Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.
Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.

DEENADAYALAN N

Action Crime


5  

DEENADAYALAN N

Action Crime


டிடக்டிவ் விவான்!

டிடக்டிவ் விவான்!

7 mins 257 7 mins 257

Suspense 

டிடக்டிவ் விவான்!

(கோவை என். தீனதயாளன்)


காவல் ஊர்தியின் சைரன் ஒலி உறங்கிக் கொண்டிருந்த மிச்சம் மீதி மக்களையும் எழுப்ப மேலும் கூட்டம் பெருகி விட்டது. அது ஒரு நடுத்தர வகுப்பு பகுதி. காலை ஆறு மணிதான். ஆனாலும் அந்த பங்களாவின் முன் திரளான கூட்டம். காவலர்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க மிகுந்த சிரமப்பட்டார்கள்.

             

அந்தப் பகுதியில் வசித்து வரும் பிரபல பிரமுகர் க்ருஷ்பரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக செய்தி பரவிக் கொண்டிருந்தது. மேலும் சில ஜீப்புகளும் ஆம்புலன்சும் வந்து சேர்ந்தன.


அதில் பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு டிடக்டிவ் விவானின் வாகனமும் வந்து நின்றது. அதிலிருந்து ஸ்டைலாக விவான் இறங்கினான்.


க்ருஷ்பரன் உடலைச் சுற்றி அதிகாரிகள். கேமராக்கள் தொடர்ச்சியாக ‘பளிச்’சிட்டுக் கொண்டிருந்தன.


விவானைப் பார்த்த உடன் உயர் அதிகாரி ‘வா விவான்.. உனக்காகத்தான் காத்திருக்கிறோம்.. முதற்கட்ட விசாரணையைத் துவக்கலாமா?’ எனக் கேட்டபடியே வரவேற்றார்.


‘ஸ்யூர் சார்.. ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் சார்’ என்ற படியே அந்த அறையைச் சுற்றிலும் தன் உளவுப் பார்வையை மேய விட்டான் விவான்:

அந்த அறை ஒரு சமையல் அறை. சமையல் மேடையில் நான்கு அடுப்புகள் கொண்ட கேஸ் ஸ்டவ். அதில் வலது மேல் மூலையில் இருந்த ஒரு அடுப்பின் மேல் ஒரு தோசைக்கல். அதில் வெந்தும் வேகாமலும் ஒரு ஆம்லெட் பல்லிளித்துக் கொண்டிருந்தது. அருகில் ஒரு ‘சட்டுவம்’(தோசை திருப்பி). மேடை மேல் ஒரு சிறிய பாட்டில் சரிந்து கிடக்க அதிலிருந்து கொஞ்சம் வெண்கரு நிறத்தில் சிதறியிருந்த மிளகுப் பொடி. கீழே தரையில் இரண்டு முட்டைகள் உடைந்து அதன் உள்ளீடுகள் வெளியே வந்து வயிற்றைப் புரட்டும் ஒரு துர்நாற்றம். (‘ஹைட்ரஜன் சல்ஃபைட்’-இன் குணாதிசயம் (Hydrogen Sulfide – colorless, flammable with rotten egg smell)) விவானின் மனசுக்குள் வந்து போயிற்று. அதன் அருகிலேயே உடல் சுருண்ட வாக்கில் கிடந்தது.

மேடைக்கு நேர் எதிரில் ஒரு ஃப்ரிட்ஜ். அதனுள்ளே சில பாத்திரங்கள். அதில் ஒரு பாத்திரத்திலிருந்து இட்லிமாவு பொங்கி வழிந்திருக்க, ஃப்ரிட்ஜ் கதவில் இரண்டு பீர் பாட்டில்கள், ஒரு சோடா பாட்டில், ஒரு ‘தக்காளி சாஸ்’ பாட்டில். அரை பேக்கட் ‘சேண்ட்விச்’ ரொட்டி. ஒரு வெண்ணைப் பேக்கட் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஒரு அடுக்கில் முட்டைகளுடன் ‘ட்ரே’க்கள் வைக்கப்பட்டிருந்தன. ஃப்ரிட்ஜிக்கு பக்க வாட்டில் இருந்த சுவற்றில் ஒரு சிவப்புக் கறை தெரிந்தது – நல்ல செந்நிறமாய்.. ஆனால் அது ரத்தக் கறை அல்ல!


