2023, என் கவி உலகு
2023, என் கவி உலகு
1.
இத்தனைக்கும் பிறகா காதல்
இத்தனைக்கும் அர்த்தமே இந்த காதல் தான்...
2.
நான் மறுக்கப்பட்ட வரலாற்றில் கண்டெடுத்த தேசம்
நான் மறைக்கப்பட்ட தேசத்தின் பரிச்சய மொழி
அழித்த வரைபடத்தின் எல்லை கோடு
ஆதரவில்லா மனிதனின் தாய் வீடு
3.
நினைவிழந்து போகும் போதும்
நீ எனை தீண்டும் போது
அந்த பரிச்சயம் நிச்சயம் இருக்கும்
என் காதல் அவ்வளவே
4.
ஒரே ஒரு கல்லு வெச்ச மூக்குத்தி
அதுக்காகவே செஞ்ச மாதிரி ஒரு மூக்கு
மூக்குத்தி -அ விட மின்னுற oru சிரிப்பு
இதுக்கெல்லாம் திருஷ்டி-க்கு அந்த குட்டி வெக்கம்
நான் கண்ணம்மாளின் காதலன்
5.
அழகியலும் காதலும் எழுதப்பட்ட கவிதை சாக கிடக்கிறது
அதற்கு நான் சிறிது அறிவியலும் அரசியலும் தேய்த்து மருந்து கட்டி வருகிறேன்
கொஞ்சம் பொறுங்கள் பேனாவின் மையை இரத்தம் நிரப்புகிறது
போரின் வாடை காகிதத்தில் படும் முன் என் பேப்பரில் கதறட்டும்
6.
எழுதா கடிதங்கள் காகித பூக்கள்
பகிரா அன்புகள் உலர்ந்த பூவிதழ்
யதார்த்தம் வாழ்வின் மகரந்தம்
ஏகாந்தம் இயற்கையின் சித்தாந்தம்
7.
துயரங்களை இரவிடம் இரவல் கொடுத்து தூங்க செல்லுங்கள்
இரவு இரக்கமுற்று சிறிது காயங்களைக் கடத்தி செல்லட்டும்
8.
கவிதையின் வலி புரிந்த புத்தக பக்கம் கவிஞனின் கண்ணீர் துடைக்க கை நீட்டியது
பேனா முனை கவிதை உணர்த்திய வலி அறிந்து ஒரு துளி மை சிந்தியது
இவை எதுவும
் அறியா கவிஞன் அடுத்த கவிதை எழுத மறு பக்கம் புரட்டினார்
9.
நித்தம் நிஜங்களின் நிழல்
உன் நினைவின் மடல்
என் மந்திர கடல், நம் காதல்
10.
கவிதையின் கடைசி வரி எழுத நினைப்பதெல்லாம் உன் பெயர் மட்டுமே
11.
இரவில் சில நொடி இரவல் பெற்று உன் பெயரை துதித்து வாழ்வேன்
12.
சாலை ஓரத்தில் மழை காலத்தில் பருகும் முதல் சொட்டு தேநீர் அவன் காதல்
மதிய வேளையின் முடிவு நேரத்தில் படரும் இளைய தென்றல் அவன் காமம்
13.
இறப்பு மனிதர் உரு எடுத்தால் வாழ்க்கை தரும் துயர் கண்டு மாந்தர் அனைவரயும் உடன் அழைத்துச் சென்றுவிடும்.
14.
ஆழ் கடல் போலும்
மழை போலும்
அமைதி தரும் மனிதர்களை என்றேனும்
நீங்கள் கண்டால்
அரை மணி நேரமாயினும் அவர் மடியில் அயர்ந்து உறங்கிடுங்கள்
வாழ்க்கை அவ்வளவே
15.
புத்தன் ஆசையை துறக்க ஆசை பட்டு அழுத கண்ணீரில் முளைத்த போதி மரம் அது
16.
இறந்து சருகாகி உதிரும் இலைகள் மண்ணோடு மண்ணாகி அம்மரத்திற்கு உறமாகும் துரதிஷ்டம்
17.
மருந்து வாசம் மனதிலும்
மருத்துவமனை வேண்டுதல்கள் உயிரிலும்
இரத்த கறை கையுறையிலும்
இல்லாமல் போயிருந்தால்
கவிதையின் மீதுள்ள காதல் சிறிது சலித்து இருக்குமோ என்னவோ
18.
நான் எழுதிய கடைசி கவிதையின் கசப்பு என் நாவை பிரியும் முன் இறந்து விட்டால் அதுவே போதும்- என் வாழ்க்கையுடன் ஒற்றை வேண்டுதல்