேன். “ 

      இருவருக்கும் தகராறு ஏற்படவே,

     “  என்ன மனுஷங்க நீங்க . குழந்தை கிடந்து அழுகுது.  என்னதான் வில்லி ஆனாலும்  ஒரு குழந்தையை  ஆறு மாசம் வரை வளர்கிறது  பெரிய பாடுன்னு சொல்லுவாங்க. குழந்தை மேல பாசம் வேணாம்?  புருஷன் கிட்டப் போய் இப்படி சண்டை போடுற?  நானெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு 6 குழந்தைகளை வளர்த்து இருப்பேன் தெரியுமா?  “ 

      திவ்யா கோபமாய் பேசியவலைப் பார்த்து முறைக்க,

    ‘ குபுக்’ கென்று சிரிப்பு வந்தது ராஜசேகருக்கு. 

    “ இந்தாம்மா..குழந்தையை கொஞ்ச நேரம் நான் பார்த்துக்கொள்கிறேன்.  வாப்பா., என் தங்கமே.  வருவியா?  அழுவியா?. அழக்கூடாதுப்பா.”  எனக் கொஞ்சியவாறு அரவிந்தை வழுக்கட்டாயமாக வாங்கி, பக்குவமாய் ஒரு கையைக் கழுத்தில் தாங்கிப்பிடித்து தோளோடு தோள் சேர்த்து அணைத்து கட்டிக்கொடுத்து,  கூடவே தாலாட்டும் பாட, 

     ஆச்சரியம்... அரவிந்தன் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக 

விசும்பல் ஆகி அடங்கிப்போனது.

      ராஜசேகர் சிலாகித்துப்போனான்.

     இவள் அல்லவா தாய்!   இதுவல்லவா தாய்ப்பாசம்!!

    அப்பா மூன்று வயதிலேயே தவறி விட , முதலில் தவித்துத் தடுமாறிய அம்மா, மெல்லச் சுதாரித்து.. ஒரு இட்லிக் கடை வைத்து தன்னை படிக்கவைப்பதற்காக.. கிடைத்த நேரத்தில் வீட்டு வேலைகள் செய்து, ரோட்டில் சாணி பொறுக்கி விற்று, பணம் சேர்த்தது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மலரும் நினைவுகளாக ராஜசேகருக்கு மனக்கண் முன் வந்து நின்றது.

      ஒருநாள் சேகர் ஸ்கூலில் பக்கத்து சீட்டு பையன் சாப்பிட்ட மீன் குழம்பு பற்றிக் கூறி அவனுடைய ஆசையைக்கூற, அடுத்த நாளே வீட்டில் சட்டி நிறையக் கொடுத்த  மீன் குழம்பு.. அம்மா! 

     அன்று இவன் கை மட்டுமல்ல,   ஊரே மணத்தது நாலு நாளைக்கு.

     ஆசையாசையாய் நாள் முழுவதும் வயிறு முட்ட, முட்ட சாப்பிட்டவன்  பாசத்தோடு அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள,  காதை மறைத்திருந்த தலைமுடி விலகிவிட்டது. 

      ‘வெற்றுக்காது’ . 

     அதிர்ச்சியில் ஆடிப் போனான் இராஜசேகர்.

     தன் மகனின் ஆசையை நிறைவேற்ற அதைத் தவிர,  வேறு ஒன்றும் இல்லாத நிலையில் ஒரே ஒரு நகையையும் அடகு வைத்தவள் அவன்அம்மா. 

    ‘ பொல,பொல’ வென கண்ணீர் வந்து ராஜசேகருக்கு.

      வெளியே வேடிக்கை பார்க்க..  நகரும் மரம்,  செடி,  கொடி. 

      ஒரு மரத்தில் ’ போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்’  போர்டு தொங்கியது கண்ணில்பட்டது.

      “ சே! இந்த உலகத்துல வாழ்வு, வசதி, பங்களா, ஆடம்பரம் இப்படி எவ்வளவோ போலி. 

      அன்பு மட்டுந்தான், அம்மாவோட தூய.. தாயன்பு  மட்டும்தான்

நிரந்தரம் எனப் பொறி தட்டியது மூளைக்குள். 

      தன் தோளில் தலைசாய்த்து உறங்கும்  திவ்யாவைப் பார்த்தவன் சுமை, குழந்தை சுமையை இறக்கி வைத்த நிலையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் திவ்யா.

     இதுநாள் வரை தன் மீது,  திவ்யா மீது வராத கோபம் இப்போது வந்தது.