எல்லாவற்றையும் உற்று உற்று பார்த்தான் விவான். தன் கையில் இருந்த செல்போனில் சில விவரங்களைக் குறித்துக் கொண்டான்.


சற்றே வெளியில் சென்று ஓரிரு இடங்களை கைப் பேசியில் அழைத்துப் பேசினான். சில விவரங்களை குறித்துக் கொண்டான்.


மீண்டும் அறையை ஒரு சுற்று சுற்றி வந்தான். சமையல் மேடை, அதில் சிதறிக் கிடந்த பொருள்கள், ஃப்ரிட்ஜினுள் ஒரு கண்ணோட்டம், கறை, சுவர்…விவான் கண் ஜாடை காட்ட, விசாரணையைப் பதிவு செய்து கொள்ள, ஒலிப்பதிவாளர் தன் ஒலிப்பதிவு கருவியை இயக்கத்திற்கு கொண்டு வந்தார்.


விசாரணை தொடங்கியது.


முதலில் காவல்காரரை (செக்யூரிடி) அழைக்கலாம் என்றார்கள். ஆனால் விவான் முதலில் அழைத்தது உதவியாளர்-கம்-சமையல்காரர் கதுரனைத்தான். . 


கதுரன் ஆரம்பித்தான்: ‘ஐயா க்ருஷ் ஐயா எப்பவுமே சீக்கிரம் சாப்பிட மாட்டார். என்னை ஏதாவது செய்து வைத்து விட்டு கிளம்பி விடச் சொல்வார். அதன் பிறகு அவர் கொஞ்சம் தாமதமாக ‘ட்ரிங்க்ஸ்’ பண்ணி விட்டு அப்புறம்தான் சாப்பிடுவார். நான் நேத்து ராத்திரி கிளம்பினப்போ க்ருஷ்பரன் ஐயாகிட்டே “சாப்பிட என்ன செய்யறது” ன்னு கேட்டேன். “நீ ஒன்னும் செய்யாதே. நானே வேணும்ங்கறப்போ சூடா ஆம்லெட்டு போட்டுக்கிற மாதிரி, அதுக்கு வேணும்ங்கறதை எல்லாம் எடுத்து சமையல் மேடை மேலே வெச்சிட்டு நீ போய்க்கோ” அப்பிடீன்னு சொன்னாருங்க. நான் முட்டை, பெப்பர் பவுடர், உப்பு, எண்ணை இதையெல்லாம் எடுத்து சமையல் மேடை மேல வெச்சிட்டு கிளம்பிட்டேன். வழக்கம் போல காலைலே அஞ்சு மணிக்கு டூட்டிக்கு வந்தேன். கிச்சனுக்கு வந்தா ஐயா செத்துக் கிடக்கறாரு’ என்று கொஞ்சமாக கண் கலங்கினான்.


முக்கிய அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த விவான், மீண்டும் தன் பார்வையை ஃப்ரிட்ஜுக்குள் செலுத்தினான். சில பொருள்களையும் இடங்களையும் குறிப்பிட்டு புகைப்படங்கள் எடுக்க சொன்னான்.


பிறகு கதுரனை உற்று நோக்கி ‘துராங்..’ – விவான் சற்று இழுக்க..


‘கதுரன் சார்…’ என்று தன் பெயரை கதுரன் எடுத்துக் கொடுத்தான்.


‘ஹூம்.. கதுரா.. நேத்து இரவு நீ இங்கிருந்து போகும்போது எவ்வளவு மணி இருக்கும்?’


