DEENADAYALAN N

Action Crime Thriller

3.0  

DEENADAYALAN N

Action Crime Thriller

இவனில்லையெனில் யார்?

இவனில்லையெனில் யார்?

4 mins
489


                                      Suspense 

                           இவனில்லையெனில் யார்?

                           (கோவை என். தீனதயாளன்)

 

அவனுக்கு நாற்பது வயதிருக்கும். காவல் நிலையத்திற்குள் நுழைந்தான். நட்கர் என்று தன்னை சொல்லிக் கொண்டான். தான்தான் மீன் மார்க்கெட்டில் வெங்கோசத்தை தீர்த்துக் கட்டியதாக சொன்னான்.


‘எதுக்காக கொன்னே?’ அவ்யுக்த்


‘அது ஒரு கடன் சம்மந்தமா சார்’ நட்கர்.


‘என்ன கடன்?’


‘செத்துப் போன வெங்கோசத்துகிட்டே ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன் சார். அடிக்கடி கேட்டு தொந்தரவு பண்ணினான். என்னாலே குடுக்க முடியலே. நேத்து மீன் மார்க்கெட்ல மறுபடியும் தகறாரு சார். கை கலப்புலே ஆத்திரத்திலே குத்திட்டேன்.. செத்துட்டான் சார்..’ நட்கர்.


‘கொன்னுட்டு நேரா இங்கதான் வர்றியா..?’அவ்யுக்த்


‘ஆமா சார்.. நேரா இங்கதான் சார் வர்றேன்’


‘ஏன் சரண்டர் ஆகறே..?’


‘வந்து.. செஞ்சிட்டேன்.. இப்பொ பயம் வந்திருச்சு சார்… அதான்..’ நட்கர்.


அவ்யுக்தின் உளவு மூளை சற்று நேரம் வித்தியாசமான முறையில் பகுப்பாய்வு செய்தது. ‘சரி.. என்னோடு வா’ என்று அவனை அழைத்து சென்று ரகசியமான ஒரு இடத்தில் வைத்தான். தன் உதவியாளர் ஒருவரை காவலுக்கு வைத்து விட்டு, உதவியாளர் செய்ய வேண்டிய சில வேலைகளையும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

 


மீன் மார்க்கெட் வளாகம். அவ்யுக்த் நுழைந்தான். விசாரிக்க ஆரம்பித்தான்:

“மீன் மார்க்கெட்னா கேட்கவா சார் வேணும்? அதுவும் ஞாயிற்றுக்கிழமை வேற. இரண்டு நாள் முன்னாடிதான் கொரானா ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தது. அதோட, ஜனங்க நல்ல படியா மீன் சாப்ட்டு ரெண்டு மாசம் ஆயிருச்சி. இவ்வளவு காரணங்களும் சேர்ந்துகிட்டதால, மீன் மார்கெட்டில், கூட்டம் நிரம்பி வழிஞ்சிகிட்டிருந்தது. பெரும்பாலோர் முகக்கவசம் அணிஞ்சிருந்தாங்க சார். ஆனா ‘ஒருவருக்கொருவர் இடைவெளி’ங்கறது ரொம்ப சிரமமாதான் சார் இருந்தது! போகப் போக சரியாயிடும் சார்.’


பெரிய கடை ஷெரீஃப் அண்ணன் சொல்லிக் கொண்டிருந்ததை, அவ்யுக்த் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களைச் சுற்றிலும் இதர மீன் வியாபாரிகள் முகக்கவசத்துடன் குழுமி இருந்தனர். ஷெரீஃப் அண்ணன் எப்போதுமே எதை சொன்னாலும் ஒரு திரைக்கதை போல் இப்படி விஸ்தாரமாகத்தான் சொல்லுவார்.


சரி! மீன் மார்க்கெட் பற்றி இப்போது எதற்கு இவ்வளவு விஸ்தாரமான விவரங்கள் என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது சார்! திடப்படுத்திக் கொள்ளுங்கள். இங்கேதான் ஒரு கொலை நடந்திருக்கிறது! கொலை செய்யப்பட்டது வெங்கோசம். கொலை செய்தது.. ‘நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு ‘நட்கர்’ என்று ஒருவர் வந்திருக்கிறார். அவர்தானா? அது தான் இப்போது கண்டறியப்பட வேண்டிய விஷயம். டிடக்டிவ் அவ்யுக்த் அதற்காகத்தான் இப்போது மீன் மார்க்கெட் வந்திருக்கிறான். விசாரித்துக் கொண்டிருக்கிறான்.


