மாமனார் கோழி
மாமனார் கோழி
இது வில்ஃபோனும் செல்போனும் வராத காலத்து கதை
அடிக்கடி வாசலுக்கு வந்து தெருவை எட்டி பார்ப்பதும் வீட்டின் உளளே செல்வதுமாக இருந்தாள் கலா.
அதற்கு காரணம் என்ன? அவள் அப்பா ஊரில் இருந்து வருகிறார். தன் தாய், தந்தை,அக்காள், அண்ணன், தம்பி, இன்னும் தான் பிறந்த வீடு,வளர்ந்த ஊர், கொஞ்சி விளையாடிய கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, நாய், போன்ற வற்றையும் கூடவே அம்மாவின் கை ருசி இப்படி எல்லாவற்றையும் ஒரு துறவியை போல் துறந்துவிட்டு கணவன் என்ற ஒரு நம்பிக்கையை கைபிடித்து இதுவரை தெரிந்திராத வீட்டுக்குள் புரிந்திடாத மனிதர்களை அறிந்து கொண்டு புது இலக்கை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து தன்னை யார் பார்க்க வந்தாலும் அது அவளுக்கு திருநாள் தானே.
சட்டை பொத்தானை போட்டுக் கொண்டே வந்த கலாவின் கணவன் ராஜா "என்ன கலா குழம்பு வாசனை வீட்ட தூக்குது அப்பாவுக்கு ஸ்பெசல் சமயலா?" என கேட்க்க அதற்கு அவள் சிரித்துக்கொண்டே. " நீங்க மட்டும் என்ன மாமனார் வராருன்னதும் நல்ல வெடக்கோழியால்ல வாங்கிக்கிட்டு வந்தீங்க ?" என்றாள் " அதெல்லாம் ஒன்னுமில்ல காலையில மட்டன் எடுக்கலாமுண்ணு தான் மார்க்கெட்டுக்கு கிளம்பினேன் ஆன போற வழியிலேயே தெரிஞ்ச ஆட்டோக்கார அண்ணாச்சி எங்க இந்தபக்கம்ன்னு கேக்க நானும் என் மாமனார் ஊரிலிருந்து வறாரு அதுதான் மட்டன் எடுக்க போறேன்னு சொன்னதுக்கு அவரு மாமனாருக்கு மட்டன்தான் எடுக்கணுமா? கோழி அடிச்சு கொழம்பு வச்சு குடுக்கக்க கூடாதா சாரேன்னார் நான் அதுக்கு நமக்கு நல்ல கோழியானு பாத்து வாங்கறது சரிபட்டு வராதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள சட்டுன்னு ஒரு வெடக் கோழியை அவர் ஆட்டோவிலிருந்து எடுத்து இதுக்கு மேல நல்ல கோழி பண்ணையில் கூட கிடைக்காது குடுக்குறத குடுத்துட்டு வாங்கிட்டு போ சாரேன்னார் நானும் கோழி நல்லா இருக்குன்னு வாங்கிக்கிட்டு வந்தேன் அவ்வளவுதான் என்றவன் நான் போய் வாழை இலை வாங்கிக் கொண்டு வரேன் " என்று கூறி விட்டு வெளியே கிளம்ப கலாவோ சமயலறையில் இருந்து சமைத்தவற்றினை டைனிங் டேபிலுக்கு மாற்ற தொடங்கினாள்.
ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும் அம்மா கலா என்று வாசல் புறத்திலிருந்து குரல் ஒலிக்க. அதைக்கேட்டு கலா அது தன் அப்பாவின் குரல் என்பதை அறிந்து துள்ளிக்குதித்து வாசலில் நின்ற அப்பாவை வரவேற்க ஓடினாள்.
"வாங்கப்பா" என்றபடிஅப்பாவிடம் இருந்து கைப்பையை வாங்கிக்கொண்டாள்.
அவளப்பா வீட்டினுள் நுழைந்த படி "ஆயி சவுக்கியமா இருக்கியாடா?" என்று கேட்க
" ம் ....இருக்கேன்பா"என்றாள்.
" மாப்பிளை தம்பி எப்படி இருக்காவோ?" கேட்டார் அப்பா
"ம்... நல்லா இருக்காரு" என்றவள் தொடர்ந்து "அப்பா நீங்க எப்படி இருக்கீங்க...
அம்மா நல்லா இருக்காங்களா? தம்பி எப்படி இருக்கான்....." என்று அடுக்கிக்கொண்டே போக எல்லாரும் சாவுக்கியமா இருக்காங்க என்றவர் குடிக்க தண்ணீர் கொஞ்சம் குடும்மா என கேட்க பேசிக்கிட்டே இருந்து மறந்துட்டேன் என்றவள் தண்ணீர் கொடுத்த பின் "ஏன்பா இவ்வளவு லேட்டு"என்றாள்.
