சமத்துவம்
சமத்துவம்
அன்று ஞாயிறு... தன் மகளும் மகனும் கூடத்தில் ஓடியாடி விளையாடி கொண்டிருக்க.. மொட்டை மாடியில் காயவைத்த துணிகளை எடுத்து கொண்டு வந்தார் அவர்களின் தாத்தா.
அதை மடித்து அயர்ன் செய்து வைத்தவர், பாத்திரங்களை சுத்தம் செய்ய கிச்சனுக்கு செல்ல... அங்கே சமையலில் மும்முரமாக மூழ்கி போய் இருந்தான் அவரின் மகன்.
கூடத்தில் விளையாடி கொண்டிருக்கும் பிள்ளைகளை நோக்கிய அவர்களின் அன்னை, "பாப்பா... தம்பி... போதும் விளையாண்டது... ஓடி போய் நா சொன்ன வேலைய செய்யுங்க...", என குரல் கொண்டுத்ததும், "ஓகே மம்மி..", என கத்தி விட்டு தோட்டத்திற்கு ஓடினார்கள்.
அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்டு, ஒரு கட்டை பை நிறைய இருந்த தேர்வு பேப்பர் கட்டை கையில் எடுதவள் ஒவ்வொன்றாக திருத்த தொடங்கினாள்.
பத்தே நிமிடத்தில், "இதுல எந்த பொடிய கொழம்புல போடானும்...", என மூன்று டப்பாக்களை தூக்கி கொண்டு அவளிடம் வந்தான் அவள் கணவன்.
"எத்தன தடவ உங்களுக்கு சொல்லுறது... அந்த கிரீன் மூடி போட்டது..", என கூற..., "ஹான் ஹான்... எனக்கு தெரியும்... உனக்கு சரியா தெரியுதான்னு டெஸ்ட் பண்ணுனேன்...", என்று மழுப்பி விட்டு செல்ல முனைந்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி, "எத்தன பேப்பர் திருத்தி இருக்க??.. ஹை மார்க் எத்தன??", என கேட்க.. , "நாளைக்கு ஸ்கூல் போய் புள்ளைங்களுக்கு குடுக்கும் போது பாத்துக்கோங்க... இப்போ அடுப்புள எதோ தீயுது.. ", என அவனை துரத்த..., "அடுப்பு ஆஃப்ல இருக்கு டி...", அவளை முறைத்து விட்டு சென்றான்.
தோட்டதிற்கு சென்ற குழந்தைகள் இரண்டும் அவ்விடத்தில் இருந்த சருகுகளை எல்லாம் கூட்டி பெருக்கி சுத்தம் செய்து உரத்திற்காக போன வாரம் உருவாக்கிய குழிக்குள் சேமித்து வைத்து விட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தொடங்கி விட்டார்கள்.
வேலை செய்து களைத்து போன பேர குழந்தைகளுக்கு எலுமிச்சை சாற்றை கலந்து கொண்டு வந்து கொடுத்தார் அவர்களின் பாட்டி.
மதியம் அனைவருக்கும் அனைத்து வேலையும் முடிந்து விட... ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்து நாட்டு கோழி குழம்பபை ரசித்து ருசித்து உண்டு விட்டு சற்று வெயில் சாயும் நேரம் அருகில் இருந்த பார்க்கிற்கு சென்றுவிட்டு வந்தார்கள்.
✨✨✨
ஆண்களுக்கு வெளிவேலை வாரம் முழுவதும் இருந்தால், பெண்களுக்கு வீட்டு வேலை வாரம் முழுவதும் இருக்கிறது. குழந்தைகளுக்கு பள்ளி வேலை வாரம் முழுவதும் இருக்கிறது.
இன்றைய தலைமுறையில் எந்த கோணத்தில் பார்த்தாலும் அனைவருக்கும் அனைத்து தினமும் வேலை இருக்க தான் செய்கிறது. வார இறுதி விடுப்பாக இருந்தாலும் ஏதேனும் வேலை இருக்க தான் செய்கிறது.
ஏழு நாட்களும் ஒரே வேலையை செய்து அழுத்து போவதற்கு ஒரு நாள் அதனை இடம் மாற்றி கொள்ளலாமே.