‘கொலை நடந்தப்பொ மணி எவ்வளவு இருக்கும்?’ டிடக்டிவ் அவ்யுக்த்


‘இருக்கும் சார்.. காலைலே ஒரு பதினொரு மணி இருக்கும்’ ஷெரீஃப்


‘கொலையை முதல்லே யாரு பார்த்தாங்க?’ அவ்யுக்த்


‘சார்.. அந்தக் கூட்டத்துலே யாரு மொதல்லே பார்த்தாங்கன்னு எப்பிடி சார் தெரியும்? ஆனா கொஞ்ச நேரத்துலே மார்க்கெட்டிலே கூட்டம் கொறைய ஆரம்பிச்சிருச்சி.’


‘ஏன்? மொதல்ல பார்த்தவனுக்கு தெரியுமில்லே.. அவந்தான் மொதல்ல பார்த்தவன்னு’


‘ஆமா சார்.. ஆமா சார் .. ‘ என்று ஆமோதித்தார் ஷெரீஃப் அண்ணன்.


‘சரி.. மொதல்ல போலிஸுக்கு சொன்னது யாரு?’ அவ்யுக்த்.


‘நான் தான் சார்’ னு முன்னே வந்த லோகேஸ் தொடர்ந்தான். ‘சார் ஒரு கஷ்டமர் ஒரு விசேஷத்துக்கு ‘வஜ்ஜிரம்’ அம்பது கிலோ வேணுமின்னு கேட்டார். நம்ம கடைலே ‘ஸ்டாக்’ கொஞ்சம் கொறச்சலா இருந்ததாலே நம்ம தம்பி கடைலே போய் எடுத்தாரலாமின்னு வந்துகிட்டிருந்தேன். அப்பொதான் இந்த ஆளு தொபுக்கடீர்னு விழுந்தான்.. அதான் சார் அந்த செத்துப் போனானே அவன்.. தொபுக்கடீர்னு விழுந்தானா.. யாரோ தொரத்திகிட்டு வந்த மாதிரி தெரியுது சார்.. எங்கே எப்பிடி குத்துனான்னு தெரியலே.. குத்துன கத்தியும் எங்கேன்னு தெரியலே.. ஆனா அந்த ஆளு விழுந்தப்போ முதுகு, இடுப்புலே இருந்து ரத்தமா கொட்டிகிட்டு இருந்திச்சி சார்.. பின்னாடி யாராவது வர்றாங்களான்னு பார்த்தேன் சார்.. ரொம்ப தொலவுலே ஒரு ஆளு கூட்டத்தை வெலக்கிகிட்டு வெளிலே ஓடிகிட்டு இருந்தான். ஆனா பத்து இருபது செகண்டுக்கு மேலே அவன் என் கண்ணுக்கு தட்டுப் படலே சார்.’


‘அவன் என்ன கலர் உடுப்பு போட்டு இருந்தான்னு நெனவு இருக்கா?’ அவ்யுக்த்.


‘உறுதியா தெரியலே சார்.. ஆனா லைட் நீல கலர் சர்ட்டா இருக்கலாம் சார்.’


அவ்யுக்த் அந்த பிரம்மாண்ட மீன் மார்க்கெட்டின் அலுவலகக் கட்டித்திற்கு போனான். இரண்டு காக்கி சட்டைகள் பின் தொடர அவ்யுக்த் நுழைந்ததும் ‘தடார் புடார்’ என்று அங்கிருந்த அலுவலகர்கள் எழுந்து வந்தார்கள்.


‘CC டிவி கேமரா யார் கன்ட்ரோல்ல இருக்கு?’ அவ்யுக்த் கேட்க, ஒருத்தர் ‘சொல்லுங்க சார்’ என்று முன்னே வந்தார்.