"இல்லம்மா வரப்ப ஒரு சின்ன பிரச்சினை"என்று சொல்ல என்னாச்சு என்று பதறிய வளிடம் அத அப்புறம் பேசிக்கலாம் இப்ப எனக்கு பசிக்குது சமயல் வாசன வேற.... பசிய கூட்டுது டிபன் சாப்பிடலாமா என்று உரிமையாக மகளிடம் கேட்டார் அப்பா. அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது என்னப்பா நீங்க...... போய் கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம் என்று சொன்ன கலா. துண்டை எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட அவர் ஆமா எங்க மாப்பிள்ளையை காணோம் என்று கேட்டு முடிப்பதற்குள் கலாவின் கணவன் ராஜா வாழை இலையோடு உள்ளே வந்தான். "வந்துட்டேன்" என்றான்.மாமனாரும் மருமகனும் நலம் விசாரித்து முடித்து மாமனார் கை கால் கழுவிவிட்டு டைனிங் டேபிளின் முன் நாற்காலியில் உட்கார்ந்து இலையில் கலா வைத்த ஆவி பறந்த இட்டிலியை பிட்டு மணமணத்த கோழி குழம்பில் புரட்டி எடுத்து சாப்பிட தொடங்கினார்.
"அம்மாடி கோழி குழம்பு ருசி ரொம்ப பிரம்மாதம் அப்படியே உன் பாட்டியோட கை பக்குவம் அப்படியே இருக்கு..... ம்யும்ம்..... அட அட அட..... இந்த கோழிக்கறி என்னமா பஞ்சு பஞ்சா வெந்துருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு திருப்தியான விருந்து கொடுத்து அசத்திட்டீங்க"என்றார் ராஜாவின் மாமனார்.
ராஜவோ "மாமா சாப்பிடுங்க அப்புறம் புகழலாம் என மாமனார் சிரித்துக்கொண்டே சாப்பிட தொடங்கினார்
ஒருவழியாக மாமனார் சாப்பிட்டு முடித்து வாஷ் பேசினில் கை கழுவி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். யம்மா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலை? என்று அவர் கேட்க இதோ சாப்பிடுரோம் என்ற படி தன் கணவனுக்கு இலை போட்டு இட்டிலியை வைத்தாள். அப்போது மாமனார் மருமகனைப் பார்த்து தம்பீ உண்மையிலே இன்னைக்கு நம்ம வீட்டு கோழிதான் இங்க குழம்பாக........ என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசலில் இருந்து" சாரே...... சாரே" என கூபிடும் குரல் கேட்டது . யாரென்று பார் கலா என்று ராஜா சொல்ல பார்த்துவிட்டு வந்து சொன்னாள்" உங்களுக்கு கோழி குடுத்த ஆட்டோ காரரு வந்திருக்கார் " அண்ணாச்சி.....என்றவாறு ராஜா எழுந்து வாசலை நோக்கி போனான்.
வாசலில் ஆட்டோ காரர் ராஜா வருவதை பார்த்து சற்று குரலை உயர்த்தி " என்னா சரே காலையில குறச்ச விலைக்கு கோழி குடுத்தா கிழிஞ்ச நூறு ரூவா தாளை குடுத்திட்டு வந்துட்டியே சார் நா இத்த மாத்த முடியாம அல்லாடிக்கிட்டு இருக்கேன் எதோ பக்கத்தில சவாரி வந்ததால ஒவ்வீடு தெரிஞ்சதால வந்தேன் . வேற ரூவா குடு சாரு" என்று கிழிந்த ரூபாய் நோட்டை ராஜாவிடம் கொடுத்தான்.
சத்தம் கேட்டு அவன் மாமனாரும் மனைவியும் வாசலுக்கு வந்தனர். ஆட்டோ காரரை பார்த்த மாமனாரின் கண்கள் சிவந்து விட்டது மீசை துடிக்க ஆரம்பித்தது.மாமனாரை கண்ட ஆட்டோ காரார் பீதியில் உறைந்து முகம் வெளுத்து வியர்க்க ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று ராஜாவும் கலாவும் புரியாமல் பார்க்க மிக கடுப்பாக மாமனார் பேச ஆரம்பித்தார் " மாப்பிளை இந்த ஆட்டோ காரனை முன்னாடியே உங்களுக்கு தெரியுமா? இவன் ஒரு பிராடு அயோக்கிய பய .... காலையில இரயில் வே ஸ்டேசனில் இருந்து நம்ம வூட்டுக்கு இந்த ஆட்டோ காரன் ஆட்டோவில் வாடகை கேக்காம ஏறி தொலைச்சேன் அப்புறம்தான் வாடகை பேசலையேனு இந்த ஆளுக்க்கிட்ட வாடகை என்னனு கேட்டேன் அவன் சொன்ன வாடகை நமக்கு அதிகம்முண்ணு அங்கேயே இறககிவிட சொன்னதுக்கு அங்க நிறுத்தாம நோ பாருகிங், ஒன்வேனு சொல்லி தூரமா கொண்டு போய் இறக்கி விட்டதில்லாது.
நா ஆசையா உங்களுக்கு ஊரிலிருந்து கொண்டு வந்த கோழிய ஆட்டோவோட கிளப்பிக்கிட்டு போனது மட்டுமில்லாம அந்த கோழிய இந்த மாமனார் கோழிய மருமகன் கிட்டயே விற்க என்ன துணிச்சல்? ராஸ்கல் ....இவன போலீஸ் கிட்ட புடிச்சு குடுக்கணும் "என்ற படி ஆட்டோக்காரன் மீது பாய எத்தனிக்க ஆட்டோக்காரன் விட்டால் போதும் என்று ஒடி ஆட்டோ வோடு மறைந்தான்.
அப்பாவை சமாதானம் செய்து வீட்டுக்குள் அழைத்துச்செல்ல பின்தொடர்ந்து வந்த மருமகன் தலையை சொரிந்து கொண்டு புலம்பினான்" கடைசியில அது மாமனார் கோழியா"
வாலறிவன்
