Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

3.0  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

பயணத்தின் இன்பம்...!

பயணத்தின் இன்பம்...!

2 mins
324



  கடவுளிடம் நீ எதிர்பார்ப்பது எது? ஆண்டவா எனக்கு அம்பத்தூர்ல ஆறு கிரவுண்ட் நிலமும், பங்களாவும், காரும், நிறைய பேங்க் பேலன்ஸூம் கொடு. உன்னோட கோயிலுக்கு வந்து அபிஷேகம் பண்றேன். சரி, ஓ.கே. எல்லாம் தர்றேன். நிறைய பேங்க் பேலன்ஸ்ன்னு சொல்றியே? எவ்வளவு?

  

ஒரு பத்து கோடி? இல்ல இல்ல ஆண்டவா! ஒரு நூறு கோடி ரூபாய் போதும்! 

  

உனக்கு எவ்வளவு வேணும்னு உனக்கே ஐடியா இல்லாத போது கடவுள் கன்ஃபியூஸ் ஆக மாட்டாரா? நீ கடவுளிடம் என்ன எதிர்பார்க்கிறாய் என்பதில் தெளிவான உறுதியான வரையறை உண்டா? அப்படி உண்டென்றால் கடவுள் உனக்காக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம்.

   

உன் எண்ணங்களைத் திசைமாற்றி, ஒரே சிந்தனையில் குவிக்க முடியாமல் உன்னைத் தவிக்க வைக்க ஓராயிரம் காரணங்கள் இவ்வுலகில் உண்டு! ஏன் உனக்குள்ளேயே உண்டு. மூளை எப்பொழுதும் எதிர்மறையாகத்தான் சிந்திக்கும். அதன் டிசைன் அப்படித்தான். அச்சிந்தனைகளை எல்லாம் கடந்து எனக்கு என்ன வேண்டும் என்ற மிகத் தெளிவான குறிக்கோள் ஒன்று இருந்தால் கடவுள் என்னும் இயற்கை நிச்சயம் நம் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

  


ஒவ்வொரு மனிதனும் ஓர் அபூர்வம். ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். ஒவ்வொருவரின் எண்ணங்களும் தனித்தன்மையுடன் இயங்கும் சிறப்புடையவை. ஒவ்வொருவரின் குறிக்கோளும் தனித்தன்மையுடன் மிளிர்பவை. ஆனாலும், அனைவரையும் ஒரே ஆற்றல்தான் இயக்குகிறது. மின்விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இவற்றின் வேலை வெவ்வேறாக இருந்தாலும், அவற்றை இயக்குவது மின்சாரம் என்னும் ஒரே ஆற்றல்தானே! அவை இயங்க வேண்டுமென்றால் ஸ்விட்ச்சை நாம்தான் முதலில் அழுத்த வண்டும். கடவுள் நமக்கு உதவ வேண்டுமெனில் நம் பாதையை நாம் தேர்வு செய்து, முதல் அடியை எடுத்து வைக்க வேண்டு்ம். தொடர்ச்சியை அவன் கவனித்துக் கொள்வான்.


வாழ்க்கையை ஆத்மார்த்தமான மனதுடன் நேசித்தால், கடந்து வந்த பாதையில் நடந்த சோதனைகளிலும், கசப்புகளிலும் மனதைச் செலுத்தாமல், முன்னோக்கி முழுமனதுடன் பார்வையைச் செலுத்தினால், கடந்த காலத் தவறுகளுக்காகக் குற்ற உணர்வுகளை மனதில் தேக்காமல், நம்மை நாமே மன்னித்து அமைதிப் படுத்திக்கொண்டால், முன்னோக்கி விரியும் பாதையின் முழு அழகையம் ரசிக்கலாம்.


ஒவ்வெரு மனிதனின் தனித்தன்மையைப் போலவே, ஒவ்வொரு மணித்துளியும் தனித்துவமானது. தனித்துவமான நிகழ்வுகளை உடையது. ஒவ்வொரு மணித்துளியையும் நம் வாழ்வை உயர்த்தவே இறைவனால் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒரு மணித்துளியில் உருவாகும் ஒரு சரியான சிந்தனைக்கு இந்த உலகையே மாற்றும் வல்லமை உண்டு!


பாதை சில சமயங்களில் கரடுமுரடானதாக இருக்கும். நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக இறைவன் அப்பாதையை நமக்கு உருவாக்கவில்லை. நம்மை பலப்படுத்துவதற்காக! நின்று நிதானித்து, வாழ்வை அனுபவித்து ரசிப்பதற்காக! நம் குறிக்கோளில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோம் என்பதற்காக! கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவமும் நமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் என்பதை எந்நாளும் மறவாதிருந்தால் முன் தெரியும் பாதையில் பயணம் இலகுவாகும்.


மகிழ்ச்சி என்னும் உணர்வை நாம் மறந்துவிட்டோமோ என்று சந்தேகமாயிருக்கிறது. நாம்ஒவ்வொருவரும் வாய்விட்டுச் சிரித்து, மனம் பூவாய் மலரச் சிரித்து எவ்வளவு நாட்களாகிறது! தனியாக உட்கார்ந்து சிரிக்கமுடியுமா? சிரிப்புதான் வருமா? சில நகைச்சுவை நினைவுகளால் தனியாக அமர்ந்து சிரிக்க முடியும். ஆனால், அது தற்காலிகமானது. குடும்பத்துடன், உறவுகளுடன், நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவும் போதுதான் நாம் நம்மை மறந்து சிரிக்கிறோம். அது ஒருவகை தியானம்! பொறாமையும், போட்டிகளும் அந்த அழகான தியானத்தைக் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.


எப்பொழும் உடலும் மனதும் சுறுசுறுப்பாய் இருந்தால், நாம் பயணிக்கும் பாதை பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. அது கரடுமுரடாகவோ, காடாகவோ அல்லது பலர் நடந்ததாகவோ இருக்கலாம். மனம் இலக்கிலும், உடல் உறுதியுடனும் இருந்தால் பயணம் சுகம்தான். பாதை அழகுதான். 


எதிர்காலம் கணிக்க முடியாதது. அதுதான் அதனுடைய அழகு. வருவது முன் கூட்டியே தெரிந்தால், வாழ்வு சலிப்படையும். ஒவ்வொரு மணித்துளியிலும் வாழ்வு மாறிக் கொண்டேயிருக்கும். உடல் உறுதி, மன உறுதி, கடந்த பாதையில் கற்ற பாடங்கள் இவையனைத்தும் நமது பயணத்திற்குத் துணை நிற்கும். நடை போடும் பாதையின் அழகை நின்று நிதானித்து அனுபவிக்க வேண்டியது மட்டுமே நமது வேலை. இலக்கை அடையும் போது ஏற்படும் இன்பத்தை விட, பயணத்தின் மகிழ்வு, திருப்தி அதிகம்.





  



Rate this content
Log in

Similar tamil story from Abstract