Arivazhagan Subbarayan

Drama Action

4.8  

Arivazhagan Subbarayan

Drama Action

மீட்சி...!

மீட்சி...!

6 mins
78


    நான் அம்னீசியாவில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்! என் பெயர் எனக்கு மறந்துவிட்டது! நான் யார்? என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் யாரும் எனக்கு நினைவில்லை! என் கடந்த காலம் முற்றிலுமாக என் நியூரான்களில் இருந்து அழிந்து விட்டது! வேளா வேளைக்கு எனக்கு உணவு கிடைக்கிறது! சாப்பிட்டவுடன் பசி அடங்குகிறது! ஆனால், என் அடையாளம்? அப்படி ஒன்று இருக்கிறதா? டாக்டர்கள் உரையாடுகையில் எனக்குக் கேட்கிறது! நான் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல, எல்லாம் நான் புதிதாய்க் கற்க வேண்டுமாம்!


குழந்தை பிறந்தவுடன் பேசுமா? ஆனால், நான் பேசுகிறேன்! எனக்கு மொழி தெரிகிறது! வேறு என்னவெல்லாம் தெரியுமென எனக்குத் தெரியவில்லை! 

   நான் படுக்கையிலிருந்து எழுந்து ஐன்னல் வழியாகப் பார்க்கிறேன்! வாகனங்கள் சாலைகளில் இருதிசைகளிலும் விரைந்து கொண்டிருக்கின்றன. அட, அப்படியானால் எனக்கு வாகனங்களையும் தெரிந்திருக்கிறது! என் விழிகளின் பார்வையெல்லைக்குள் இருக்கும் அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! எனது எண்ணப்பேழை திடீரென வெறுமையடைந்து விட்டது! விழிகள்


ஜன்னல் வழியே துழாவி எதையும் நினைவுகூற முடியவில்லை! நான் இந்த அறைக்கு வந்து இரண்டு நாட்கள் ஆவதாக டாக்டர்கள் கூறினார்கள்! ஒயிட் கோட் அணிந்து ஸ்டெத் மாட்டியவர்கள் டாக்டர்கள் எனப் புரிகிறது. ஆங்கிலத்தில் அவர்களின் சம்பாஷணைகளையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் யார் என்பதற்கு எனக்கு எந்த அடையாளமும் கிடைக்கவில்லை என்று காவலர்கள் வந்து கூறினார்கள். 


  என்னுடைய முகத்தைக் கண்ணாடியில் ஆராய்ந்தேன். சிறிது வாடிப்போய்க் குழப்பத்தின் நிழல் படிதலுடன் தெரிந்தது. விரைவில் என் நினைவுகள் வந்துவிடும் என அடிக்கடி செவிலியர்கள் வந்து சொல்லி ஆறுதல் படுத்தினார்கள்! அந்த ஆறுதல் வார்த்தைகளே எனது நம்பிக்கையின் தூண்களாய் என்னைத் தாங்கிப் பிடித்துக் கெண்டிருக்க, அன்றிரவு உறங்கிப் போனேன்!


   நடுநிசியில், உலகமே துயில் கொண்டு அமைதியின் ஆழத்தி்ல் உறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், மருத்துவமனையின் ஓரிரு பகுதிகளிலிருந்து வந்த வேதனை முனகல்களுக்கிடையே, திடீரென அந்தப் பெயர் மட்டும், மூளையின் ஏதோவொரு நியூரானில் இருந்து வெடித்துக் கிளம்பியது! அனன்யா! அந்தப் பெயருக்குரிய உருவத்தை எனது எண்ணப் பெட்டகத்தில் தேடு தேடென்று தேடினேன்! எங்கும் அகப்படவில்லை! என் உடம்பு வியர்த்துக் கொட்டியது.


இதயம் படபட வென்றது. மலைச்சாலைகளில் எதிர்க்காற்றில் மிதிவண்டியில் ஏறுவதைப்போன்று மூச்சு வாங்கியது! படுக்கையை விட்டிறங்கி ஜன்னல் வழியாக மீண்டும் பார்த்தேன். ஊடுருவி வந்த தென்றல் என் புறத்தையும், அகத்தையும் சிறிது குளிர்வித்தது. கரும்பச்சையில் மரங்கள் காற்றில் ஆடுவது, கூடுகளில் இருந்த சிட்டுக் குருவிகளின் குஞ்சுகள் தூங்கத் தாலாட்டானது! மீண்டும் நினைவலைகளில் அனன்யா என்ற அந்தப்பெயர் மட்டும் மிதந்து வந்நது. என்ன அழகான பெயர்! ஈடு இணையற்றவள் என்றல்லவா அதற்குப் பொருள்! அந்தப் பார்வதி தேவியின் பெயரல்லவா?


