DEENADAYALAN N

Comedy Classics

3.3  

DEENADAYALAN N

Comedy Classics

சென்னைப் பயணம் – 1960s

சென்னைப் பயணம் – 1960s

5 mins
306



                                               சென்னைப் பயணம் – 1960s

                                                (கோவை என். தீனதயாளன்)


                                         1960களில் கோவையிலிருந்து ஒரு சென்னைப் பயணம்!

 

‘விஷயம் தெரியுமா பூங்கொடி? அப்பா ஊருக்கு போறாராமா..!’ அம்மா சிவகாமி பரபரப்பாய் தன் மகளிடம் பிரகடனம் செய்தாள்.


‘அப்பிடியா.. எந்த ஊருக்குமா?’ – மகள் பூங்கொடி ஆர்வமாய் கேட்டாள்.


‘ம்.. மெட்ராஸ் போறாராமா.. ‘


‘ஐ.. மெட்ராஸுக்கா..!’


‘ஆமாடி..’


‘எதுக்குமா?’


‘ஆபீஸ்லே அனுப்பறாங்களாமா..’


‘எப்பொமா..?’


‘அடுத்த மாசம்..’




மாலை ஐந்து மணி. பூங்கொடியின் தம்பி பள்ளியிலிருந்து வந்தான்.


‘டேய் தம்பி.. விஷயம் தெரியுமா..’ பூங்கொடி ஆர்வமாய் ஆரம்பித்தாள்.


‘என்னக்கா..’


‘அப்பா மெட்ராஸ் போறாராமா..!’


‘ஐ.. எப்போ?’


‘அடுத்த மாசம்..’


‘எப்பிடிக்கா போவாரு..?’


‘தெரியலடா..’



இப்படி ஒவ்வொருவராக ஏழு குழந்தைகளுக்கும் விஷயம் பரவப் பரவ வீடு கலகலப்பாகியது. வீடே திருவிழாக்கோலம் பூண்டது. குழந்தைகள் விளையாடப் போகவில்லை. படிக்கவில்லை. அம்மா பாயாசம் வைத்தாள். எல்லோரும் அப்பாவுக்காக காத்திருந்தார்கள்.


எட்டு மணிக்கு அப்பா வந்தார்.


‘அப்பா.. அப்பா.. ‘ என்று குழந்தைகள் ராமசாமியை மொய்த்துக் கொண்டார்கள்.


‘எதுக்குப்பா..!’ – ஒரு குழந்தை; ‘எப்பொப்பா..!’ இன்னொன்று; ‘எதுலே போறப்பா..!’; ‘எப்பொ வருவேப்பா..!’ கடைக்குட்டி; ‘என்னயும் கூட்டிட்டுப் போப்பா..!;மற்றொன்று.


உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தாலும் ‘டேய்.. டேய்.. கொஞ்சம் இருங்கடா.. என்று சாதரணமாக இருக்க முயன்றார் ராமசாமி. அந்த சமயம் பார்த்து அவர் மனைவி ‘பாயாசம் குண்டாவை கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். தன் கணவனுக்கு பெரிய டம்ளரில் ஊற்றிக் கொடுத்து விட்டு, ஏதோ தன் கணவன் உலகப் புகழ் பெற்று விட்டது போல் பெருமை பொங்க பார்த்தாள்.


பாயாச டம்ளரை வாங்கிக் கொண்ட ராமசாமி, ‘செரு வென்று சிருங்கார வேந்தன்’ போல பெருமை பொங்க தன் மனைவியைப் பார்த்தான். அந்தப் பார்வை எட்டாவது குழந்தைக்கு வழி வகை செய்து விடுமோ என்று அஞ்சத்தக்க வகையிலான ஒரு பார்வையாய் இருந்தது. அது மனைவியின் வெட்கச்சிரிப்பிலும் பிரதி பலித்தது.


‘எப்பிடீப்பா போறே..’ ஒன்று கொஞ்சலுடன் அழுத்திக் கேட்டது.


‘ரயில்லையடா தங்கம்.’


