திகில் சூழ்....
திகில் சூழ்....


இரவு வேளை .
கடும் பனி .கை கால் உறைந்து ,குளிர் தாங்காமல் என் க்ளோவ்ஸ் எடுத்து மாட்டிக்கொண்டேன்.உடம்பினுள்ளேயும் வெளியேயும் கடுமையான நடுக்கம். .ஒரு வித ஈரப்பதம் உடம்பில் ஊறிக்கொண்டே இருக்க இடுக்குகளில் புகுந்து மெதுவாய் நடந்தேன்.
நான் நுழைந்த இடம் மற்றும் நேரம் ஒரு வித அமானுஷ்ய உணர்வைப் பரப்பிவைத்திருந்தது .ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க,என் காலடி சத்தம் அதிகமாய் எனக்கே கேட்டது .
நிசப்தம் - உலகில் ஆயிரம் பேர் நம்மைச் சுற்றிக் கூச்சலிட்டாலும் ,ஒற்றை மனிதனாய் அங்கு ஒருவனால் எளிதாய் இருந்துவிட முடியும்.ஆனால் நிசப்த சூழ்நிலைகள் மனிதனைச் சோதிக்க உருவாக்கப்பட்டவை .ஒருவனின் மனதிடம் ,தைரியம் எல்லாம் கேள்விக்குறியாகக் கூட ஆகிவிடும் - ஆக்கிவிடும் !! அமைதியின் முரட்டு சுபாவம் அது .
அந்த அறைக்குள் நுழைந்தேன்.வெளிக்காற்று சிறிதும் உள்ளே நுழையவில்லை .அங்கும் இங்குமாக ,பல சடலங்கள் இருக்கைகளில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தன.அசைவுகள் இல்லா சூழ்நிலை .நிசப்த நிலையின் இரைச்சல் மிக அதிகமாக இருந்தது.
அமர்த்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களை ஓவ்வொன்றாய் கடந்தேன்.மனதில் ஒரு வித இறுக்கம் .என் இமைகள் மட்டுமே அசைந்தன.தலை அசையவில்லை .இறைவன் படைப்பில்,ஒவ்வொரு மனிதனும் தனித்து தெரிவான்.குணங்களிலும் சரி ,உருவத்திலும் சரி.கருமை நிறத்தில் ஒன்று ,திடமான உடற்கட்டுடன் ஒன்று ,நீளமான மூக்கு ,அழகிய கண்கள்,மெலிந்த உடற்கட்டு ,கட்டையான மீசை ஒன்று,நீண்ட கூந்தலுடன்ஒன்று ,ஒரு பக்கம் சராய்த்த தலையுடன் ஒன்று என்று வித விதமாய் சடலங்கள் அமர்த்திவைக்கப் பட்டிருக்க , மனதைரியத்தை அதிகரித்துக்கொண்டு ஒவ்வொன்றாய் கடந்தேன்.
எப்படி எல்லாம் இருந்திருப்பார்கள் வெளியே .இங்கு வந்து இவ்வாறு இருக்க .
என் நெஞ்சு படபட என்று அடித்தது .அமர்ந்திருந்தவைகளில் என்னால் ஒரு ஒற்றுமையை மட்டும் காண முடிந்தது.எல்லாவற்றிற்கும் தலை பாகம் பெரிதாய் வீங்கி சற்று பயங்கரமாகவே காட்சி அளித்தது.
பார்த்துப் பார்த்து ஒவ்வொரு அடி எடுத்து வைத்தேன்..என்னால் ,குளிர் மற்றும் அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் சட்டென்று ஓரிடத்தில் அமர ,என் கை கடிகாரம் ,கம்பிகளில் பட்டு "டிங்க்க்க்க்க் " என்று ஓசையெழுப்பியது .
திடீரென்று மூன்று சடலங்கள் கண்விழித்தன .கூர்மையான கண் பார்வைகள் என் மேல் விழ ,ஒரு நொடி உறைந்தேன்.நா எழும்பவில்லை .வார்த்தைகள் சேரவில்லை .அவைகளின் உடம்பில் சிறிதும் அசைவில்லை.ஆனால் கண்கள் கூர்வாள் போல் என்னை நோக்கியது.என்னால் பார்வையின் வீரியத்தை தாங்க இயலாமல் ,என் கண் இமைகள் கீழே விழ ,அவைகள் மீண்டும் கண்கள் மூடின.
தொண்டை வறண்டது .தண்ணீர் தேவை.ஆனால் என்னிடம் இல்லை.சுற்றி எவரிடம் கேட்பதற்கு ,மனிதர்களின் நடமாட்டம் இல்லை .எச்சில் முழுங்கினேன்.
ஒருகணம் சிந்தித்தேன்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சமாளிக்க,அவர்கள் வழியே சென்றால் தான் முடியும் .எதிரே இருப்பவைகளை உற்று நோக்கினேன்."உன்னை உன் வழியிலேயே எதிர்கொள்வது தான் சரி " என்றெண்ணினேன்.மனதை பக்குவப்படுத்தினேன்் .
அடுத்த நொடி என் தலை இருபக்கமும் வீங்க ஆரம்பித்தது.அவர்களைப் போல் அசைவற்ற சடலம் ஆனேன்.அந்த உலகில் சத்தங்கள் அதிகம். ஒருவரை ஒருவர் சீண்டுவதோ அரவணைப்பதோ இல்லை.வேறு விதமான உலகம் .நானும் அவ்வுலகிற்குள் ஐக்கியமானேன் வேறு வழியின்றி .
கண்கள் மூடின ....என் உலகம் இருண்டது
..
..
..
..
..
..
--
--
--
--
திடீரென்று ஓர் குரல் ...
"Thank you for Travelling with Great Western Railways" என்று.
திடுக்கிட்டு கண் விழித்தேன்.
"அய்யயோ ,நாம இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சா ? நல்ல வேளை ,எழுப்பி விட்டமா"
என்று அந்த Automated Announcer அக்காவுக்கு நன்றி சொல்லிவிட்டு ,காதுகளில் மாட்டி வைத்திருந்த OVER EAR BLUETOOTH HEADPHONES யை கழட்டி பையில் வைத்துக்கொண்டு , இரயில் பெட்டியிலிருந்து இறங்கி வேகமாய் வீடு நடந்தேன் ,மீண்டும் மனிதனாய்.