இந்தப் பெயருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? மூளையைக் கசக்கிப்பிழிந்ததில் வந்த மனச்சோர்வில் ஒருவாறு உறங்கிப் போனேன். 

   

ஒருமணிநேரம் கடந்திருக்கும் என நினைக்கிறேன். மற்றொரு நியூரானும் திடீரென்று விழித்துக் கொண்டது! காதருகே தேன் தடவிய ஒரு குரல்! "விக்கி! உன்னை அப்படிக் கூப்பிடும் போது என் உள்ளத்தில் தென்றல் வீசுகிறதே ஏன்?' என்றது. அந்தக் குரலின் மென்மை என் இதயத்தை வருடியது! இவ்வளவு மென்மையாகக் கூட ஒரு குரல் இருக்கமுடியுமா? அந்தக் குரலின் பெயர் தெரிந்தது! அது அனன்யாவின் குரல்!


அனன்யாவிற்கும், அவள் அழைக்கும் 'விக்கி' க்கும் என்ன உறவு? அந்த 'விக்கி' என்பது நானா? இல்லை வேறு யாரோவா? அது நான் என்றால் என் பெயர், விக்கி என்னும் விக்ரமா? விக்கிரமனா? விக்னேஷா? விக்னேஷ்வரனா? இல்லையேல் இது என் மூளையின் கனவுப் பிரதேசங்களில் என் நியூரான்களின் விளையாட்டா? இன்னொரு நியூரானும் விழித்துக் கொண்டது போல் தோன்றியது! ஒரு பெண்ணின் முகம், கடலலைகள் மேல் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பம் போல் அலையலையாய்த் தெரிந்தது! பின் நீராவி படர்ந்த கண்ணாடியில் தெரியும் உருவம் போலவும் மங்கலானது! அது தான் அனன்யாவா? ஈஸ்வரா! என்னை ஏன் இவ்வாறு சோதிக்கிறாய்? அரற்றியவாறே உறங்கிப் போனேன்!

 ****


  "பிரபு! பூலோகத்தில் ஒரு மானுடன் கதறுவது உங்கள் காதுகளுக்கு எட்ட வில்லையா? அல்லது இதுவும் உங்கள் திருவிளையாடல்களில் ஒன்றா?"

  "முக்காலமும் உணர்ந்த தேவியே! என்னைப்பற்றி நன்றாக அறிந்துமா நீ என்னிடம் இக் கேள்வியைக் கேட்கிறாய்?"


  "அந்தப் பையனும், பெண்ணும் ஒரே மருத்துவமனையில் நான்கு அறைகளின் இடைவெளியில் தானே இருக்கிறார்கள்? அவர்களை இன்னும் ஏன் சேர்த்து வைக்காமல் இருக்கிறீர்கள்?"


  "தேவி! காரணங்கள் அனைத்தையும் நீ அறிந்தும் விடாப்படியாக என்னை மீண்டும் மீண்டும் கேட்கிறாயே!"


  "பிரபு! காரணங்களை மானுடத்திற்கு உணர்த்தவேண்டியது உங்கள் கடமையல்லவா? அவ்விருவரையும் தலையில் அடித்துப் போட்டுவிட்டு அவர்கள் உடைமைகள் அனைத்தையும் களவாடிச் சென்ற பொறுக்கிகளை ஒரு விபத்தில் தண்டித்தீர்கள்! தண்டனையை உடனுக்குடன் வழங்கினீர்கள்! ஒரு பாவமும் அறியாக் குழந்தைகளை ஏன் இன்னும் நீங்கள் சேர்த்து வைக்கவில்லை!"

  "தேவி உன் விருப்பம் நிறைவேறும்! காரணத்தைப் பிறகு சொல்கிறேன்!"

*****


   அவனுடைய அறையில் இருந்து சரியாக நான்காவது அறையில் அதே போல் தன் நினைவுகளை இழந்திருந்த ஒரு பெண்ணின் மூளையிலும், திடீரென சில நியூரான்கள் விழித்தெழுந்தன!


  "அனன்யா! என் கன்னத்தில் உன் இதழ்களின் வருடலிலும், உன் மூச்சுக்காற்றின் இதமான வெப்பத்திலும் நான் மேகத்தில் மிதக்கிறேன்!" 


