Dr.PadminiPhD Kumar

Thriller

4  

Dr.PadminiPhD Kumar

Thriller

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 21

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 21

3 mins
420


    கள்ளமில்லா உள்ளம் படும் பாடு       

                      ரமலான் மாதம் - முகமதியர்கள் நாள் முழுக்க நோன்பு இருந்து தொழுகையிலும்,பல நற்காரியங்களிலும் ஈடுபடும் மாதம். ரஹீம், சைரா பானு தம்பதிகளுக்கு இந்த ரமலான் மாத நோன்பு இருந்து ஒரு முறையாவது டெல்லி ஜும்மா மசூதிக்கும் ஆக்ரா தாஜ்மஹாலுக்கும் வெள்ளிக்கிழமை சென்று தொழுகை செய்து வரவேண்டும் என்று ஆசை.


       சென்னையின் புறநகர் பகுதியான வளசரவாக்கத்தில் கணவன் மனைவி இருவருமாக ஒரு சிறு கடையில் ‘நூர் மேட்சிங் சென்டர்' என்ற பெயரில் ஒரு துணிக்கடை நடத்திக் கொண்டிருந்தார்கள்.சைராபானுவிற்கு தையல் கைவந்த கலை. இதனால் அந்த சிறிய கடையிலும் நடுவில் ஒரு தையல் மிஷின் வைத்து தானே தைத்துக் கொடுப்பதும் உண்டு. மேட்சிங் சென்டர் என்பதால் கடை முழுவதும் எல்லா விதமான வண்ணங்களில் பிளவுஸ் துணிகள் மற்றும் சுடிதார் தைப்பதற்கு தேவையான லைனிங் கிளாத்,லேஸ் போன்ற வாடிக்கையாளர்களின் தேவைகளை அங்கே விற்று தங்களால் இயன்றதை சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.


        ரஹீம்-சைரா பானு தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்;ஆண் ஒன்று, பெண் ஒன்று.கருப்பு நிற பர்தா உடை இல்லாமல் சைராபானுவை பார்க்கவே முடியாது. தொழுகை நேரத்தில் கடையை ஒரு பையனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு போய் தொழுகை முடிந்த பின் மீண்டும் கடைக்கு வந்து வியாபாரத்தை இரவு கடை மூடும் வரை கவனித்துவிட்டு இருவரும் சேர்ந்து வீட்டிற்கு செல்வார்கள். வீட்டில் ரஹூமின் வாப்பாவும் உம்மாவும் குழந்தைகளையும் வீட்டையும் நன்கு கவனித்துக் கொள்வதால் கணவன் மனைவி இருவருக்கும் வியாபாரத்தை கவனம் சிதறாமல் நடத்த முடிகிறது.


           நடுத்தர குடும்பம் ஆனதால் வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். வரிசையாக அமைந்த கடைகளில் இரண்டு கடைகளின் பொது சுவருக்கு நடுவில் அமைந்தது தான் இவர்களின் கடை. எனவே கடையை விரிவு படுத்தவும் முடியாது. ‘இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது’ என ரஹீமின் வாப்பாவும் உம்மாவும் அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை சொல்வதால் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொண்டனர் தம்பதிகள் இருவரும்.


           நாளாக நாளாக டெல்லி-ஆக்ரா செல்லும் ஆசை தீவிரமானது. ரஹீமின் வாப்பா வீட்டிலிருந்தபடியே சென்ட் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். சென்ட் உடன் ஊதுவத்தி, நிஜாம் பாக்கு போன்றவைகளை மொத்த கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்கி சின்னச்சின்ன பெட்டிகடைகளுக்கு சப்ளை செய்வது வழக்கம். இதனால் கிடைத்த உபரி வருமானம் ரமலான் பண்டிகை காலத்தில் குடும்பச் செலவிற்கு மிகவும் உதவியாக இருக்கும். மகன், மருமகளின் ஆசை தெரிந்த வாப்பாவும் உம்மாவும் சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைத்து வரும் ரமலானில் டெல்லி ஆக்ரா சென்று வர தேவையான பணத்தைக் கொடுத்ததும் தம்பதிகள் இருவரும் மிகவும் மகிழ்ந்தனர்.


        ரஹும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் சென்று கியூவில் நின்று ரிசர்வேஷன் ஃபார்ம் வாங்கிப் பார்த்து, படித்து, அக்கறையுடன் அதை நிரப்பி, பணம் கட்டி டிக்கட்டுகள் வாங்கினார். பயண நாள் வந்தது, குடும்பத்துடன் ஸ்டேஷன் வந்து ரயில் ஏறினார்கள். மூன்றாம் வகுப்பு ஏசி இல்லா பெட்டியில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார் ரஹும். குழந்தைகள் குதூகலமாக கொண்டாட்டம் போட்டனர். ஜன்னல் பக்கத்து சீட்டுக்கு குழந்தைகள் மட்டுமல்லாது வயதான வாப்பாவும் சண்டை போட்டதைப் பார்த்து உம்மாவும் சைராபானுவும் சிரித்தனர்.


