arivuchelvan viswanathan

Others

4  

arivuchelvan viswanathan

Others

நெருஞ்சி பூத்தது

நெருஞ்சி பூத்தது

4 mins
638



டாக்டர் சொன்னார்"இனிமே ஒன்னும் பிரச்சனை இல்ல நான் சொன்ன மாதிரி பிசியோதெரபி, வாக்கிங், ஹெல்த் ஃபுட் இதெல்லாம் பாலோ பண்ணுனா போதும்"

என் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தேன் என்றைக்கும் இல்லாத அவ்வளவு மகிழ்ச்சி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

எனது மகனும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீரோடு சிரித்துக்கொண்டனர்.

ஹாஸ்பிடல் வாசலில் கார் வந்து நின்றது. டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டோம் மகனும் மகளும் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று என்னை தாங்கிக்கொள்ள மெதுவாய் சேரில் இருந்து எழுந்து நடக்கத் தொடங்கினேன். என் மனைவி என் பின்னே நடந்து வந்தாள்.

காரினுள் என்னை மெல்ல உட்காரவைத்து அனைவரும் ஏறிக்கொண்டனர் கார் வீட்டை நோக்கி விரைந்தது.

சாலையில் கார் முன்னோக்கி செல்ல செல்ல என் நினைவுகள் சற்றே பின்னோக்கி சென்றது. அந்த சம்பவம் நடந்து எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும் என்று என்னால் சொல்ல தெரியவில்லை என் மனைவிடம் தான் கேட்க வேண்டும். நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். திருமணமான எல்லா ஆண்களும் அனேகமாக இப்படித்தான் நடந்து கொள்கிறாகள் அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் , அதிகாரிகளிடம் அல்லது மற்றவரிடம் காட்ட முடியாத கோபத்தையும் எரிச்சலையும் வீட்டில் உள்ள மனைவியிடம் காட்டி விடுகிறாகள். நானும் அப்படித்தான் அன்று நடந்து கொண்டேன் அதனால் எவ்வளவு சிரமங்கள்.

அன்று வேலை முடிந்தது , மத்தியானம் சாப்பிடவில்லை வேலைப்பளு. மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தேன் மனைவியிடம் மதியம் சாப்பிடவில்லை என்பதை சொல்லி ஏதாவது டிபன் செய்துவை குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றேன். குளித்து முடித்து விட்டு உடுப்பு மாற்றி டைனிங் டேபிளில் அமர்ந்தேன். என் மனைவி தட்டை வைத்து இட்லி வைத்து சட்டினி சாம்பார் என பரிமாறினாள். ஒரு துண்டு இட்லியை பிட்டு சட்னியில் தொட்டு வாயில் வைத்தேன் எனக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது"உனக்கு எத்தன தடவ சொல்றது அறிவில்ல நாயே.... சட்னில உப்ப அள்ளிக் கொட்டி வச்சிருக்கே! சே.... இந்த வீட்டுல ஒரு வாய் சோறு ருசியா திங்க முடியாது எல்லாம் என் தலையெழுத்து, சனியன என் தலையில கட்டி வச்சு உயிர எடுக்குறாங்க"என்று மனைவியை பார்த்து கத்தியவாறு தட்டை தட்டிவிட்டு விட்டு எழுந்து சென்று சட்டை போட்டுக்கொண்டு வெளியே செல்ல எத்தனித்தேன்.

என்னை தடுத்த என் மனைவி ஏதோ சொல்ல முற்பட்டாள். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் "வெளியாவாது போய் நிம்மதியா திங்க விடு" என்று கத்தியபடி வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் நடந்தேன் இருந்த கோபத்தில் எதிரே வந்த ஆட்டோவை சரியாக கவனிக்கவில்லை ஆட்டோ என் மீது மோதி என்னை தூக்கி வீசியது.

எனக்கு நினைவு திரும்பியபோது நான் படுக்கையில் கிடத்தப்பட்டு இருந்தேன் அது ஒரு மருத்துவமனை என்பது தெரிந்தது. ஆனால் என் இமைகள் இமைக்கவில்லை என் உடல் உறுப்புகள் எதுவும் அசையவில்லை.

மற்றவர்கள் பேசுவது என் காதில் விழுந்தது ஆனால் கண்களை கூட அசைக்க முடியவில்லை என்னைச்சுற்றி மனைவி மகன் மகள் நின்று கொண்டு அழுதது ,டாக்டர் பேசியது எல்லாம் என் காதில் விழுந்தது என்னால் பதில் சொல்லவோ அல்லது சைகை செய்யவோ முடியவில்லை. ( இதை விட ஒரு பெரிய தண்டனை ஒருவருக்கு இருக்க முடியுமா?) இன்னும் முழுமையாகச் சொன்னால் உடலில் உணர்ச்சியே இல்லாமல் இருந்தது.

என் மனைவி டாக்டரை பார்த்து எப்படியாவது என் வீட்டுக்காரரை காப்பாத்துங்க என்று கதறியது , மகனும் மகளும் அப்பா அப்பா என்று கத்தியது எல்லாம் காதின் வழியே சென்று நெஞ்சை உலுக்கி எடுத்தது வேதனையில் இதயம் துடித்து.. அம்மா.... பேசக்கூட முடியலையே என்ன கொடுமை? வேற எதுவும் செய்ய இயலவில்லை என் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே ததும்பி வழிந்து கொண்டிருந்தது.