‘பத்து பதினொன்னு இருக்கும் சார்..’


‘பத்தா… பதினொன்னா… சரியா சொல்லு’


‘பத்தரைதான் சார்.. ஏன்னா அப்பொதான் ‘ப்ரிஸ் டிவி’லே செய்திகள் முடிஞ்சது. அந்த டிவிலே பத்தரைக்குதான் செய்திகள் முடியும் சார்.’


‘அப்பொ ஏன் மொதல்லே ‘பத்து பதினொன்னு’ ன்னு மாத்தி சொன்னே?’


‘அவ்வளவு சரியா கேக்க மாட்டிங்கன்னு நெனச்சேன் சார்..’


‘உனக்கு தெரியுமா? போலீஸ்கிட்டே ஒரு விவரம் சொல்றப்போ எப்பவுமே சரியா துல்லியமா சொல்லணும்.’


‘ஆமா சார்’


‘அப்புறம் ஏன் அப்பிடி சொன்னே’


‘இனிமே எல்லாமே சரியா சொல்றேன் சார்’


‘குட்! க்ரிஷ்கரன் சார் ரெகுலரா குடிப்பாரா?’


‘ஆமா சார்’


‘என்ன குடிப்பார்?’


‘ட்ரிங்க்ஸ் சார்’


‘பார்த்தியா.. இப்பொதான் சொன்னேன் எதையுமே துல்லியமா சொல்லணும்னு.. சும்மா பொத்தாம்பொதுவா ‘ட்ரிங்க்ஸ்’னு சொல்றியே?’


‘சாரி சார்.. மார்ப்பீஸ் ப்ராந்தி, டீச்சர்ஸ் ஹைலேண்ட் விஸ்கி, பட்வைசஸர் பீர் இதெல்லாம் சாப்புடுவாரு சார்’


போலீஸ் அதிகாரிகள் அத்தனை பேரும் சிரித்து விட்டனர்.


‘உனக்கு எப்பிடி இந்த பேரெல்லாம் தெரிஞ்சது?’ விவான் கூர்ந்து நோக்கிக் கொண்டே கேட்டான்.


‘எனக்கு கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும் சார்.. அந்த பாட்டில் இல்லன்னா ‘பேக்’ல இருந்து படிப்பேன் சார்’


‘அப்பொ நீயும் குடிப்பேன்னு சொல்லு’


‘எப்பவாவது சார்..’


‘எப்பவாவதுன்னா? நீயும், க்ருஷ்பரன் சாரும் ஒன்னா குடிப்பீங்களா’


‘ஐயையோ அப்பிடி இல்ல சார்.. ‘


‘பின்ன எப்பிடி?’ விவான்


‘பாட்டில்லே கடைசிலே கொஞ்சம் இருந்தா அதை அவர் யூஸ் பண்ண மாட்டார் சார். அப்பிடியே போட்ருவார். நான் அதை எடுத்து அவருக்கு தெரியாமெ, வீட்டுக்கு கிளம்பறப்போ சாப்ட்ருவேன் சார்.. ‘


‘கொஞ்சம்தானே மிச்சம் இருக்கும்..’


‘இல்லே சார் சில சமயமனொரு கட்டிங் அளவுக்கு மேலேயே கூட இருக்கும் சார். சில சமயம் ரெண்டு, மூனு பாட்டில்லே இருக்கறதை சேத்து கலக்கி குடிச்சிருவேன் சார்.’


‘காக்டெயில்..?’ விவான்


கதுரன் வழிந்தான்!


‘நேத்து நீ இங்க இருந்து கிளம்பறப்போ அந்த மாதிரி ஏதாவது குடிச்சிட்டுதான் கிளம்பினையா?’


‘இல்லே சார்.. அந்த மாதிரி மிச்சம் வெச்ச பாட்டில் எதுவும் இல்ல சார்.’


மீண்டும் அதிகாரிகள் சிரித்தார்கள்.‘சரி! நேத்து நீ மார்க்கெட் போனியா?’


