Dr.PadminiPhD Kumar

Thriller

4  

Dr.PadminiPhD Kumar

Thriller

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 10

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 10

3 mins
392


அத்தியாயம் 10

           பழிவாங்கிய ஆவி!

                  தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக கருங்கற்கள் லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டன. முதலில் ஒரு லாரி லோடு கொண்டுவரப்பட்டு மலை உச்சியில் போர்டிகோவின் பக்கவாட்டில் கொட்டப்பட்டன. மேலிருந்து கீழாக ஒவ்வொரு கற்களாக சுமந்து கொண்டு வரப்பட்டன. தடுப்புச் சுவர் கட்டும் பணி ஆரம்பமானது. பங்களாவின் தரைத்தளத்தில் பக்கவாட்டில் தொடங்கி பின்புறம் வரை மலையை ஒட்டி கருங்கல் சுவர் குவார்ட்ஸ்களின் பின்புறத்தின் வழியாகவும் கட்டப்பட்டது. முதலில் வந்த லாரியில் ஏற்றிக்கொண்டு வந்த கருங்கற்களால் பாதி அளவு சுவர் தான் எழுப்ப முடிந்தது. எனவே மதன்லால் மீண்டும் ஒரு லாரி லோடு கருங்கல் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.    

               மழையோ கொட்டோகொட்டென்று விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சிக்குச் செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக இருப்பதால் லாரிகள் இரவில் ஏறவே அனுமதி கொடுக்கப்பட்டது. கொட்டும் மழையில் இரவில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி முத்துப்பெட்டா மலை மீது ஏறியது. மாடர்ன் பங்களாவின் போர்டிகோவில் லாரியை நிறுத்திவிட்டு கருங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது.

                              லாரியின் பாரம் தாங்காததாலோ அல்லது ஏற்கனவே பாதை வீக்காக இருந்ததாலோ அப்போது பெய்த மழையால் மண்ணரிப்பு ஏற்பட்டு பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கருங்கல் சுவர் முன்னால் இருந்த குவார்ட்டஸின் கூரை மீது சரிந்து விழுந்தது. ஒரு பெண்ணின் அலறல் கேட்டு ஆடிப் போய் அனைவரும் ஓடோடி வந்தனர். இடி மழையால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருண்ட பங்களாவில் என்ன நடந்தது என்று புரியாமல் அனைவரும் டார்ச் அடித்து பார்க்கலாயினர்.

             கருங்கல் விழுந்த இடத்தில் தான் காலி செய்ய மறுத்த தோட்டக்கார பேரனும் தன் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தான். முன்னறையில் தூங்கிக் கொண்டிருந்த பேரனும் அவன் மனைவியும் கற்கள் விழும் சத்தம் கேட்டு பயந்து போய் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தனர். ஆனால் பின்புறப் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவன் மகள் கருங்கல் குவியல்களுக்கடியில் சிக்கிக் கொண்டாள்.

              இருட்டில் எதுவும் தெரியாததால் பேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளைப் பெயர் சொல்லி ,"ப்ரீத்தி, ப்ரீத்தி "என உரக்கக் கூப்பிட்டனர். கூட்டம் கூடியது. அனைவரும் ஒன்று கூடி குவிந்து கிடந்த கருங்கற்களை அகற்றிப் பார்த்தனர். ப்ரீத்தி அங்கே தூக்கத்திலேயே தலை நசுங்கி இறந்தாள் என்பதை உணர்ந்த போது அவளது பெற்றோர் நிலை குலைந்து போனார்கள். அந்த மலைக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. முதியவர் மட்டும் தன் வீட்டில் அமர்ந்துகொண்டு,"எல்லாம் முடிந்து விட்டது; இறுதியில் பேய்கள் பழிவாங்கியே பங்களாவை விட்டுப் பிரிந்து சென்றன."என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

               விடியும் முன்பே போலீஸ் வந்தது. பேரன் இது ஒரு கொலை கேஸ் என்றான். தன்னை மதன்லால் முதல் நாள் மிரட்டிச் சென்றதைக் கூறி அதற்கு சாட்சிகளாக அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களைக் காட்ட போலீஸ் மதன்லாலையும் கட்டிட காண்ட்ராக்டர் பிரசாத்தையும் கைது செய்தனர்.

