Arivuchelvan viswanathan

Romance Inspirational

5  

Arivuchelvan viswanathan

Romance Inspirational

கருணை

கருணை

3 mins
768



அந்தப் பையன் பஸ் நிலைய கட்டிடத்தின் வாசலில் ஓரத்தில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் கையேந்திக் கொண்டிருந்தான். வருவோர் போவோர் அவர்களால் இயன்ற தொகையை கொடுத்து சென்றார்கள். அவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அருகே ஒரு கட்டைப் பை. பையன் உடைகளை பார்க்கும்போது ஏழ்மைக்கு பிச்சை எடுப்பது போல் தோன்றவில்லை அனேகமாக வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.


மெல்ல அவன் அருகே சென்றேன் அவன் என்னை பார்த்து அண்ணே ஏதாவது இருந்தா குடுங்க என்று கேட்டான்.

நான் அவன் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்தேன்."டேய் உன்னை பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே டா தம்பி"என்று நான் கேட்டதும் அவன் சற்று முழித்தபடி மிரண்டு போனான். பையன் பயப்படுகிறான் என்பதை புரிந்துகொண்ட நான் என் குழந்தைகளுக்கு வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட்டை ஒன்றை பேக்கில் இருந்து எடுத்து அவன் கைகளில் திணித்தபடி கேட்டேன்"நீ எந்த ஊரு பா" "இதே ஊருதான் அண்ணே"என்றான்.


அவனுக்கு துணிச்சல் சற்று அதிகம்தான் போல சற்று தெளிவாகவே பேசத்தொடங்கினான். ,

"அப்பா என்ன பண்றாரு?

"அப்பா இல்ல அம்மாதான்"

"இந்த ஊருன்னா எங்க?"

"நடராஜபுரம் மூனாந்தெரு"

"ம்...... சரி... .. டீ சாப்பிடலாமா?" என்றேன் , அவன் "வேண்டாம்" என்றான் "அது போகட்டும்

இங்க என்ன பண்ற "என்றேன்.


அவன் என்னை பார்த்துவிட்டு மேலே பார்த்தபடி வீட்டை விட்டு வந்துட்டேன் என்றான் சர்வசாதாரணமாக. ஏன் அம்மா அடிச்சாங்களா ? என்றேன் அவனும் ஆமாம் என்றான். ஏன் மார்க் கம்மியா வாங்கிட்டியா இல்ல பரீட்சையில் ஃபெயில் ஆயிட்டியா என்று கேட்டேன் அதற்கு அவன் சற்று ரோசத்த்தோடே குரலை உயர்த்தி அண்ணே நல்லா படிப்பேன், கிளாஸ் பஸ்ட் தெரியுமா? என்றான். அப்புறம் ஏன் வீட்டைவிட்டு வந்த என்றதற்கு அவன் ஒரு முறை ஆழமாய் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு சொல்லத் தொடங்கினான்.


"வீட்டு பக்கத்துல ஒரு நாய் ரெண்டு குட்டி போட்டுச்சு அதுல ஒரு குட்டி பிறந்தவுடனேயே செத்துப்போச்சு ஒரே ஒரு குட்டி மட்டும் இருந்துச்சு அது பார்க்க அவ்வளவு அழகா இருக்கும் அதை எனக்கு ரொம்ப புடிக்கும் என் அம்மாவுக்குத் தெரியாம அதோட அம்மா நாய்க்கு  பிஸ்கட் சோறு எல்லாம் போடுவேன்.ஒரு நாள் எனக்கு கொடுத்த முட்டையை கூட என் அம்மாவுக்கு தெரியாம அதுக்கு போட்டிருக்கேன் . என்னா அம்மாவுக்கு அந்த நாய்க்குட்டி யையும் நாயையும் பிடிக்கவே பிடிக்காது அதனால தான் அம்மாவுக்கு தெரியாம போடுவேன். அம்மா அப்பப்ப இது தெரிஞ்சு என்னைய திட்டிக்கிட்டே இருப்பாங்க.


ஒரு நாள் அம்மா கடைக்கு போய்ட்டு வந்தாங்க. நான் அப்போ உள்ள படிச்சிகிட்டு இருந்தேன். டேய் சுரேஷ் இங்க வாடான்னு கூப்பிட்டு அந்த அம்மா நாய் ரோட்ல ஏதோ வண்டி அடிச்சு செத்து கிடைக்குன்னு சொன்னாங்க. அதைக் கேட்ட எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு. அழுகையா வந்துச்சு,அந்தக் குட்டிக்கு பசிக்குமே அதுக்கு பால் கொடுக்குற அம்மாவும் செத்துப்போச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.