முதல் முறையாக விவானை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தான் கதுரன். அவன் முகத்தில் ஒரு பய ரேகை மின்னி மறைந்ததை விவானும் கவனித்தான்.


‘ம்.. சொல்லு.. ‘ விவானின் குரலில் ஒரு மெல்லிய மிரட்டல்.


‘ஆமா.. சார்.. போயிருந்தேன்..’ தயக்கத்துடன் சொன்னான்.


‘என்னென்ன வாங்கிட்டு வந்தே?’


‘வந்து சார்.. கொஞ்சம் அரிசி, பருப்பு, எண்ணெய் இதெல்லாம் வாங்கிட்டு வந்தேன் சார்’‘வேற ஒண்ணுமே வாங்கலையா?’


‘இல்லே சார்..’


‘அப்பொ நேரா மளிகைக் கடைக்குப் போயிட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டே.. இல்லயா?’


‘.. ம்.. ஆமா சார்.. கரெக்ட்.. வந்துட்டேன் சார்’ தவித்தான் கதுரன்


‘வேற எந்த கடைக்கும் போகலை?’


‘ம்.. ம்.. இல்லே சார்’


‘சரி.. அந்த மளிகைக் கடை ‘பில்’லை எடு பார்க்கலாம்..’ – விவான்


‘பில் இல்லை சார். ஒரு நோட்டில்தான் எழுதி வாங்கி வருவேன். மாசம் ஒரு தடவை க்ருஷ்பரன் ஐயா பணத்தைக் குடுத்திருவாரு ’


‘சரி. அந்த நோட்டை எடு..’


‘இல்லை சார் நேத்து அந்த நோட்டுலே எழுதலே சார்..’


‘அப்போ மளிகைக் கடைக்கு போன் செய்து பில் எவ்வளவாச்சின்னு கேளு’ விவான் ஆணையிடும் தோரணையில் சொன்னான்.


‘வந்து.. போன் நம்பர்..’


‘தெரியாதா..?’


‘தெரியாது சார்’


‘நான் சொல்றேன்.. போன் பண்ணு‘ விவான் நம்பரை சொன்னான்.


கதுரன் திருதிருவென விழித்தான். ‘இந்த நம்பர் இல்லே சார்..’


‘அப்பொ உனக்கு நம்பர் தெரியும்.. இல்லையா.. முதல்லே ஏன் தெரியாதுன்னு சொன்னே?’


‘இல்லே சார்.. நேத்து நான் மளிகைக் கடைக்கே போகலே சார்’


விவான் கதுரனை ஒரு முறை முறைத்தான். கதுரனுக்குள் ஒரு நடுக்கம் ஊடுருவியது.


‘அப்பொ… நேத்து… எ..ங்…க.. போயிருந்தே..’ ஒவ்வொரு வார்த்தையிலும் விவான் அழுத்தத்தைக் கொடுத்து சொன்னான்.


‘எங்கேயும் போகலே சார்.. இங்க.. வீட்டுலே தான் இருந்தேன்.. சார்..’


‘உண்மையாவா?’


‘சத்தியமா சார்..’‘அட சத்தியசுந்தரா, நேத்து சுமார் ஐந்து மணிக்கு உன்னை முட்டைக் கடையிலே பார்த்ததா யாரோ சொன்னாங்களே?’


அதிகாரிகளும் மற்றும் அங்கே குழுமி இருந்த முழு போலீஸ் டெக்னிகல் குழுவும் தலை நிமிர்ந்து கதுரனையும் பின்னர் விவானையும் பார்த்தனர்.


‘வந்து.. இல்லே சார்.. ஆமா.. சார்.. வந்து முட்டை.. வந்து’ திணறினான் கதுரன்.


விவான் ஒரு உளவுப்பார்வை கொண்டு அவனை ஊடுருவினான்.


அம்பு தாக்கிய பறவையைப் போல் துவண்டு போனான் கதுரன்.