‘ஐ… ரயில்லைய்யா…’


‘ம்…ஆமா…’


‘ஏம்பா.. ரயிலை எத்தன மாடுப்பா இழுக்கும்..?’ இன்னொரு பெண் குழந்தை மலைப்புடன் கேட்டாள்.


‘மாடு இல்லப்பா.. இது கரீலே போற வண்டி..’


‘எந்தக் கறிப்பா.. ஆட்டுக்கறியா கோழிக்கறியா..?’


‘அடக்கடவுளே.. அது ‘கறி’ இல்லம்மா.. ‘கரி’! எங்கே சொல்லு ‘கரீ..’


‘கறீ…’


‘சரி விடு.. முன்னாடி பெட்டிலே உக்காந்து ஒருத்தரு ஓட்டுவாரு.. பின்னாடி பெட்டிலே ஒரு ‘கார்டு’ இருப்பாரு. ‘ தன் மேதா விலாசத்தைக் காட்டினார் அப்பா ராமசாமி.


‘ஏம்பா.. God-ஆ..’


‘அட அது ‘God’ இல்லடா ‘கார்ட்’ சொல்லு ‘கா..ர்..ட்’


‘க்க்God’


‘சரி விடு’


‘டிக்கெட் எவ்வளவுப்பா..?’


‘தெரியலப்பா.. அனேகமாக நாலேமுக்கா ரூவாய் இருக்கும்னு ஆபீஸுலே சொன்னாங்க..’


‘ய்ய்ய்ய ம்ம்ம்ம் மோவ்வ்வ்வ்.. நாலேமுக்கா ரூவாயா..!’


‘யப்பா மெட்ராஸிலிருந்து எனக்கு செருப்பு வாங்கிட்டு வாப்பா.. நான் என் கால் அளவை ஒரு பேப்பரில் வரைஞ்சு குடுக்கறேன்..’


‘எனக்கு ஜிகினா ஜாக்கிட்டு வாங்கிட்டு வாப்பா’


‘என்னக்கு பொம்ம சொக்கா..’


‘ஏங்க சவுரி முடியெல்லாம் கொறவா கெடைக்குமாம்.. வாங்கியாங்க’ மனைவி.


‘கொறவா’ வாங்கிட்டு வந்தா உனக்கு பத்தாதே..’ என்று ராமசாமி இடி இடி என சிரித்தார்.


‘போங்க… கேலி பண்ணாதீங்க‘ வெட்கப்பட்டாள் மனைவி


‘எனக்கு பீப்பிப்பா.’


‘எனக்கு ஒரு பெல்ட்டுப்பா..’


குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.



அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை! மனைவி சிவகாமியின் உறவுகளும் ராமசாமியின் உறவுகளும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து போகத் தொடங்கினர்!


‘மச்சான்.. மெட்றாஸா.. எனக்கு ஒரு பேனா வாங்கியா மச்சான்.. அதான் ‘இங்க்’கி இலாமையே எழுதுமாமே.. அந்த மாரி வாங்கியா..’ ஒரு மச்சானின் வேண்டுகோள்


‘அண்ணே.. அங்கேயெல்லாம் ‘சாக்ஸ்’ ரொம்ப வெலக்கொறவாமா.. என் பையன் சைசுக்கு ஒரு மூனு சாக்ஸ் வாங்கியாண்ணே..’ ஒரு சகலை ரகளை செய்தான்.


‘மூனு வாங்கியாந்தா ஒன்னு மிஞ்சிடுமேடா..’ ராமசாமி இடி இடி என சிரித்தார்.


‘போங்கண்ணே. கிண்டல் பண்ணாதீங்க.. மூனு ‘சோடி’ வாங்கியாங்க’


‘பல்செட்டு அங்கே விப்பாங்களாமே.. மூர் மார்க்கெட்லே பழைய சாமான் கடையிலே கெடைக்குமாமாமே.. ஒன்னு வாங்கியாய்யா’ ஒரு முதியவள் பொக்கை வாய் தெரிய கெஞ்சினாள்.


‘யக்கோவ்.. மச்சாங்கிட்ட சொல்லி எனக்கு ஒரு ‘பிரஷ்ஷு’ வாங்கியார சொல்லேங்கா’ சிவகாமியிடம் சிபாரிசுக்கடிதம் வைத்தாள் அவளின் சகோதரி.