‘நேற்றைய பதிவுகளோட ஃபுட்ஏஜ் கொஞ்சம் ப்ளே பண்ணி பாக்கலாமா?’ அவ்யுக்த் கேட்க


‘ஸ்யூர் சார்’ என்று ஏற்பாடு செய்து காட்டினார்.


தீர்க்கமாக பார்த்த அவ்யுக்த் சில பகுதிகளை ஒரு பென்ட்ரைவில் நகல் எடுத்துக் கொண்டான். அத்தோடு அந்த பகுதியை கொண்ட ‘ஹார்ட்டிஸ்க்’கை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.



மறுநாள் அவ்யுக்த் காலை வீட்டிலிருந்து கிளம்பும் முன்பாகவே ஸ்டேஷனிலிருந்து ஒரு கைபேசி அழைப்பு.


‘யெஸ்.. அவி ஹியர்..’


‘சார்.. நேத்து மீன் மார்க்கெட் கொலை சம்மந்தமா ‘நான் தான் கொலையாளின்னு சொல்லிகிட்டு நட்கர்னு ஒரு ஆளு சரண்டர் ஆனான் இல்லையா.. நீங்க கூட அவனை உங்க பொறுப்புலே எடுத்துகிட்டு போய் ரகசியமான ஒரு இடத்துலே வைக்கப் போறதா சொல்லிட்டு கூட்டிட்டுப் போனீங்களே..அது சம்மந்தமா ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய சொல்லி மேலே இருந்து ஒரு செய்தி வந்திருக்கு சார்.. என்ன செய்யலாம் சார்..’


‘இன்றைக்கு மாலை ஆறு மணிக்கு மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணி எல்லா உயர் அதிகாரிகளுக்கும் தகவல் குடுத்துருங்க’ என்று கூறி விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான் அவ்யுக்த்.



அந்த நாள் முழுக்க தகவல் வேட்டை ஆடி, விவரங்களையும் ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டு, அன்று மாலை ஆறு மணிக்கு உயரதிகாரிகளின் – இந்தக் கொலை சம்மந்தமான- சிறப்பு சந்திப்பு கூட்டத்திற்கு வந்து சேர்ந்தான் அவ்யுக்த்.


நட்கரை ரகசிய இடத்திலிருந்து அழைத்து வர தன் உதவியாளருக்கு உத்தரவிட்டான்.


காவல் நிலையத்தில் தன் உதவியாளர்களுக்கு சில உத்தரவுகளை இட்டு வெளியே அனுப்பி வைத்தான் அவ்யுக்த்.


அதற்குள் நட்கருடன் உதவியாளர் வந்து விட, சற்று காத்திருக்க சொல்லி விட்டு, தான் மட்டும் மீட்டிங் அறை நோக்கி சென்றான் அவ்யுக்த்.



மீட்டிங் அறையில் எல்லோரும் காத்திருக்க, அவ்யுக்த் நுழைந்தான்.


‘என்ன அவ்யுக்த், கொலையாளி சரணடைஞ்சிட்டான் போல இருக்கே. எளிதா ஃபைல மூடிரலாம் போல இருக்கே’ என்றார் ஓர் அதிகாரி


‘இல்லே சார்.. சரணடைஞ்சிருக்கறது உண்மையான கொலையாளி இல்லே சார்.. உண்மையான கொலையாளியை அரஸ்ட் பண்ண நம்ம டீமை அனுப்பி இருக்கேன் சார்’


‘அப்பிடியா.. இன்ட்ரஸ்டிங்..’ உயர் அதிகாரி வியந்தார்.


‘சார் இந்த கொலையை செய்தது வேறொரு ஆள். ‘மாம்பலன்’னு பேரு. நல்ல வசதி படைத்த ஆள்! ஆனா அவனுக்கு பதிலா ‘நட்கர்’னு வேற ஒரு ஆள நிறைய பணம் கொடுத்து சரண்டர் ஆகி பொறுப்பை ஏத்துக்க சொல்லிட்டான் சார்.’


‘அப்படியா? எப்படி இவ்வளவு குறுகிய காலத்துலே இந்த விஷயங்களைக் கண்டு பிடிச்சே?’