‘அ.. அ.. ஆமா சார்.. கட்டை முடைக்கு.. வந்து.. முட்டைக் கடைக்கும் போயிருந்தேன் சார்.’


‘அப்புறம் ஏன் அதை நீ சொல்லலே?’


‘வந்து.. இப்போ.. சொல்லிட்டேன்.. சார்..’


‘எத்தனை மணிக்கு முட்டைக் கடைக்கு போனே?’


‘சாய்ந்தரம் நாலு மணி இருக்கும் சார்..’


‘நாலு மணி இருக்கும்னா.. இப்பொதானே சொன்னேன் போலீஸ்கிட்டே சரியா துல்லியமா சொல்லனும்னு’ அதட்டினான் விவான்.


‘நாலு மணிதான் சார்’


‘எத்தனை மணிக்கு திரும்பி வந்தே’


‘வந்து.. ஏழு மணி இருக்கும் சார்’


‘மூனு மணி நேரமா முட்டை வாங்கினியா?’


‘..வந்து.. ஆமா.. சார்..’


‘முட்டை வாங்கறதுக்கு மூனு மணி நேரமா’ – விவான் சற்று அழுத்தமாகக் கேட்டான்.


‘வந்து.. சார்.. அந்த முட்டைக் கடைக்காரன் எனக்கு தெரிஞ்சவன் சார்.. அவன்கிட்டே பேசிகிட்டு இருந்தேன் சார்..’


‘இல்லையே.. முட்டைக்கடைக்காரை இப்பொதான் போன்லே கூப்பிட்டு கேட்டேன். நீ முட்டைகளை வாங்கிட்டு உடனே கிளம்பிட்டதா சொல்றாரே…’ கதுரனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.


‘வந்து.. வந்து.. இல்லே சார்..’ கதுரனுக்கு நாக்கு வறண்டு போனது. ‘சார் கொஞ்சம் தண்ணீ…’ என்று இழுத்தான்.


‘போ.. போய்த் தண்ணியக் குடிச்சிட்டு, அதோட உன்னோட புளுகு மூட்டைகளை எல்லாம் முழுங்கிட்டு, வந்து உண்மையை மட்டும் சொல்லு’ விவான் அனுமதி அளித்தான்.


(‘எப்பிடி விவான்.. முட்டைக் கடைக்காரன் போன் நம்பரெல்லாம் எப்பிடி..’ உயர் அதிகாரி ஒருவர் கேட்டார்.


‘உண்மையை நெருங்கிட்டேன் சார்.. இந்த விசாரணையை முடிச்சிட்டு விவரமா சொல்றேன் சார்.’ விவான் சொல்லி முடிக்க கதுரன் தண்ணீர் குடித்து விட்டு வந்து பவ்யமாக உட்கார்ந்தான்.)


‘சொல்லு.. முட்டைக் கடையில இருந்து நேரா எங்கே போனே?’ விவான்.


‘வந்து சார்.. சார்.. வந்து…’ தடுமாறினான் கதுரன்.


‘சொல்றயா இல்லே சொல்ல வெக்கணுமா?’


‘வந்து ஒரு ஆளப்பாக்கப் போனேன் சார்..?’


மற்ற அதிகாரிகள் ஒருவரை ஒருவர் வியப்பாக பார்த்துக் கொண்டனர்.


‘அப்படியா.. சரி. அதுக்கு அப்புறம் வர்றேன். அதுக்கு முன்னாடி இதுக்கு பதில் சொல்லு. முட்டைக் கடையிலே எத்தனை முட்டை வாங்கினே?’


‘வந்து.. ஒரு ‘ட்ரே செட்’ சார்..’


‘அப்பிடின்னா எவ்வளவு?’


‘ஒரு ‘செட்’ல நாலு ட்ரே இருக்கும் சார். ஒரு ட்ரேலே ஆறு முட்டை இருக்கும் சார்.’


‘அப்பொ மொத்தம் எவ்வளவு முட்டை?’