அம்மா பாத்திரம் விளக்க போனப்போ வீட்டிலிருந்த பழைய பால் பாட்டில்ல கொஞ்சமா பால ஊத்தி எடுத்துகிட்டு போய் அந்த குட்டி நாய்க்கு ஊட்டிக்கிட்டு இருந்தேன் அதை அம்மா பாத்துட்டு தயிருக்கு வச்சிருந்த பாலை கொண்டு போய் நாய்க்கு விடுறியாடா? ன்னு சொல்லி கோவமா அடி அடின்னு அடிச்சுட்டாங்க" சொல்லிக் கொண்டிருந்த அவன் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது இரண்டு கைகளாலும் கண்களை துடைத்துக்கொண்டு என்னை பார்த்து தலையை ஆட்டியபடி "அண்ணே நீங்களே சொல்லுங்க தயிர் இல்லாம நம்ம இருக்க முடியாதா,? அந்த குட்டி நாய் பால் இல்லாட்டா செத்து போய்டாதா? அதுதான் கோவம் வந்துருச்சு வீட்டைவிட்டு வந்துட்டேன்," என்று சொல்லி முடித்தான்.


அவன் சொன்னதை முழுமையாக கேட்ட நான் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன்.பேசத் துவங்கினேன்." தம்பி நீ சொல்லுறது சரிதான், ஆனா இப்படி வீட்டை விட்டெல்லாம் வரக்கூடாது. தம்பி..... இப்ப பாரு  அந்த நாய்க் குட்டிக்கு பசிக்குமேன்னு நீ உன் அம்மாவுக்கு தெரியாம பால் கொடுத்ததால உன் அம்மா உன்னை அடிச்சாங்கன்னு நீ வீட்டை விட்டு இங்க வந்துட்டே.. யோசிச்சு பாரு இப்ப அங்க அந்த நாய்க்குட்டி பசியோட இருக்குமே அதுக்கு யார் இப்ப பால் கொடுப்பாங்க "என்ற என்னை இடைமறித்து "அண்ணே நீங்க சொல்றது சரிதான் அதான் நான் வரும்போதே அந்த நாய்க்குட்டியை தூக்கிட்டு வந்துட்டேன் அதுக்கு பாலுக்கு தான் இப்ப காசு சேத்துக்கிட்டு இருக்கேன்" என்றபடி அவன் அருகே வைத்திருந்த கட்டை பையை திறந்து காண்பித்தான் உள்ளே குட்டி நாய் தூங்கிக்கொண்டிருந்தது பக்கத்தில் சின்னதாக ஒரு பால் பாட்டில் கிடந்தது.


நான் ஆச்சரியப்பட்டு போனேன் அந்தக் குட்டிப் பையனின் கருணையை நினைத்து உள்ளம் நெகிழ்ந்தேன். மனிதன் பிறக்கும்போது என்னவோ அன்போடும் கருணையோடும் பிறக்கிறான் பின்னாளில் வளர வளர சுயநலத்தால் தன் சுயத்தை இழக்கிறான். நான் அந்த சிறுவனை வீட்டிற்கு கொண்டு போய் விடுவது என முடிவு செய்தேன். அவனைப் பார்த்து"ஏம்பா இந்த நாய்க்குட்டி அதோட அம்மாவைத் தேடிப் பார்த்துட்டு அம்மாவைக் காணோம்னு ரொம்ப கவலை படும்மில்ல"என்றேன்.அவன் சற்று கவலை தோய்ந்த முகத்தோடு,"ஆமாம்.....பாவம்" என்றபடி தலையாட்டினான்.


நான் தொடர்ந்தேன்"அதே மாதிரி நீ உன் அம்மாவ விட்டுட்டு வந்துட்டியே அவங்க அங்க உன்னை தேடி பார்த்துட்டு பிள்ளையை காணோமேன்னு கவலைப்பட்டு அழுதுகிட்டு இருப்பாங்களே அது பாவம் இல்லையா?"என்றதும் அவன் கண்களில் இருந்து நீர் பொல பொல என்று கொட்டியது "அம்மா........ அம்மா கஷ்டப்படுவாங்க அம்மாவை போய் பாக்கணும் .....      அம்மா இனிமே இப்படி பண்ணமாட்டேன்னு சொல்லனும்.... அம்மாகிட்ட போகணும்... ஆனா இந்த நாய்க் குட்டி....."என்றுஉடைந்து போய் ஓ.... வென்று அழத் தொடங்கிவிட்டான்.


நான் மெல்ல அவன் தலையை தடவி விட்டேன். அவனுக்கு நம்பிக்கை வரும் விதத்தில்" நீ ஒன்னும் கவலைப்படாதே தம்பீ ..நான் உன்னை உன் வீட்டுக்கு அழச்சிக்கிட்டு போய் விடுரேன் இந்த நாய்க்குட்டியை நீயே வளர்கிறத்துக்கு உன் அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கி கொடுக்கிறேன். சரியா.... வீட்டுக்கு போலாமா? என்றேன். அவன் கண்களை துடைத்துக் கொண்டு கையில் நாய்க்குட்டி இருந்த கட்டை பையை எடுத்துக் கொண்டு எழுந்து நின்று போகலாம் என்றான் நானும் அவனும் அவன் வீடு இருந்த திசை நோக்கி நகரத் தொடங்கினோம்.


வாலறிவன்



Rate this content
Log in

Similar tamil story from Romance