         தான் வேலைக்காக சென்னை வந்தபோது அம்மா பேசிய வார்த்தைகள் ஞாபகத்திற்கு வர,    

        “ ராசா., ‘ கெட்டும் பட்டணம் போ ‘ன்னு சொல்லுவாங்க.  நீ அங்கே போய்  கெட்டுப்போயிடாதப்பா. எனக்கு இருக்கிறது ஒரே மகன்.  அடிக்கடி வந்து போப்பா. “

      “  அய்யோ அம்மா.,  என்னமா சொல்றே?  இந்த ராஜசேகர்  உன் பையன்ம்மா . நிச்சயம் நல்லபடியா இருப்பேம்மா. போயி,  கொஞ்ச நாள்ல ஒரு நல்ல வீடு பிடிச்சு,  உன்னை கூட்டிட்டு போய் உட்கார வைச்சு , சோறு போடுவேம்மா.  உனக்காக என் உயிரையும் கொடுக்க தயாரா இருக்கேம்மா.  நீ கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டேம்மா. “

       இப்படி சொன்னவன்  கோட்டுக்குப்பதில், வட்டத்திற்குள் ‘காதல் வட்டத்திற்குள் ‘ சிக்கிக் கொண்டான்.

       ‘மெரினா’  பீச்சில் காற்று வாங்கப் போய்.. ‘காதல்’  வாங்கி , திவ்யாவிடம் ஆசைப்பட்டு அடங்கிப் போனான்.

       தனக்காக  மாதம் ஒரு சிறிய தொகை கொடுப்பதாக சொன்ன மகன் கையில் மாலையைக் கொடுத்து,

       அம்மா  காலில் திவ்யா சகிதம் விழுந்தபோது விக்கித்துதான் போனாள் அவன் அம்மா.

      “ இந்தாம்மா., உன் பேர் கூட எனக்குத் தெரியாது.  நீ வளர்ந்த விதம் வேற.  நாங்க வளர்ந்த விதம் வேற.  என் பையன் ரொம்ப அப்பாவி . எனக்கு எல்லாமே என் ராசாதான்.  அம்மா நீதான் அவன..பார்த்துக்கணும். “  கலங்கிய தாயின் கண்ணீர் கலக்கியது ராஜசேகரை.

         சூரியன் வானில்  உச்சத்தில் இருக்க  மணி 12 தாண்டியிருந்தது.

         நேற்று இந்நேரம் கிராமத்தில் இருந்த போது அம்மா பேசிய பேச்சுக்கள் அவன் நினைவிற்கு வந்தன.

         “ வா..ராசா.  இப்பதான் ,இந்த பாவி  நினைப்பு வந்ததா? இங்க வந்து வருஷம் ரெண்டு ஆச்சேடா? ஆமா,  இது யாரு உன்  குழந்தையா?  பையன் பிறந்து இருக்கான்னு கடுதாசி போட்ட.  எழுதப் படிக்க தெரியாதனால நான் பஸ்ஸைப் பிடித்து ஓடி  வர முடியலடா. இல்லனா பறந்து வந்து இருப்பேன். டேய்., என்ன அப்படி பார்க்கிற? நான் உங்க அப்பாவையே பெத்தவ. உன் பாட்டிடா.  “

       நிமிஷத்தில் குழந்தையோடு குழந்தையாகிப் போன தன்  அம்மாவைக் கண்டு சிலிர்த்துப் போனான் ராஜசேகர். 

       சென்னைக்கு போயிட்டு, இவளை பார்க்கமா இருந்திருக்கக் கூடாதா?  இந்த திவ்யாப்  பார்த்து இப்படி ஆகிப்போச்சு... மனசுக்குள் நினைத்தான்.  

       “ அம்மா.,  அம்மா.  கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க.  எனக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு.  என்னதான் இரண்டு பேர் வேலை பார்த்தாலும்,  பணம் பத்தல . விழுப்புரத்தில் எங்க மாமா வீட்டுப் பக்கத்துல வீடு ஒன்று விலைக்கு வருதும்மா.அதை வாங்கிப் போடலாம்னு திவ்யா ஆசைப்படுறா.  அதான் நம்ம வீட்டை வித்து.. “ இவன் முடிக்குமுன்,

        “ ஐயோ.,  என் உசுரு இருக்கிறவரைக்கும் இதை என் காதில சொல்லாதடா. “ அம்மா கெஞ்ச,

        “ இங்க பாருங்க.  அம்மாக்கிட்ட என்ன தயங்கி, தயங்கி பேச்சு?” என்ற திவ்யா,

        “  இதப் பாருங்கம்மா., நாங்க இருக்கிற இடத்திலிருந்து இங்கே வர ஒரு தடவைக்கு ஆயிரம் ரூபாய் செலவாகுது. அப்புறம் உங்களுக்கு புடவை..அது, இதுன்னு செலவு வேற இருக்கு. அதான் இந்த வீட்டை வித்துப்புட்டு ..”

        “ வேணாம்டா ராசா.. வேணாம்.  உங்களுக்கு வேணா..  இந்த ஓட்டு வீடு...உடைஞ்சு போன  ஓட்டை வீடா உங்க பார்வைக்கு தெரியலாம். ஆனா,  என்னோட மனசில இருக்கிற மாதிரி உங்க அப்பா ஓடியாடி வேலை செஞ்சு கட்டின வீடுடா.  என் உசுர கூட அவர் போன இந்த வீட்டில தாண்டா போகணும்.  தயவுசெய்து புரிஞ்சுக்கோடா. நீ எங்க இருந்தாலும் நல்லாயிருப்பேடா. நான் போனதுக்கப்புறம் இந்த வீடு, இடம் எல்லாம் உனக்கு தான்டா. “

