தேங்காபன்னும்-பன்பட்டர்ஜாமும்!
தேங்காபன்னும்-பன்பட்டர்ஜாமும்!


டிசம்பர் 2, 2019
ஐந்தாறு வீடுகள் கொண்ட ஒண்டுக் குடித்தன வீடு அது. ஒரு பக்கத்து வீட்டில் சசி என்ற நண்பரும் இன்னொரு பக்கத்து வீட்டில் ராமன் என்ற நண்பரும் அவரவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தனர். அதில் சசி அந்தக் காலத்தில் சிண்டிகேட் வங்கியில் அட்டென்டர் பணியில் இருந்தார். நான் அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தேன். ராமனும் என்னைப் போல் வேலை தேடிக் கொண்டிருந்தார். மூவரும் அவ்வப்போது சேர்ந்து பல விஷயங்கள் பேசி உற்சாகமாக பொழுதைக் கழிப்போம். அப்போது ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி வந்தது! மூவரும் சேர்ந்து அன்று இரவு தூக்கம் விழிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.
தூக்கம் வராமல் இருக்க ஊரைச்சுற்றி வர முடிவு செய்தோம். மூவரும் கிளம்பி (கோவையில்) வடகோவை வரை நடந்து - ஆர்.எஸ்.புரம் கௌளி ப்ரவுன் ரோடு வந்து - அங்கிருந்து மூனுகம்பம் அடைந்து - கடைவீதி சென்று – கடை வீதியில் இருந்து சுக்கிரவாரப்பேட்டை வழியாக நடந்து பின் நாங்கள் குடி இருந்த தெருவை அடைந்தோம். எத்தனை தூரம் நடந்திருப்போம் என்று தெரியவில்லை., ஆனால் சுமார் நான்கு மணி நேரம் நடந்திருப்போம்.
அப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. என்ன பேசினோம் எப்படிப் பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஆனால் அவ்வளவு மகிழ்ச்சியாக இரவு கழிந்து கொண்டிருந்தது.
ஆனால் இது இந்த அளவிற்கு என் நினைவில் நிற்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இடையில் சசி சொன்னார்: “என் (வங்கி) அக்கௌன்ட்டில் பணம் இருக்கிறது. (வேலை வெட்டிக்கு போகாதவர்கள் என்பதால்) உங்களிடம் பணம் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் இருந்தால் செலவு செய்யுங்கள். நாளை வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்து விடுகிறேன்.” என்றார்.
என்னிடம் ஐந்து ரூபாய் இருந்தது. (வீட்டில் எதற்காகவோ கொடுத்திருந்தார்கள்.) அதை வைத்து பேக்கரி ஒன்றில் புகுந்து, தேங்காய் பன், பன் பட்டர் ஜாம், பால் என்று மூவரும் ஒரு பிடி பிடித்தோம்.
ஆனால் என்ன காரணத்தினாலோ அடுத்த நாள் அந்தப் பணத்தை அவர் கொடுக்கவில்லை. மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். என்றாலும் அன்று இரவு அந்த இரண்டு நண்பர்களுடன் நான் கழித்த அந்த உற்சாக இரவை என்னால் என்றும் மறக்க முடியாது!