DEENADAYALAN N

Comedy

4  

DEENADAYALAN N

Comedy

ஞாயம்தானா?பதிமூன்று(talking)

ஞாயம்தானா?பதிமூன்று(talking)

2 mins
42



அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சில வருடங்களுக்கு முன்…


ஒரு சமயம் எங்கள் இரு மகன்களும் சென்னைக்கே பணி மாற்றம் பெற்றனர். நான்கு பேரும் கொஞ்ச நாட்கள் சேர்ந்து இருக்கலாம் - திருமணம் போன்ற வைபவங்கள் நடந்து விட்டால் இப்படி சேர்ந்து இருக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் அமையாது - இருவருக்கும் வேலை அமைந்து விட்டதால் இனி பணத்திற்கான தேவை ஏதுமில்லை போன்ற காரணங்களை சொல்லி விஆர்எஸ் கொடுத்து விட்டு என்னையும் மனைவியையும் சென்னைக்கு வர வற்புறுத்தினார்கள். பணம் சேர்ப்பதைக் காட்டிலும், இப்படி சேர்ந்து இருக்கும் இந்த தருணங்களே வாழ்க்கையின் இறுதி வரை மனதில் நிலைத்திருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்களும் விஆர்எஸ் வாங்கிக் கொண்டு சென்னையில், அறுபடை வீடு முருகன் கோயில் பகுதியில், பெசண்ட் நகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். 


ஒன்றரை வருடங்கள் மகன்களுடன் சென்னையில் ஜாலியாக இருந்தோம். வாரந்தோறும் சிறந்த உணவகம், சிறந்த திரைப்படம், சிறந்த சினிமா தியேட்டர், சிறந்த ஷாப்பிங் மால்கள் என்று ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்.


ஆனால் பெரிய மகனுக்கு திடீரென்று வேலையின் நிமித்தம் மூன்று மாதங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. மூன்று மாதங்களுக்காக என்று போனாலும் அது சுமார் இருபது மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. சிறிய மகனுக்கு மதியம் ஒரு மணிக்குப் போய்விட்டு இரவு ஒரு மணிக்கு திரும்புகிற மாதிரி ஷிஃப்ட்.


எனவே எனக்கும் மனைவிக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்தது. நடைப்பயணம், கோயில் என்று போவோம். பிறகு என்ன செய்வது?


ஓரிரு முறை மொட்டை மாடிக்கு சென்று வேடிக்கைப் பார்த்தோம். பிறகு இரண்டு நாற்காலிகளை எடுத்துக் கொண்டு மேலே போய் விடுவோம். மாலை ஆறு மணிக்கு போனால் இரவு பதினோரு மணி வரை கூட அங்கேயே பேசிக் கொண்டு பொழுதைப் போக்கினோம்.


எங்கள் வாழ்வில் சந்தித்த விசித்திர மனிதர்கள், அவர்களின் அபூர்வமான குண நலன்கள், செயல் பாடுகள் என்று பேசுவோம். ஒரு சில பொது விஷயங்களையும் பேசுவோம்.


போகப் போக எங்கள் குடும்ப / நட்பு வட்டத்தில் உள்ள நபர்களைப் பற்றி விலாவாரியாக பேச ஆரம்பித்தோம். அதாவது ஒவ்வொரு நாளைக்கு யாரோ ஒருவர் எங்கள் பேச்சில் அகப்பட்டுக் கொள்வார். அவர்களுடைய மண்டையை உருட்டும் வேலையை செய்வோம். அதாவது அவர்களது நல்லது, கெட்டது, விசித்திரமான குணாதிசயம், விசித்திரமான செய்கைகள், பொய்கள், சமாளிப்புகள், புரளி பேசுவது, புறம் பேசுவது என்று எதையும் விடாமல் அலசுவோம். இதனால் எங்களுக்கு நேரம் போவதே தெரியாது. சுமார் ஆறு மாதங்கள் இப்படியே பொழுதைப் போக்கினோம்.


இந்த விஷயம் எங்களின் உறவு/நட்பு வட்டாரத்தில் பல பேருக்கு தெரிய வந்த போது, சிலர் சிரித்தார்கள். சிலர் முறைத்தார்கள். 


நாங்கள் எதையும் சீரியஸ்ஸாக மனதில் வைத்துக் கொண்டதில்லை. சில சமயம், நெருங்கியவர்களாக இருந்தால், அவர்களை அழைத்து ‘இன்று உங்களுடைய மண்டையைத்தான் உருட்டினோம்..’ என்று கூறி விடுவோம்.  

 

இப்படி அடுத்தவருடைய மண்டையை உருட்டும் செயல் சரிதானா என்று சிலர் கேட்பார்கள்.


நீங்கள் சொல்லுங்களேன்.. நாங்கள் அடுத்தவருக்கு தெரியாமல், அவரைப் பற்றி பேசி, அவருடைய மண்டையை உருட்டி – அவருக்கு எந்தத் தீங்கும் இல்லாமல் - எங்கள் பொழுதைப் போக்கியது சரிதானா?





Rate this content
Log in

Similar tamil story from Comedy