‘இருபத்திநாலு சார்’


‘எதுக்கு அவ்வளவு வாங்கினே?’


‘ஃப்ரிட்ஜுலே ஒரே.. ஒரு.. முட்டைதான் இருந்துது சார்’ விழுங்கி விழுங்கி சொன்னான் கதுரன்.


‘வாரே.. வா..’ விவான் இடியென முழங்கினான்.


‘அப்போ க்ருஷ்பரன் சாருக்கு நீ வாங்கிட்டு வந்த ட்ரேல இருந்துதான் ஐந்து முட்டைகளை எடுத்து சமையல் மேடை மேல வெச்சிட்டு வீட்டுக்கு கிளம்பினே. இல்லையா..?’


‘அ..ஆமா சார்..’


‘சரி. இப்பொ ஃப்ரிட்ஜை திறந்து பாரு.. நீ வாங்கிட்டு வந்த ட்ரேசெட்ல இருபத்திநாலு முட்டைகளும் அப்பிடியே இருக்கு. அதையும் தவிர ஏற்கனவே இருக்கும் எட்டு ட்ரேலே நாற்பத்தெட்டு முட்டைகளும் அப்பிடியே இருக்கு.’


கதுரன் பயத்தின் உச்சியில் விவானை நிமிர்ந்து பார்த்தான்.


‘இப்பொ ஒண்ணு விடாமெ எல்லா விவரங்களையும் சொல்லு.. இனி எதையாவது மறைச்சே, ‘தேட் டிக்ரிலே’ உன்னை மூக்கி எடுத்துருவாங்க.’ என்று எச்சரித்து விட்டு நிமிர்ந்தான் விவான்.


‘சரி முட்டைக் கடையிலே இருந்து போய் நீ ஒரு ஆளை சந்திச்சயே. எதுக்கு?’


‘‘அவனும் முட்டைதான் கொண்டு வந்து கொடுத்தான் சார்?’’


எல்லோரும் கதுரனை ஆச்சரியமாகப் பார்த்தனர். அதைப் பார்த்த கதுரன் ‘இல்லே சார்.. அவன் கொண்டு வந்த முட்டை வேற சார்..’


‘வேறேன்னா..?’


‘எல்லாம் தங்க முட்டை சார்’


‘தங்க முட்டையா!!!?’


‘ஆமா சார்.. அவன் நேத்து பன்னிரண்டு முட்டை கொண்டு வந்தான் சார். அத்தனை முட்டைக்குள்ளையும் தங்கம் இருக்கும் சார்’


‘எதுக்கு கொண்டு வந்தான்?’


‘க்ருஷ்பரன் ஐயாவோட பிஸினஸ் சம்மந்தப் பட்டது சார்?’


‘சரி எல்லா விஷயத்தையும் விவரமா சொல்லு’ என ஒரு இடைவெளி விட்டான் விவான்.


கதுரன் சொன்னான்:

‘சார் க்ருஷ்பரன் ஐயாவுக்கு இதுதான் பிஸினஸ் சார். கடத்தல் தங்கம், கள்ளத் தங்கம் அது இதுன்னு சின்ன சின்னதா கட் பண்ணி முட்டை வடிவத்துக் குள்ளே இருக்கற ஒரு ப்ளாஸ்டிக் முட்டைல போட்டு பார்ட்டிகள் இங்க கொண்டு வந்து தருவாங்க சார். இதை க்ருஷ்பரன் ஐயா தன்னோட வேற வேற பார்ட்டிகள் மூலமா விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுவாரு சார். சந்தேகம் வராம இருக்கறதுக்காக நிஜமான முட்டைகளோடு இதைக் கலந்து, ட்ரேக்களில் வெச்சி, சைக்கிள்லே பின்னாடி கட்டி பார்ட்டிகளுக்கு கொடுத்தனுப்பிச்சிருவாரு சார். அதுலே அவருக்கு நிறைய லாபம் கிடைக்கும் சார்.’


