இவன் தமிழன்

Abstract Action Others

4  

இவன் தமிழன்

Abstract Action Others

பாண்டியன் ஓயமாட்டான்

பாண்டியன் ஓயமாட்டான்

3 mins
385


 

பல ஆயிரம் யானைகள் , குதிரைகள் , தேர்கள் ,எருதுகள்,பல லட்சம் போர் வீரர்கள் ,பல நூறு தளபதிகள் ,இவர்களுக்கெல்லாம் முதன்மை தலைவனாய் ,களைத்த கருத்த புரவியின் மேல், மன நிறைவுடன் ஒரு தேசத்தின் சக்ரவர்த்தி அமர்ந்திருக்க ,சோழ தேசம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது அந்த மகாசைன்யம் . விசும்பல்கள் கூட இடியாய் ஒலித்து அங்கு அமைதியை கலைத்தது .


 நேற்று நடந்ததைப் போல் இருந்தது .இத்தனை பெரிய தேசம் ! இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் ! வீரம் நிறைந்த மறவர்களுக்கு நடுவே ஊரும் எறும்பைப் போல் நுழைந்து,ஒரு தேசத்தின் அடுத்த சக்ரவர்த்தியாய் திகழவிருந்தவரை சதி செய்து கொன்றுவிட்டார்கள் .உடன் பிறந்த ரத்தம் , கொதிக்காமல் என்ன செய்யும் ! 


மனம் வஞ்சம் தீர்க்கத் துடித்தது .இரவு பகல் பாராமல் தேடியது . தடயங்கள் சிறு துரும்பாயின் சேகரித்தது . தனித்தனியே இட்ட புள்ளிகள் கோலமாய் ஒன்று சேர கயவன் வெளிப்பட்டான் .


காலம் இவரின் அடுத்த திட்டத்திற்காக காத்திருந்தது .காலத்தை இவர் முடிவு செய்தார் .பதவி ஏற்று முதல் கடமை ,காந்தளூர் சாலை கதிகலங்க வேண்டும் .சக்கரவர்த்தி ஆயினும் பாசம்,வஞ்சம் என்ற மனித குணம் இயல்பே .தமையனின் இறுதித் துடிப்பு மனதில் அனலாய் பொரிந்தது .இலக்கு அது ஒன்றே ! முடிவு அவர்களின் அழிவே ! 


சீறிப்பாய்ந்தது சோழப்புலிப்படை .காந்தளூர் சாலை எரியூட்டப்பட்டது .கயவர்களுக்கு வித்தை கற்றுக்கொடுத்த இடம் தடம் இல்லாமல் அழிக்கப்பட்டது .பொறுப்பேற்றபின் முதல் கடமை சரிவர முடிக்கப்பட்டது.

தமயனின் ஆத்மா இளையவரை வணங்கியது .போதும் போதும் என்கிற அளவுக்கு மிருக குணம் தலைதூக்க,வெறியாட்டம் ஒன்று ஆடி அடங்கிய அசுரப் புலிகள் அமைதியாய் வீடு திரும்பிக்கொண்டிருந்தன .


ராஜராஜசோழரின் மனதில் அமைதி குடிகொண்டது.போதும்!

இனியும் இது வேண்டாம்.கடமையை முடித்துவிட்டேன்.இனி என் மக்களின் நலம் ஒன்றே குறிக்கோள்.பாண்டியன் அடங்கிவிட்டான்.சேரன் இனி ஒரு பொழுதும் சோழனை எதிர்க்க மாட்டான்.சோழ தேசத்தில் அமைதி ஒன்றே வேண்டும்.கண்களை மூடிக்கொண்டு அமைதியை ரசித்துக்கொண்டிருக்க , மதுராபுரி எல்லையை படை கடந்தது.


வெகுதூரத்தில் இருந்து ஒருவன் படை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.நடையில் தளர்ச்சி கலந்த வேகம் .இடக்கையில் கொம்பு ஒன்று.கொம்பின் கூர் பாகத்தில் ஒரு மனிதனின் தலை சொருகப்பட்டிருந்தது .வலக்கையில் வாள் .படையை நோக்கி அவன் முன்னேற,சற்றே கண் விழித்த ராஜராஜர் அவனை உற்று நோக்கினார்.


படை நின்றது .படை முன் வந்து நின்றார் அந்த வயது முதிர்ந்தவர்.வல்லவரையர் ,இளவரசர் ராஜேந்திரர்,தளபதி அருண்மொழி மற்றும் படைத்தளபதிகள் முன்னேறி வந்து சக்ரவர்த்தியை சூழ்ந்து நின்றனர்.


"யாரய்யா நீ ? கையில் ஒரு மனிதனின் தலையுடன் ,எவரைக் கொன்றாய் ?எதற்காகப் படையைத் தடுத்து நிற்கிறாய் ? வெற்றி கண்ட படை சோழதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது .வழியில் நிற்காதே .இந்த வயதிலும் ஒருவனை வீழ்த்தி அவன் தலை கொண்டு எங்கள் முன் வந்து நிற்பதைப் பார்த்தால் நீயும் ஒரு சோழனாய் இருப்பாய் என்றே தோன்றுகிறது .சோழம் !சோழம் ! என்று கூறிவிட்டு வழியை விடு ."