‘பிரஷ்ஷா.. எதுக்கு உன் பல்லுக்கா..’ என ராமசாமி இடி சிரிப்பு சிரித்தார்.


‘போ மச்சான்.. பாத்திரம் தேய்க்க..’


‘அங்கே ஏதோ பெரிய்ய்ய கட்டடம் இருக்காம்.. பதினாலு மாடி இருக்காம்.. போய் அத கண்டிப்பா பார்த்துட்டு வா ராமசாமி’ – ராமசாமியின் அண்ணன் முறைக்காரர் ஒருவர் சொல்ல,


‘அது எப்பிடி தம்பி அவ்வளவு ஒசரமா ஒன்னு மேல ஒன்னு வெச்சி கட்டி இருப்பாங்க..’ ஒரு அப்பாவி தன் சந்தேகத்தைக் கேட்டது.


‘அடேய் சோனமுத்தா.. மொதல்லே கீழே படுக்க வெச்சிக் கட்டிட்டாங்களாமா.. அப்புறம் ஒரு பெரிய கயிறு கட்டி இழுத்து, நிமித்தி நிறுத்திட்டீங்களாமா..!’ கிண்டலா நிஜமா என்று தெரியாத வண்ணம் ஒருவன் சொல்லிக் கொண்டிருந்தான்.


ஒரு வழியாக உறவினர்கள் விடை பெற்றுச் செல்ல ஆரம்பித்தனர். வந்தவர்களுக்கெல்லாம்.. மிச்சரும் காபியும் போட்டுக் கொடுத்திருந்த சிவகாமி கடைசியில் பார்த்த போது ஒரு கிலோ கருப்பட்டியும், பதிமூன்று காபி வில்லைகளும், ஒரு பெரிய குவளை பாலும் காலியாகி இருந்தது. இனி இம்மாதத்தை காபி இல்லாமல் எப்படி கடப்பது என்ற கவலை சிவகாமியை தொற்றிக் கொள்ள, அதையும் தாண்டி ஒரு பெருமிதம் அவள் முகத்தில் படர்ந்திருந்தது.



ராமசாமியின் மெட்ராஸ் பயண நாள் நெருங்க நெருங்க அந்த குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரு வித பதற்றம் இருந்தது – ராமசாமி உள்பட.


‘திரும்ப எவ்வளவு நா புடிக்குங்க’ சிவகாமி கேட்க


‘இதோ.. இப்பொ ஒரு நொடியிலே திரும்பீருவேன்’ என்று மேலும் ஒரு ‘மொக்கை’யைப் போட்டு இடி சிரிப்பு சிரித்தார் ராமசாமி.


‘போங்க நீங்க’ என்று ‘சீரியஸ்’ஸாக கோபித்துக் கொண்டு, ‘திரும்பி வர எவ்வளவு நாள் ஆகுங்க..’ சிவகாமி


‘ஒரு வாரம் ஆகும் சிவகாமி’ ராமசாமி.


சிவகாமி கண்ணைக் கசக்கினாள். ‘அட.. ஏன் அழுவற…?’


‘ஒரு வாரம் எப்பிடிங்க உங்களெ உட்டுட்டு நாங்க இருப்..?’ விசும்பினாள்


‘சரி அழாதே.. அழாதே..’ சமாதானப் படுத்தினார்



பிரயாண நாள்!


‘என்னங்க..ராத்திரிக்கு புளிசாதம் இதுலே இருக்கு. காலைலக்கி இட்லி இதுலே இருக்கு. நடு ராத்திரிக்கு பசிச்சா இதுலே ‘கச்சாயம்’ வெச்சிருக்கேங்க.’ மூக்கை சீந்திக் கொண்டே சிவகாமி கண்களில் கண்ணீருடன் ராமசாமிக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.


‘சரி சிவகாமி.. அழாதே..’


‘அப்பா ‘ஹோல்டாலை’க் கட்டி வெச்சிட்டேம்பா’ மூத்த மகள்.


‘சரிம்மா..’


