மதுரமல்லி !!
மதுரமல்லி !!


காலை 8 மணி இருக்கும்.
சந்துரு அடித்துப்பிரண்டு எந்திரித்து ,அவசரஅவசரமாக குளித்து விட்டு ,வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்."எங்கடா கிளம்பிட்ட இவ்வளவு சீக்கிரமா"னு அம்மா கேக்க,"வந்துடறேன் மா" னு ஒற்றை வார்த்தை பதில் அம்மாவை வந்தடைந்தது.
வண்டி மிகவேகமாய் மீனாட்சி அம்மன் கோவில் ,தெற்கு சித்திரை வீதியை வந்தடைந்தது.வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு,சாவியை விரல்களில் சுத்திய படியே ,"பூ ஒரு முழம் எவ்வளவுங்க" னு பூக்கார அக்காவிடம் கேட்டான்.
முன்பின் பூ வாங்கிய அனுபவம் இல்லை.இருந்தாலும்,அதை வெளியே காட்டி விடக்கூடாது என்று,எல்லாம் தெரிந்தது போல் விலையை விசாரித்தான்.
"மதுர மல்லி தம்பி.முழம் 10 ரூபா ",அவள் தம்பி என்றவுடன் சற்று சுதாரித்துக் கொண்டான்.முகத்தில் அரும்பு மீசை கூட இல்லை.இவன் எதுக்கு பூ வாங்குறான்னு நினைத்து விடுவார்களோ என்று அவனே நினைத்துக்கொள்ள,அவன் முகம் வியர்க்க ஆரம்பித்தது.
"சரி கா,குடுங்க" என்று அவசரமாய் பணத்தை கொடுத்துவிட்டு பூவைக் கையில் வாங்கினான்.சிறிய வாழை இலையில்,கடவுளின் பிரசாதம் போல் ,தெய்வீகமாய் இருந்தது.என்ன மணம் !பச்சை நிறத்தின் மேல் வெள்ளை நிறம் பளிச்சென்று இருந்தது.பூக்கார அக்கா,நன்றாய் தண்ணீர் தெளித்து வேறு குடுத்தாள்.மதுரமல்லியின் மனம் கவரும் அழகு அவனைக் கவ்வியது.
ஒரு பூவின் மன நிறைவே ஒரு பெண்ணின் அழகிய கூந்தலைச் சேரும்பொழுதோ அல்லது இறைவனின் மேல் படரும் பொழுதோ என்று கூறுவார்கள்.மதுரமல்லி சந்துருவை உற்றுநோக்கினாள் .இளம் வயது ,மீசை கூட இல்லை.அவன் முகத்தில் தோன்றிய சிறு அச்சம் கலந்த வெட்கம் ,இவை அனைத்தையும் வைத்துபுரிந்து கொண்டாள் ,தான் ஒரு அழகிய பெண்ணின் கூந்தலில் குடி கொள்ளப்போகிறோம் என்று !புன்னகைத்தாள்!
அவள் சிறிதும் எதிர்பாராவிதம் ,சந்துரு ,வண்டியின் சிறுபெட்டியின் அடியில் பூவை வைத்துவிட்டு,ஒரு துணியை அவள் மேல் போட்டு மூடிவிட்டு ,பெட்டியை பூட்டினான்.மதுரமல்லிக்கு மூச்சு முட்டியது.சரி,பொருத்துக் கொள்வோம் என்று அமைதியாய் இருந்தாள் .
வண்டி சந்துருவின் வீட்டை வந்தடைந்தது.சட்டென்று மதுரமல்லியை அவன் சட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு உள்ளே நடந்தான்."எங்கடா போன இவ்வளவு நேரம் " என்று தந்தை கேட்க,"பிரண்ட பஸ் ஸ்டாப்ல விட்டு வந்தேன் பா" என்று நாகூசாமல்பொய் சொன்னான்.மதுரமல்லி ஒளிந்துகொண்டே சிரித்தாள்.,"அண்டப்புழுகனா இருப்பான் போல " என்று.
தன் அறைக்குள் நுழைந்த சந்துரு,விறுவிறு என்று தன் பையில்,ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் மதுரமல்லியை ஒளித்து வைத்து பையை மூடினான்.தன் தாய் சமைத்து வைத்திருந்த ,பொங்கல் மற்றும் கொட்சை சாப்பிட்டுவிட்டு ,தான் படித்து முடித்த கல்லூரிக்கு மார்க் ஷீட் வாங்குவதற்கு கிளம்பினான்.
அவன் அன்புக்குரியவள் அன்று வரப்போகிறாள் என்பதால் ,அவன் உள்ளத்தின் உணர்ச்சி பெருக்கெடுப்பிற்கு அளவே இல்லை.அவள் கூந்தலில் தான் வாங்கிய மதுரமல்லியை வைத்து பார்க்க வேண்டும் என்று அவனின் பல நாள் கனவு.பையில் இருந்தவளும் குதூகளித்தாள் .
கல்லூரி வளாகம்.
அனைவரும் மார்க் ஷீட் வாங்கிவிட்டுச் சென்று விட்டனர்.சந்துரு மட்டும் ஆடிட்டோரியமிற்கு அருகே கையில் ,பிளாஸ்டிக் கவரில்,மதுரமல்லியை வைத்துக்கொண்டு காத்திருந்தான்.அவன் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டது.மதுரமல்லிக்கும் !