        மேலே பேச வார்த்தை வாயில் வராது அம்மா கதற,

       “ அம்மா.,  அம்மா எனக்கு வேணாம்.  நீ அழ வேணாம்மா. “ ராஜசேகர் தேற்ற முயற்சிக்க,

       “ என்னங்க,  திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி கூட்டிட்டு வந்தேன். இங்க வந்தவுடனே இப்படி பேசினா எப்படி?  இதப் பாருங்க.  ஒரு ஆத்திரம், அவசரம் எல்லாத்துக்கும் தான்  இந்த வீடு,  நிலம் .  இது  உங்க பரம்பரை வீடு தான். எனக்கு ‘அந்த’ வீடு வாங்க பத்தாயிரம் பணம் தேவை.  இல்லைன்னா  இந்த  வீடு, சொத்து யாருக்கு வேணும்? அவங்ககளுக்கு விருப்பம் இல்லைனா விட்டுடுங்க” இவன் கையைப் பற்றி பேசியவள்,

          மீண்டும், 

       “ என்னவோ., ‘அம்மா, அம்மா’ ன்னு உருகினீங்க .பெத்த  பிள்ளை கஷ்டப்படுறதைப் பார்த்து சோகமேயில்லாம , சுகமா இருக்குறவங்க கிட்டப்போய் பேசிக்கிட்டு. வாங்க போவோம்.  இனிமே,  இந்த ஊரு வேண்டாம்.  உங்க அம்மா சகவாசமும் வேணாம். “ என்றவளின் பேச்சைக் கேட்டு,

      அம்மாவைக் கதற, கதற விட்டு தான் புறப்பட்டது வந்தது தவறு என உணர்ந்தான் ராஜசேகர்.

      தொண்டைக்குழிக்குள் ‘ஏதோ’ அடைப்பதை உணர்ந்த ராஜசேகர், கை கால்களில் பதட்டம் பரவ ஆரம்பித்தது.

      பஸ்,  திருச்சி பஸ் நிலையத்தை அடையக் காத்திருந்தவன், திவ்யாவை உசுப்பினான். 

      “திவ்யா,  திவ்யா.  திருச்சி வந்திடுச்சு. எனக்கு அம்மா.. அம்மாவை அந்த மாதிரி பேசிட்டு வந்தது  மனசில கவலையாயிருக்கு‌ . எனக்கு படபடப்பா இருக்கு. நீ என்ன செய்யற., இந்த பஸ்சிலேயே விழுப்புரம் போ. நான் எப்படியாவது  அம்மாவை சமாதானம் பண்ணி அடுத்த பஸ்ஸில் கூட்டிக்கிட்டு வந்திடறேன்  “ சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராது தாவிக்குறித்து,  மதுரை பஸ்ஸில் ஏறினான் ராஜசேகர். 

      கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப்பின் கிராமத்தை அடைந்தவன் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினான்.

       உள்ளுக்குள் விவரிக்க முடியாத ஒரு பயம் .

      தெருவை அடைந்து திரும்பியவன்  பார்வையில்.. அந்த சின்ன பிள்ளையார் கோவில் . 

      வீட்டில் விளக்கு இல்லாததால், தான் படித்த,  தனக்குப் படிப்பு சொல்லித் தந்த கோவில்’ டியூப்’  லைட் கண்ணில் மிணுமிணுக்க..அது கண்ணை மூடி, மூடி திறந்து எரிந்துகொண்டிருந்தது .

       “ அம்மா ..” அலறியவனாய் வேகமாக கதவை திறந்து உள்ளே பாய்ந்தவனை வரவேற்க, அங்கு அம்மா இல்லை .

        “ ஐயா.. பரமசிவன் ஐயா. “ 

     அடுத்த வீட்டை   அணுகி கூப்பிடப் போனவன், கும்பல் கும்பலாய் கிராமமே போவதைப் பார்த்து,

     அந்த திசையில் நான்கு அடி எடுத்து வைக்க,

     பஞ்சாயத்துப் பள்ளி திண்ணையில் அவன் அம்மா.. மாலை பத்திகளுக்கிடையே ‘நிரந்தர’ நித்திரையில்.  

      “ ஐயோ.. அம்மா.  உன்னைப் பார்க்கத் தானே  இப்ப ஓடோடி வந்தேன்.  அதுக்குள்ள போயிட்டியேம்மா . அம்மா..வா “  காலைக் கட்டிக்கொண்டு அழுதான்.

     “ பாவி ..கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்றான். புண்ணியவதி எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா. பையன் ,  இன்னைக்கு ஊருக்கு போனதும் கதறிக்கிட்டு ஒடி வந்து , இதை..என் வீட்டை , எப்படியாவது.. யாருக்காவது வித்து,   என் பையனை வரச்சொல்லி லெட்டர்  போடுங்கன்னு சொன்னவ’ பொட்டு’ னு உசிரை விட்டுட்டாளே ”

      பாசம் நிறைந்த அம்மாவிற்காக ஊரே கதறி அழுதது.

                                          -o-o-o

 



Rate this content
Log in

Similar tamil story from Tragedy