வல்லவரையரின் பேச்சில் வெற்றி கண்ட மிதப்பு .படை சிரித்தது .ராஜராஜர் உற்று கவனித்துக்கொண்டிருந்தார் .முதியவர் தன் கொம்பைத் தரையில் ஊன்றி நிக்க வைத்தார்.வலக்கையில் இருந்த வாளை தன் கழுத்தருகே வைத்துப் பெரிதாய்ச் சிரித்தார் .


"முதியவரே !! என்ன செய்யப் போகிறீர் ? தங்கள் உடம்பிலும் பல காயங்கள் உள்ளதே? நவகண்டமா ? அய்யா ,போர் எல்லாம் முடிந்தாகி விட்டது .அடுத்த போர் இருந்தால் சொல்லி அனுப்புகிறோம் .அப்பொழுது வந்து நவகண்டம் கொடுங்கள் ."மீண்டும் வல்லவரையர் நகைக்க,படை முதியவரைப் பார்த்துப் பேயாய்ச் சிரித்தது.


முதியவர் பேசவில்லை.வாய் பேச முடியா ஊமை .வாளை இருகப்பிடித்தார்.


 "அ .......பு .......கா " என்றார் .எவருக்கும் எதுவும் விளங்கவில்லை .

குரல் உயர்ந்தது .


மீண்டும் "அ .......பு .......கா " என்றார் .


வாளைத் தலை கொண்ட கொம்பு நோக்கி நீட்டினார்.நீட்டிய அடுத்த நொடி கண்களில் நீர் ததும்பியது .கதறி அழுதார்.தன் தலைக்குப் பின்னால் வாளை நீட்டி எவரோ வருவதைப் போல செய்கை செய்தார் .


வல்லவரையர் ,குதிரையிலிருந்து குதித்து முதியவர் நோக்கி அடி எடுத்து வைக்கும்முன் முதியவர் மீண்டும் ஒரு முறை அ .......பு .......கா என்று பிளிறிவிட்டு,வாளை வைத்து ,தன் தலை துண்டித்தார்.குருதி சிதறியது.


இத்தனை நேரம் அமைதியாய் கவனித்துக்கொண்டிருந்த ராஜராஜர் திடுக்கிட்டார் .அமைதி நிறைந்த மனதில் பயம் ஆட்கொண்டது .


கொம்பில் செருகிய தலை ! முதியவரின் ஓலம் ! எவரோ வருவதை போல அவரின் செய்கை ! பாண்டியன் ! வீர பாண்டியன் ! ஆதித்த கரிகாலன் ! வீர பாண்டியன் தலை கொண்ட ஆதித்தன் ! ஊமை பெரியவர் ஏதோ கூறினாரே ..அ .......பு .......கா !!


 அமரபுஜங்கா !!!பாண்டியன் அமரபுஜங்கன் !!


வெலவெலத்தது ராஜராஜருக்கு .

அய்யோ ! இனி எப்பொழுதும் அமைதி நிலைத்திருக்கும் என்று எண்ணினோமே !பாண்டியன் அடங்கிவிட்டான் என்றல்லவா பிழை கணக்குப் போட்டுவிட்டோம்.பாண்டியன் உறங்க மாட்டான் .சோழர்களையும் உறங்க விடமாட்டான் .வருடங்கள் ஆயிரமாயின் பாண்டியன் விடமாட்டான் .வஞ்சம் தீர்க்கும் எண்ணம் எனக்கு மட்டுமா சொந்தம்.எதிரில் வருபவனும் தன் வஞ்சம் தீர்க்கவே வருகிறான்.


பூமி அதிர்வு உணரப்பட்டது .வல்லவரையருக்கும் புரிந்து விட்டது.ராஜராஜரை ஒரு முறை பார்த்தார் .

"பாண்டியன் அமரபுஜங்கன் " என்றார் .


"ஆம்" என்பதைப் போல் ஒரு முறை தலை ஆட்டினார் ராஜராஜர் .


சோழனுக்கு சளைத்தவனா பாண்டியன் ? படைதிரட்ட கற்றா கொடுக்கவேண்டும் பாண்டியனுக்கு ?

தூரத்தில் புழுதி மண்டலம் ஒன்று உருவாக ,அம்மண்டலத்துக்கு நடுவே ,எருதை ஓட்டுவது போல தன் யானையைச் செலுத்தி,ஒற்றை குறிக்கோளாக சோழனை வீழ்த்த வெறி கொண்டு முன்னேறினான் பாண்டியன் அமரபுஜங்கன் !


பாண்டியன் ஓயமாட்டான் !


பின்குறிப்பு :


பாண்டியன் என்றுமே சோழனுக்கு ஒரு சவாலாக இருந்தான் என்பதற்கு ஒரு சிறிய கற்பனை.

ராஜராஜர் காந்தளூர் சாலை போர் முடிந்த பின்பு பாண்டியன் அமரபுஜங்கனை வீழ்த்தினார் என்பதும் கற்பனை.செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் மூலமே இவ்விருநிகழ்வுகளில் எது முன் பின் நடந்தது என்பதை கூற வேண்டும் .


Rate this content
Log in

Similar tamil story from Abstract