         ரயில் கிளம்பியது.நெல்லூரைத் தாண்டியது. டிடிஆர் வந்தார். டிக்கெட்டுகளை சரி பார்த்தவர் தன்னிடம் உள்ள லிஸ்டில் பெயர் இல்லையே எனச் சொன்னார். ரஹீம் திணறிப் போனார். ஒரு நாள் பூராவும் கடைக்குப் போகாமல், வியாபாரம் பார்க்காமல், ஸ்டேஷனிலிருந்து பார்த்துப் பார்த்து ஃபார்ம் நிரப்பி, ரிசர்வேஷன் கவுண்டரில் கால்கடுக்க நின்று, பணம் கட்டி டிக்கெட்டுகளை வாங்கி வந்தவர் அவரல்லவா! லிஸ்டில் ‘இரஹும்' என எழுதப்பட்டிருந்தது. டிக்கெட்டில் ரஹீம் என இருந்தது. தமிழ் தெரிந்தவர்கள் ரெண்டு பெயரும் ஒன்று என அறிவார்கள். நெல்லூரில் ஏறிய டிடிஆர் தெலுங்குக்காரர். எனவே பெயரில் மாற்றம் இருப்பதாகச் சொல்லி விட்டுச் சென்றார்.


    ரஹீமின் குடும்பத்தினருடன் அதே வண்டியில் பக்கவாட்டு சீட்டில் அமர்ந்திருந்தவர் ரஹீமை பார்த்து,” டிடிஆர் உங்களிடம் காசு எதிர்பார்க்கிறார். அதனால்தான் பெயரைக் காரணம் கூறுகிறார் “ எனச் சொல்லவும், உம்மா தன் கைப்பையை திறந்து பணத்தை வெளியில் எடுத்து ரஹுமின் கைகளில் திணித்தார். டிடிஆர் சிறிது நேரம் கழித்து வந்து,” என்ன செய்யப் போகிறீர்கள்?” எனக் கேட்கவும், ரஹிம்100 ரூபாயை காட்டினார். உடனே 6 டிக்கெட்டுகளுக்கு 600 ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னதும் உடனே ஆறுநூறு ரூபாயை எண்ணிக் கொடுத்தார் ரஹிம். பணம் வாங்கிக்கொண்டு டிடிஆர் சென்றதும் ரஹீம் “மாஷா அல்லாஹ்” எனச்சொல்லி அமைதியானார்.


         பயண செலவிற்காக கொண்டுவந்ததில் சிறிது குறைந்தது வருத்தம் தான்; ஆனாலும் பிரச்சினை முடிந்தது என குடும்பத்தினர் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். அனைவரும் படுக்கத் தயாராகினர். ரயில் நாக்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென பக்கத்து சீட்டுக்காரர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரஹீமை தட்டி எழுப்பினார்,” உங்கள் வாப்பாவை டிடிஆர் அங்கே பாத்ரூம் பக்கத்தில் நிற்க வைத்து ஏதோ கேள்வி மேல் கேள்வி கேட்டு மிரட்டுவது போல் பேசுகிறார்.” எனச் சொன்னதும், என்னவென்று பார்க்க விரைந்து அங்கே போனார் ரஹிம்.டிடிஆர் வாப்பாவின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்; வாப்பாவின் காலடியில் ஒரு கூடை இருந்தது. அந்தக் கூடையில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக என்று உம்மா சில இனிப்பு,காரப் பொட்டலங்களை கொண்டு வந்திருந்தார். ஆனால் டிடிஆர் ரஹுமிடம்,” உங்கள் வாப்பா கஞ்சா வைத்திருந்தார் “ எனக் கூறியதும் ரஹிம் நடுநடுங்கிப் போனார். ” சார்,அது பாக்கு சார்; தூக்கம் வரவில்லை; பாக்கு போட வேண்டும்போல் தோன்றியது. கூடையில் இருந்த பாக்கை இங்கே விளக்கு வெளிச்சத்திற்கு எடுத்து வந்து தேடினேன். இவர் நம்ப மாட்டேன் என்கிறாரே…. என்ன செய்வேன்?” என வாப்பா புலம்ப ஆரம்பித்தார்.


            இக்களேபர சமயத்தில் நாக்பூர் ஸ்டேஷன் வந்து விட்டது. டிடிஆர் வெளியே நின்ற போலீசை கூப்பிட்டு பேசினார். விஷயம் விபரீதம் ஆவதை புரிந்து கொண்ட ரஹிம் டிடிஆரைத் தனியே அழைத்து தான் பணம் தருவதாகச் சொன்னதும், டிடிஆர்,”இது போலீஸ் கேஸ்; எனக்குத் தெரியாது” எனச் சொல்லி போலீசிடம் கண் ஜாடை காட்டி விட்டு ஒதுங்கி நின்றார். போலீஸ் வாப்பாவையும் ரஹீமையும் இரயிலை விட்டு கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நிற்க வைத்தார். உம்மாவும் சைரா பானுவும் அழத் தொடங்கினர். சிக்னல் விழுந்ததும் ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. உடனே உம்மா தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் ஜன்னல் வழியாக நீட்டி,” அவர்களை விட்டு விடுங்கள்” என கத்த ஆரம்பித்தார். போலீஸ் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு இருவரையும் போங்கள் என சைகை காட்டியதும் ரஹுமும் வாப்பாவும் ஓடும் ரயிலில் ஓடிவந்து ஏறினர். அவர்கள் பின்னால் போலீஸ் ரூபாய் நோட்டுகளில் சிலவற்றை டிடியாரிடம் கொடுப்பதை அவர்கள் பார்க்கவில்லை.


Rate this content
Log in

Similar tamil story from Thriller