  "என்ன இவ்வளவு நீளமான பெயர் உனக்கு? உன்னை நான் 'விக்கி' ன்னுதான் கூப்பிடுவேன்"


திடுக்கிட்டு விழித்தாள் அப்பெண்! யார் அனன்யா? இது கனவா? அல்லது நான்தான் அனன்யாவா? இந்தக் குரலின் மென்மையும் காதலும் என் இதயத்தில் நுழைந்து

ஏன் இவ்வளவு பரவசத்தை எனக்குள் விதைத்துக் கணநேரத்தில் அது விருட்சமாகி என்னை வியாபிக்கிறது? அந்தக் குரலுக்குரிய முகத்தை விழி நரம்பினால் மூளைக்குள் தேடினாள்! பனி மூட்டத்தின் உள்ளே மங்கலாக, என்னுள் இன்பத் தென்றலை வீசும் ஒரு முகம். என்னையறியாமல் மகிழ்ச்சியில் நான் உறங்கிப் போனேன்!  

*****


   சீஃப் டாக்டர் பரமசிவன், தன்னுடைய அஸிஸ்டென்டைப் பார்த்து,"டாக்டர் முருகேஷ், அந்தப் பதினெட்டாம் நம்பர் ரூம்ல இருக்கிற பையனுக்கு ஞாபகம் வந்திருச்சா?


  "நேற்று வரை இல்லை சார்!"

  "வாங்க ரவுண்ட்ஸ் போகலாம்!"

  சீஃப் டாக்டர் தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு அறையாகச் சென்று, நோயாளிகளைப் பரிசோதனை செய்து, அன்றைய மருந்துகளைப் பிரிஸ்கிரைப் செய்தார்! பதினெட்டாம் எண் அறையின் உள்ளே அனைவரும் நுழைந்தனர்.

அந்தப் பையன் ஏதோ குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.


   "ஏதாவது நினைவு வந்ததா தம்பி?"

  சடாரெனத் திரும்பியவன்,

  "அனன்யா, விக்கி என்ற பெயர்கள் மட்டும் ஞாபகத்திற்கு வந்தன டாக்டர்! ஆனால், அது கனவா என்று குழப்பமாய் இருக்கிறது டாக்டர்!"

  சீஃப் டாக்டரும், அசிஸ்டெண்ட் டாக்டரும அர்த்தபுஷ்டியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பதினான்காம் எண் அறையில் உள்ள பெண்ணும் இதைத்தானே கூறினாள்? சீஃப் டாக்டர் மற்ற அனைவரையும் தனது அறைக்கு வருமாறு பணித்தார். அனைவரும் அறையில் கூடியதும்,

   "டாக்டர் முருகேஷ் நீங்க என்ன நினைக்கிறீங்க?"

  "இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கலாம் சார்!"

  "அப்படியென்றால் அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கலாம் என்கிறீர்களா?"

  "எஸ் சார், சந்திக்க வைத்தால் முழுநினைவுகளும் திரும்ப வாய்ப்பிருக்கிறதல்லவா?"


  "அவர்கள் கேஸ் ஷீட்டைப் பாருங்கள்! அந்தப் பையன் தாக்கப்பட்ட இடம் போரூர்! அந்தப்பெண் தாக்கப்பட்ட இடம் சோளிங்கநல்லூர்!"

  "ஆனால் சார், இருவரும் ஒரு இரண்டு மணிநேர வித்தியாசத்தில் தானே இங்கு அழைத்து வரப்பட்டார்கள்?"


  "ஆனால், தாக்கப்படும் போது இருவரும் வெவ்வேறு இடத்தில் இருந்ததால் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருபபார்கள் என எப்படிக் கூற முடியும் டாக்டர்?"

   "சந்திக்கவைத்து ட்ரை பண்ணிப் பார்க்கலாமே சார்!"

  "டாக்டர் முருகேஷ், உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை! இருவரும் சந்திக்கும் பட்சத்தில், இருவரின் மனதில் உள்ள மங்கலான பிம்பங்கள், தாங்கள் பார்க்கும் நபர்களோடு ஒத்துப் போகாவிடின், ஏற்படும் ஏமாற்றத்தால் அவர்களுக்குத் தங்களுடைய கடந்தகால நினைவுகள் திரும்புவது இன்னும் தாமதமாகலாமில்லையா?"


   "ஆமாம் சார், நீங்கள் சொல்வது சரிதான்!"