“‘சார் கொலை நடந்தது மீன் மார்க்கெட்லே. கொலைக்கு முன்னாலே செத்துப் போன வெங்கோசமும் கொலையாளியும் மீன் மார்க்கெட்லே கட்டிப் புடிச்சி புரண்டு சண்டை போட்டு இருக்காங்க. முதல் நாள் இரவு மழை பெய்ஞ்சதாலே சொத சொதன்னு இருந்திருக்கு மீன் மார்க்கெட், அங்கே இருந்து சரண்டர் ஆக வந்த நட்கர் அப்பிடீங்கறவனுடைய உடைகள் வேணுமின்னே கசக்கி விடப்பட்டிருந்ததே தவிர ஈரமோ சொத சொதப்போ இல்லே.


விசாரணைலே கொலையாளி நீல நிற சட்டை போட்டிருந்ததா தெரிஞ்சது. ஆனா, நட்கர் கருகருன்னு கருப்பு சட்டை போட்டுகிட்டு வந்தான். 


மீன் மார்க்கெட் வளாக சிசி டிவி ஃபுட்ஏஜ்லே நட்கர் வந்து போன எந்த தடையமும் இல்லே.


இதனாலே, ‘நட்கர் மீன் மார்க்கெட்டுக்கே போகலே. நட்கர் உண்மையான கொலையாளி இல்லே’ன்னு முடிவு செஞ்சேன்.


நட்கரோட பேங்க்லே ‘செக்’ செஞ்சப்போ அஞ்சு லட்ச ரூபாய் நேத்து நட்கரோட பேர்லே க்ரெடிட் ஆயிருக்கு. அதை அக்கவுண்ட்லே போட்ட ஆளைப் பிடிச்சி ‘தேர்ட் டிக்ரி ட்ரீட்மெண்ட்’டுக்கு போகப் போறேன்னு சும்மா வாயிலேயே சொல்லி விசாரிச்சதுலே அவன் பயந்து, ‘மாம்பலன்’கிற பேரை காமிச்சு குடுத்தான்.


‘மாம்பலன்’ வசதியான ஆளு சார். இறந்து போன வெங்கோசம் ஏதோ ஒரு கடத்தல் விஷயத்துலே அவரை ப்ளாக் மெயில் பண்ணிட்டு இருந்திருக்கான். ரெண்டு பேரும் மீன் மார்க்கெட்லே சந்திச்சுகிட்ட உடனே தகராறு ஆகி, கைகலப்பாகி, கொலைலே முடிஞ்சிருச்சி. நம் உதவியாளர்கள் மாம்பலன் வீட்டுலே சோதனை போட்டாங்க, மாம்பலனோட துவைக்காமல் இருந்த பழைய உடைகளை சோதனை போட்டதுலே அதுலே இருந்த சொத சொதப்பும், மீன்மார்கெட் மீன் நாற்றமும், மாம்பலன் மீன் மார்க்கெட் போனதைக் காட்டி குடுத்துருச்சி. மேலும் சிசி டிவி ஃபுட்ஏஜ் லே நீல சட்டையுடன் மாம்பலன் இருந்தது மிகத் தெளிவாக இருந்தது. வேற வழி இல்லாமெ மாம்பலனும் எல்லாத்தையும் ஒத்துகிட்டாச்சு சார். கைது பண்ண நம்ம குழுவை அனுப்பி இருக்கேன்’


அவ்யுக்த் அனுப்பிய குழு மாம்பலனோடு வர, மாம்பலன் மற்றும் நட்கரை மீட்டிங் அறைக்கு அழைத்து வந்து, அவர்கள் இருவரை நோக்கி செலுத்தப்பட்ட மேலதிகாரிகளின் கேள்விக்கணைகள் அவ்யுக்த்தின் உளவுத் திறனை பறைசாற்றி உறுதி செய்தது.


அவ்யுக்த்தை எல்லோரும் பாராட்டி விட்டு அதிகாரிகள் செல்ல, தன்னுடைய பல வித சிறப்பு அம்சங்கள் பொருந்திய சிறப்பு வாகனத்தில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து, டிடக்டிவ் அவ்யுக்த் கிளம்பினான்.



கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Action