"தான் குடிகொள்ள போகும் பெண் எவளோ !அழகியோ ? மூக்கு எப்படி இருக்கும் ,முழி எப்படி இருக்கும் ? இவன் ஏன் இவ்வளவு படபடவென்று இருக்கிறான் ? முதல் முறை ஒரு பெண்ணிடம் பூ தருகிறான் போலும் " என்றெல்லாம் யோசிக்க தொடங்கினாள் மதுரமல்லி .அவளுக்கு புரிந்து விட்டது,சந்துருவிற்கு வரப்போகிறவள் உயிர் என்று.
அவள் வந்தாள் .
சந்துருவின் அருகில்வந்து நின்றாள்.மதுரமல்லி அவளைக் கண்டாள் .பச்சை நிறத்தில் மெல்லிய தங்க ஜரிகை போட்ட சுரிதார்.நல்ல உயரம்.மாநிறம் .அழகிய மூக்கு .மெல்லிய உதடு.காதில் வட்டவடிவில் தொங்கட்டான் .நெற்றியில் சிவப்பு நிறத்தில் சிறிய பொட்டு .பொட்டின்மேல் ,மெல்லியதாய் குங்குமக்கீத்து.மிகவும் லட்சணமாய் இருந்தாள் .இவை அனைத்துக்கும் சேர்த்துவைத்து ,அவளின் புன்னகை மதுரமல்லியை கவர்ந்து இழுத்தது .சிரித்த முகமாய் இருந்தாள் .
சந்துருவிற்கு ஏன் இவளைப் பிடித்து இருக்கவேண்டும் என்பதை மதுரமல்லி உணர்ந்தாள்.
இருவரும் பேசிக்கொள்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுரமல்லி .திடீரென்று அமைதி.
"உனக்கு ஒன்னு கொண்டுவந்திருக்கேன்" சந்துரு மதுரமல்லியை நீட்டினான்.மதுரமல்லி குதூகலித்தாள் .இவ்வழகிய பெண்ணின் கூந்தலில் தான் சேரப்போவதை நினைத்து.
"என்ன சந்துரு" என்று ஆவலுடன் அவள் கேட்க ,மதுரமல்லி சுற்றிவைத்திருந்த சிறிய வாழை இலையில் இருந்து வெளியே வந்தாள் ஆவலுடன்.
"உன் தலையில இத வெச்சுக்கோ" என்று சந்துரு கூற ,அவள் தயங்கினாள்.
"ஏன் ?" என்று கண்களால் சந்துரு கேட்க ,அவளின் பதிலை எதிர்பார்த்து நோக்கினார்கள் சந்துருவும் மதுரமல்லியும் .
"இப்போ இது வேணாம் சந்துரு.என்ன கல்யாணம் பண்ணிக்க போறவர் கையால தான் இத நான் வெச்சுப்பேன் " என்றாள் .
சந்துருவிற்கு உலகம் இருண்டது .மனம் வெந்தது ."ஏன் ? ஏன் ? " என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழ ,கல்லூரியை விட்டு கலங்கிய கண்களுடன் வெளியே வந்தான்.அங்கே ஏமாற்றம் அடைந்த இருவர் ,சந்துரு ,மதுரமல்லி .
மதுரமல்லி சந்துருவின் துயர் கண்டு வாடினாள் .கடைசியாய் ,ரோட்டின் ஓரமாய் இருந்த வீதிப்பிள்ளையாரின் அர்ச்சனை தட்டில்,சந்துரு அவளை வைத்துவிட்டுச் சென்றான்.
வருடங்கள் கழிந்தன.
சந்துருவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது அவன் ஆசைப்பட்ட படியே அவனின் அன்பிற்குரியவளுடன் !
மணமேடை !
தன் மணாளனுடன் ,முகம் முழுக்க வெட்கத்துடன் ,மெரூன் கலர் மடிசார் புடவை கட்டிக்கொண்டும் மிக அழகாய் அமர்ந்திருந்தாள்.இருவரிடம் அத்தனை சந்தோஷம் .
சந்துரு அவளை செல்லமாய் ஒரு இடி இடித்தான்."அன்னிக்கி கஷ்டப்பட்டு வாங்கிண்டு வந்த மதுரமல்லிய குடுக்க வந்தப்போ ஓவரா பண்ணின ? இப்போ என்ன " என்றான்.
"அன்னிக்கி அப்படி சொல்லிட்டோமேன்னு நான் வீட்டுக்கு போய் எவ்ளோஅழுதேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் ! நல்ல வேளை நானே உன்கிட்ட வந்துட்டேன் சந்துரு" என்றாள் முகத்தில் புன்னகை மலர.
மந்திரங்கள் ஒலித்துக்கொண்டிருக்க,மணமேடைக்கு அருகே வந்த பூக்கார அக்காவின் குரல் - "அம்மா !கல்யாண பொண்ணுக்கு மதுரமல்லி வந்துருக்குமா .மாப்பிள்ளை சார் !இந்தாங்க வெச்சு விடுங்க .அம்சமா இருக்கும் " .என்று .
மதுரமல்லி இவர்கள் இருவரையும் கண்ட நொடி அழகாய் மலர்ந்தாள் !