   "நாம் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்! அதுவரை யாரும் இதைப்பற்றி அந்த இருவரிடமும் எதுவும் சொல்லாதீர்கள்!" எச்சரித்துவிட்டுக் கீழே இறங்கி வந்தார் டாக்டர் பரமசிவம்! கீழ்ப்பாக்கத்தில் உள்ள இதே மருத்துவமனையின் பிராஞ்சுக்கு அவர் செல்ல வேண்டும்.

   கீழே வந்து ரிஸப்ஷன் பெண்ணிடம், "மூர்த்தி எங்கம்மா?"

டிரைவர் மூர்த்திதான் எப்போதும் கீழ்ப்பாக்கம் பிராஞ்ச்சிற்கு டாக்டர் பரம சிவத்தை அழைத்துச் செல்வான். குளத்தூரில் உள்ள மற்றொரு பிராஞ்ச்சிற்கு டாக்டர் ரிஷியை சேகர் அழைத்துச் செல்வான். 

  "சார், சேகர் லேட்டா வந்ததால மூர்த்தியை டாக்டர் ரிஷி கூட்டிக்கிட்டுப் போயிருக்கார் சார்!"


  "சரி அப்ப சேகரைக் கூப்பிடு!" என்றவர், 'ஓ மை காட், இதை ஏன் நான் யோசிக்கவில்லை?' ட்ராமா யூனிட்டிற்கு ஓடினார்.

   அங்கு ரெஜிஸ்டர் மெயின்டெய்ன் பண்ணும் பையனிடம்,"ரெண்டு நாள் முன்னாடி ஈவ்னிங் ரெண்டு assaulted cases அட்மிட் ஆனாங்களே, அந்த ரெக்கார்ட்ஸ் காட்டுங்க! பார்த்தார்! முதலில் அந்தப் பெண்தான் அட்மிட் ஆகியிருந்தாள். அட்மிட் ஆன நேரம் இரவு ஒன்பது மணி! தாக்கப்பட்ட இடம் போரூர்! அழைத்துவந்த டிரைவரின் பெயர் குமார்! போரூர் ஏரியாவிற்கு குமார்தான் டிரைவர்! 


பத்து மணிக்கு அந்தப்பையன் அட்மிட் ஆகியிருந்தான்! தாக்கப்பட்ட இடம் சோளிங்கநல்லூர்! டிரைவர் பெயர் முத்து! சோளிங்க நல்லூருக்கு முத்துதான் டிரைவர். பெரிய மருத்துவமனை என்பதால், குழப்பம் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு டிரைவர் உண்டு. ஆம்புலன்ஸ் மெயின்டனென்ஸ் மேனேஜர் உடனே அந்தந்த டிரைவருக்குத் தகவல் சொல்லிவிடுவார். அதனால் காலதாமதமின்றி விரைவாக நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள்!


   "டிரைவர் முத்துவைக் கூப்பிடுங்க!" சீஃப் டாக்டர் கத்த, டீ குடித்துக் கொண்டிருந்த முத்துவிடம் யாரோ சொல்ல, அந்த முத்து ஓடோடி வந்தான்!

  "பதட்டப்படாம நல்லா யோசிச்சு சொல்லு! ரெண்டு நாளைக்கு முன்னால் இந்தப் பையனை எங்கேருந்து கூட்டிக்கிட்டு வந்தே!"

  முத்து, யோசிக்கவே அவசியமில்லாமல் சொன்னான்!

  "போரூர்லேருந்து சார்!"


  "உன்னோட ஏரியா சோளிங்க நல்லூர்தானே! நீ ஏன் போரூர் போனே?"

  "அன்னிக்கு, போரூர் ஏரியா டிரைவர் குமார், எதோ அவசர வேலைன்னு வீட்டுக்குப் போய்ட்டான் சார். அப்ப நான் மட்டும்தான் சார் ஃபிரீயா இருந்தேன். மேனேஜர்தான் சார் போகச் சொன்னார்!"


  சீஃப் டாக்டர் மேனேஜர் பக்கம் திரும்பி,"ரகு, என்ன இது குழப்பம்?"

  "சார், முதல்லே இந்தப் பெண்ணைப்பற்றி மட்டும்தான் தகவல் சொன்னார்கள்! அப்போது குமார் அங்கிருந்தான். நான் இன்ஃபார்ம் மண்ணியவுடன் அழைத்து வந்துவிட்டான்! அதற்குப்பிறகு அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டான். ஒரு மணிநேரம் கழித்து அதே ஏரியாவில் இன்னொரு ஆணும் தாக்கப்பட்டிருப்தாகத் தகவல் சொன்னார்கள்! முத்து ஃபிரீயாக இருந்ததால் அவனை அனுப்பினேன்!"