‘சரி.. அவரை ஏன் நீ கொலை பண்ணினே? எப்பிடி பண்ணினே?’ விவான் கேட்டான்,


இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்த கதுரன் ‘இந்த முறை சுமார் நாப்பத்தியெட்டு தங்க முட்டை சேர்ந்திருச்சி சார். எனக்கும் முட்டை கொண்டு வருகிறவனுக்கும் திடீர்னு ஒரு சபலம் சார். இந்த முறை தங்க முட்டைகளையெல்லாம் எடுத்துகிட்டு எங்கேயாவது போய் பொழச்சிக்கலாம்னு நெனச்சோம் சார். அதனாலே நேத்து நைட் க்ருஷ்பரன் ஐயா சாப்ட்ட பெப்பர் பாட்டில், அப்புறம் உப்பு பாட்டில்ல விஷம் கலந்துட்டேன் சார். இந்த களே பாரமெல்லாம் முடிஞ்ச உடனே போயிரலாமின்னு நெனச்சோம் சார். அதுக்குள்ளே நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க சார்…’ஒரு தனி அறை. விவானும் மேலதிகாரிகளும் குழுமி இருந்தார்கள்.


மேலதிகாரி ஆச்சரியத்துடன் விவானை நோக்கியவாறு, ‘விவான். ஓரளவுக்கு எல்லாம் புரிஞ்சது. ஒரே ஒரு முக்கியமான கேள்வி. முட்டையை எப்பிடி இந்தக் கேசுலே சம்மந்தப் படுத்தி யோசிச்சே? நீ எங்கேயும் போகலே. இங்கதான் இருந்தே. இருந்தாலும் முட்டைக் கடைக்காரன் போன் நம்பர் எப்பிடி கெடைச்சிது!?’


விவான் சொன்னான்: ‘சார் ஆம்லெட் முட்டை அது இதுன்னு வெளிலே பார்த்த உடனேயே எனக்கு என்னமோ க்ருஷ்பரனை இதுலதான் விஷம் வெச்சி கொன்னிருக்கலாம்னு மனசுக்கு பட்டுது. அப்பிடி நெனச்சிகிட்டே ஃப்ரிட்ஜை ஆராய்ஞ்சப்போ புத்தம் புது ட்ரேல இருபத்துநாலு முட்டை இருந்தது. பக்கத்துலே இன்னும் நிறைய ட்ரேல நிறைய முட்டைகள் இருந்துச்சி. எதுக்கு இவ்வளவு முட்டைகள்னு எனக்கு ஒரே ஆச்சரியம்! இதுலதான் ஏதோ ஒரு ‘க்நாட்’ (முடிச்சு) இருக்கு. அதோட அந்த புது முட்டை ட்ரேல முட்டைக் கடையோட போன் நம்பரும் கடை பேரும் இருந்துச்சி. உடனே வெளிலெ வந்து அந்த கடைக்கு போன் பண்ணி விசாரிச்சேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இந்த வீட்டுல இருந்து முட்டைகளை ட்ரேல வாங்கிட்டுப் போற விவரத்தையும் அவுரு சொன்னாரு. நேத்து முட்டை வாங்க கதுரன் போன சுமாரான நேரத்தையும் உடனே அவசர அவசரமாய் அங்கிருந்து கிளம்பிப் போனதையும் சொன்னாரு. அந்த விவரங்களை வெச்சிட்டு ஒரு ப்ளான் பண்ணி விசாரணையை ஆரம்பிச்சேன். அது சரியா ஹிட் ஆயிருச்சி சார்.


விவானை எல்லோரும் பாராட்டி விட்டு மேற்கொண்டு வேலைகளைத் தொடர அதிகாரிகள் விரைந்தனர்.


தன்னுடைய பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு வாகனத்தில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, டிடக்டிவ் விவான் கிளம்பினான்.கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

More tamil story from DEENADAYALAN N

Similar tamil story from Action