                மதன்லாலின் வக்கீல் வந்து அவர்கள் இருவரையும் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றே மதன்லால் பிளான் பண்ணி கருங்கற்களை சரிய வைத்து தன் ஒரே மகளைக் கொன்றதாக கோர்ட்டில் பேரன் வாதாடினான். எனவே இது ஒரு கொலை கேஸ் என்றான்.

              மதன்லாலின் வக்கீல் சென்ற வருடம் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்த எலெக்ட்ரிசிட்டி போர்டு குவாட்டர்ஸ் பற்றியும் அதன் விளைவாக நேர்ந்த மரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து, இது ஒரு இயற்கை பேரிடரால் நடந்த மரணம் தான் என்று வாதாடினார். போலீஸ் அதிகாரிகள் பங்களாவில் ஏற்கனவே ஒரு எலக்ட்ரீசியன் கவனக்குறைவால் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தான் என்பதையும் , தற்போது பேரன் மகளும் மழையால் மண்ணரிப்பு ஏற்பட்டு சரிந்த கருங்கல் சுவரில் மாட்டியே இறந்தாள் என்பதையும் தங்கள் ரிப்போர்ட்டில் சமர்ப்பித்தார்கள். எனவே இது ஒரு இயற்கை மரணமே அன்றி வேறில்லை என்று தீர்ப்பு கூறி மதன்லாலையும் பிரசாத்தையும் கொலை கேசிலிருந்து விடுதலை செய்தனர். ஆனால் கவனக்குறைவிற்கு மதன்லாலும், பிரசாத்தும் தான் காரணம் என்பதால் நீதிபதி அவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் பைன் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

             மதன்லால் உடனே தன் வக்கீலிடம் சொல்லி இருவருக்கும் பைன் கட்ட ஏற்பாடு செய்தார். இப்போது மதன்லால் மாந்திரீகர் சொன்னதை நினைத்துப் பார்த்தார். உடனே தன் நண்பருடன் கேரளாவிற்குப் புறப்பட்டு போனார் மாந்திரீகரைப் பார்க்க. அவர் விபரங்கள் அனைத்தையும் கேட்டபின்,"இனி பயம் இல்லை; ஆவிகள் பழிவாங்கிய பின்னர் அங்கே தங்காது. உங்கள் பிறந்த நட்சத்திரத்தின் பலன் உங்களை சிறை தண்டனையிலிருந்து காப்பாற்றி விட்டது. இப்பொழுது உங்கள் ஜாதகப்படி நல்ல நேரம் ஆரம்பிக்கிறது. எனவே கவலைப்படாமல் மேற்கொண்டு ஹோட்டல் ஆரம்பிக்க நல்ல நாள் பாருங்கள்."என்று கூற மதன்லால் அவரிடமே நல்ல நாள் குறித்துக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்டு ஊட்டி திரும்பினார்.

             நல்ல நாளில் மதன்லால் மாடர்ன் பங்களாவை' மாடர்ன் ஹோட்டல்' என பெயர்மாற்றம் செய்து திறப்புவிழாவை ஜாம் ஜாமென்று நடத்தினார். நடப்பு ஆண்டு 2022ல் ஊட்டி செல்லும் மக்களே, மாடர்ன் ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கி ஊட்டி பள்ளத்தாக்கின் அழகைக் கண்டு மகிழுங்கள் . அங்கே நீங்கள் சென்றதும் வரவேற்பறையில் உங்களை அன்புடன் வணங்கி வரவேற்று லக்கேஜ்களை ரூம் பாய் எடுத்து வர படிகளில் இறங்கி கீழ்தளத்தில் உள்ள அலங்காரம் செய்யப்பட்ட அறையில் உங்களைத் தங்க வைப்பார்கள். அறையின் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக ஊட்டியின் அழகை கண்டு மகிழுங்கள். அதுமட்டுமல்லாமல் மீண்டும் படிகளில் இறங்கி தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே சுற்றிலும் உள்ள ரோஜா , டேலியா, கார்னேஷன் போன்ற மலர் தோட்டங்களையும் கண்டு மகிழலாம். அவசியம் மாடர்ன் ஹோட்டலுக்கு வாருங்கள்.... ஆனால் பேய்களைத் தேடாதீர்கள்!

                முடிந்தது மர்மத்தொடர்!

              


Rate this content
Log in

Similar tamil story from Thriller