   "அது சரி, அப்புறம் ஏன் ரெஜிஸ்டரில் சோளிங்க நல்லூர் என்று போடப்பட்டிருக்கிறது?"


  "சார், நான் சாப்பிட வெளியே போயிருந்த நேரத்தில், என் அசிஸ்டெண்ட், முத்துவைப் பார்த்தவுடன் ஏரியா சோளிங்கநல்லூர்தான் என அவனாகவே யூகித்து ரெஜிஸ்டர் பண்ணியிருக்கலாம் சார்! இது அவனுடைய கையெழுத்துதான் சார்!"

   "ரெஜிஸ்டர நல்லா மெய்டெய்ன் பண்ணீங்க போங்க! முதல்ல குமார ஃபோன்ல கூப்பிட்டு போரூர்ல எந்த

இடம்னு நல்லாத் தெளிவாக் கேளுங்க!"

  "ஏம்பா முத்து போரூர்ல எந்த இடம்?" 

  "பிள்ளையார் கோவில் ஸ்ட்ரீட்டும், ஃபர்ஸ்ட் மெயின் ரோடும் கிராஸ் ஆகிற இடத்துல ஒரு மொபைல் ஷாப் பக்கத்தில சார்!"

   அதே பதிலை மேனேஜர் ரகுவும் குமாரிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு தரவும், லிஃப்டுக்கு வெயிட் பண்ணாமல், தன் வயதையும் பொருட்படுத்தாது இரண்டாவது மாடிக்கு ஓடினார் சீஃப் டாக்டர் பரமசிவம்!

   மூச்சிறைக்க,"டாக்டர் முருகேஷ், இரண்டுபேரும் ஒரே இடத்தில்தான்

தாக்கப்பட்டிருக்கிறார்கள்! இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்தான். வாருங்கள் இருவரையும் சந்திக்க வைப்போம்!"

  டாக்டர் முருகேஷ் வந்தவுடன்,"கவுன்சிலிங் ரூமில் அவர்கள் இருவரையும் தனியே விடுங்கள். அவர்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு மனதளவில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே ட்ரீட்மெண்ட் கொடுப்பதற்காக, நாம் வெளியே இருந்து வாட்ச் பண்ணலாம்!"


  கவுன்சிலிங் ரூமில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது! இருவரின் மூளையிலும் கோடிக்கணக்கான நியூரான்கள் ஒரே சமயத்தில், வானவேடிக்கை நிகழ்த்தின! இருவரின் முகங்களலும் உணர்வுகளின் கலவைகள் போட்டி போட்டு நடனமாடிக் கொண்டிருந்தன! விழிப்படைந்த நியூரான்கள், நினைவுச் சுரங்கத்திலிருந்து பொக்கிஷங்களை ஒரேயடியாய்த் திறந்து காட்ட, அத்தனை நினைவுகளும் இருவரையும் ஆக்கிரமிக்க,"அனன்யா!" என்று தழுதழுக்க அழைத்தான், 'விக்கி' என்ற விக்ரமாதித்தன்!


  "விக்கி" என்று கதறியபடியே ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்ட அனன்யா, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அழுகையில் மீண்டும், மீண்டும் தோன்றிய அவர்களின் நினைவு மீட்சிகள், அவர்களின் காதலின் ஆத்மார்த்தத்தை இருவருக்கும் உணர்த்த, அங்கு ஒரு முத்தமழை பொழிந்தது! ஒரு காதல் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடியது. டாக்டர். பரமசிவம் யாருக்கும் தெரியாமல் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்!

*******

   "தேவி, ஏன் இந்தத் திருவிளையாடல் என்பதை மனிதர்களுக்கு நான் இன்னுமா விளக்கிக் கூற வேண்டும்?"

  "வேண்டாம் பிரபு! அவர்களே புரிந்து கொள்வார்கள்! உங்களுடைய ஆசீர்வாதங்களை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்!"

  "தேவி, எல்லா உயிர்களும் நம் குழந்தைகள் தானே! ஆசீர் வாதங்களைப் பாகுபாடின்றி எல்லா உயிர்களுக்கும் கொடுப்போம்!"


Rate this content
Log in

Similar tamil story from Drama