டாக்டர் சொன்னார் உங்க வீட்டுக்காரருக்கு மூளைக்கு போற நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு .கோமா நிலையில் இருக்கார் . இந்த நிலையில் இருந்து அவர் மீண்டு வரலாம் அல்லது வராம கூட போகலாம் ஹாஸ்பிடல்ல பேஷன்டை வைத்து பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை அதனால வீட்டில கொண்ட வச்சு பாத்துக்கங்க என்றதால் வீட்டுக்கு என்னை கொண்டு வந்து விட்டார்கள்.

கட்டிலில் மரக்கட்டையாய் கிடந்த என்னை ஒரு கைக்குழந்தை பார்ப்பதுபோல் கனிவோடு பார்த்துக்கொண்டாள் என் மனைவி . மகன் மகள் இவர்களின் துணையோடு என்னை ஒரு தாய்க்கோழி தன் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல் பாதுகாத்து அரவணைத்து என்னை பார்த்துக் கொண்டாள்.

நாள் முழுதும் வேலை வேலை என்றும் இரவு வீடு திரும்பி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் காலை வேலை என்று எந்திரத்தனமாய் வாழ்ந்த நான் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கி அன்பை பரிமாறிக் கொள்ளவும் அவர்களை புரிந்து கொள்ளவும் தவறிவிட்டேன்.” அம்மா.... இப்படியே இறந்து போய் விடக்கூடாது நான் கோபம் அற்றவனாக என் மனைவி குழந்தைகளோடு அன்பாக வாழ்ந்து காட்ட வேண்டும், என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து அழகு பார்க்க வேண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?".

காலம் உருண்டோடியது எவ்வளவு நாட்கள் என்று தெரியாது ஒரு நாள் வழக்கம் போல என் மகன் என்னை சாய்த்து பிடித்துக்கொள்ள என் மனைவி ஈரத்துணியால் என் உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்தாள் சில விநாடிகளில் அது நடந்துவிட்டது. எப்படியோ என் மகனின் பிடி நழுவ என் மகனும் மனைவியும் தடுமாற நான் வழுக்கிக்கொண்டு காட்டில் இருந்து கீழே பொத்தென்று விழுந்தேன்"அம்மா..ஆ..." என்று வாய்விட்டு கத்தி விட்டேன் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் ஒரு கடுமையான வலி.... மெல்ல அங்கே நிகழ்வதைக் கவனித்தேன்.

பதட்டத்தோடு அறைக்குள் இருந்து ஓடிவந்த எனது மகள் எனது மகன் மனைவி அனைவரும் என்னை தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள். எனது மகன் படபடப்போடு மலர்ந்த முகத்துடன் சொன்னான்"அம்மா அப்பா கத்தினார் கவனிச்சீங்களா அப்பாக்கு உடம்பு சரியாயிடுச்சுன்னு நினைக்கிறேன் டாக்டர்கிட்ட அப்பாவை அழைச்சிக்கிட்டு போகலாம் வாங்கம்மா".

அதன் தொடர்ச்சியாகத்தான் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தேன்.

கார் வீடு வந்து சேர்ந்தது, வீட்டிற்குள் சென்று சோபாவில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தேன் என் மனைவி சொன்னாள் சூடா இட்லியும் சட்னியும் செய்து வைக்கிறேன் சாப்பிட...... குளிச்சிட்டு வாங்க என்றாள் . என் மகனின் துணையோடு குளித்துவிட்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து என் மனைவி பரிமாறிய இட்லி சட்னியை ருசித்து சாப்பிட்டேன்.

என் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்து வாஷ் பேசினை நோக்கி நடந்தேன் காலம் என்ன என்ன வித்தை எல்லாம் செய்கிறது, ஒரு காலத்தில் என் மகன் என் கையை பிடித்துக்கொண்டு நடந்தான் இன்று நான் என் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறேன்.

கை கழுவி திரும்பும்போது கிச்சனிலிருந்து என் மனைவி மகளிடம் பேசும் குரல் கேட்டது இன்னிக்கும் வழக்கம் போல மறந்துட்டு இரண்டு தடவை சட்னியில் உப்பு போட்டு கலக்கிட்டேன் போச்சு,. சத்தம் போட போறாங்கன்னு பயந்துகிட்டே நின்னேன் ஆனால் இத்தனை நாள் உடம்பு சரி இல்லாம இருந்ததுல நாக்கு செத்து போச்சு போலருக்கு அந்த சட்னியை தொட்டு தொட்டு நாலு இட்லியைம் சாப்பிட்டார்னா பாரேன் ஒரு வழியா தப்பிச்சேன் என்றாள். எனக்கு சிரிப்புதான் வந்தது உப்பு சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் கோபப்படக்கூடாது என்று எனக்கு தெரியாதா? கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது விட்டுக் கொடுத்தலும் அன்பாய் இருப்பதும் மட்டுமே ஒரு ஆனந்த மயமான குடும்பத்தை உருவாக்கும் என்று தெரியாதா? சட்னியில் உப்பு கரித்தது நான் அறிவேன் ஆனால் டம்ளரில் இருந்த தண்ணீரை சட்னியில் நான் கலந்து கொண்டதை அவள் அறியாள்.....

திடீரென்று "பாட்டி..... பாட்டி" என்று பேரன் குரல் ஒலிக்க "தோ வந்துட்டேன் தங்கம்" என்றபடி தன் கண்கள் பனிக்க கண்ணீர் முத்துக்கள் சிந்த அவள் படித்துக் கொண்டிருந்த

அவளது கணவனின் டைரியை மூடி தலையணைக்கு அடியில் வைத்து விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு பேரன் இருக்கும் திசை நோக்கி நடக்கத் தொடங்கிய அவளை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.... சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மாலை இட்ட புகைப்படத்தில்.

                          - வாலறிவன்

                            



Rate this content
Log in