‘அப்பா நானும் மெட்றாஸ் வறேம்பா..’ கடைசி வரை கடைசி மகன் நச்சிக் கொண்டே இருந்தான்.



மாலை ஐந்தரைக்கு ரயில். மூன்று மணிக்கே மூன்று குதிரை வண்டிகளில் குடும்பமே ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது.


போதாக் குறைக்கு சில உறவினர்களும் ‘ராமசாமி இன்னிக்குதான் ஊருக்குப் போறாரு.. ‘ என்று சொல்லிக் கொண்டு நேராக ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்.



அந்த நேரம் பார்த்து, ஒரு அரசியல் தலைவரும் அந்த ரயிலில் பிரயாணம் செய்ய நேர்ந்ததால், ஒரு பெரும் கும்பல் ரயில் நிலையத்தில் கூடியிந்தது. ராமசாமியும் அதே ரயிலில் புறப்பட, இரண்டு கும்பல்களும் பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ராமசாமி மூன்றாம் வகுப்பு. அரசியல் இரண்டாம் வகுப்பு. இரண்டு வெகு அருகில் அமைந்து விட்டது. அந்த குழப்பத்தில் ராமசாமி கழுத்தில், அரசியல் வாதிக்குப் போக வேண்டிய மூன்று மாலைகள் வந்து விழுந்து குவிந்ததெல்லாம் ஒரு தனிக்கதை!



‘மச்சான் இடைலே ரயில்ல இருந்து எங்கையும் இறங்கீடாதே.. அப்புறம் ரயில் ‘பாஸ்’ ஆயிடுச்சின்னா..’ ஒரு அறிவுரை.


‘ஏலே.. ‘பாஸ்’ ஆனா என்னலே.. அதான் ஒரு ‘செயின்’ இருக்காமில்லே.. அதப் புடிச்சி இழுத்தா வண்டி நின்னுறுமாமில்லே..’


‘எலே கீழே இறங்கிட்டா எங்கலே செயின் இருக்கும்..’



‘உடனே கடுதாசி போடுங்க..’ மூத்த மகள்


‘செருப்பு மறந்துறாதப்பா..’ ஒரு குழந்தையின் வேண்டுகோள்


‘முடிஞ்சா எம்ஜியாரையும் சிவாஜியையும் பாத்துட்டு வந்துரு மச்சான்’ இன்னொரு அறிவுரை.


‘மறக்காமே, மிச்சம் வெக்காமெ இட்லியை சாப்புடுங்க’ சிவகாமி.


‘சகலை என் தூரத்து சொந்தம் ஒருத்தன் தாம்பரத்துலே இருக்கான்.. முடிஞ்சா அவனைப் பாரு சகலை.. (எதுக்கு?)’


நேர நேரத்துக்கு ஒழுங்கா சாப்புடுங்க.. கண்ணு முழிக்காதீங்க.. ‘ சிவகாமி.


‘எத்தன மணிக்கு போகும்..?’ பத்தாவது முறையாக ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.


‘லக்கேஜ் பத்திரம்யா.. தூங்கிடாதே..’ ஒரு நண்பரின் ‘அட்வைஸ்’


‘டிக்கட் பத்திரம் மச்சான்..’ ஒருவர் சொல்லை, பதறிப்போய் ராமசாமி டிக்கட்டை தன் சட்டைப் பையில் தேட ஆரம்பிக்க பகீர் என்றது.


‘டிக்கெட் எங்கே.. டிக்கெட் எங்கே..’ என்று ஒரு எல்லோரும் அலறிப் பார்க்க, அதே சமயம் அரசியல் கூட்டத்திலிருந்து ‘வாழ்க.. வாழ்க..’ கோஷங்கள் கிளம்ப,


‘டிக்கட் காணோம்’ இங்கே அலற.. ‘வாழ்க வாழ்க’ என்று அங்கே அலற கொஞ்ச நேரம் குழப்பம்.


‘இதோ இருக்கு’ என்கிற ராமசாமியின் குரல் சற்று ஆறுதல் தர ‘நான் தான் பத்திரமாக இருக்கட்டும்’னு இங்கே வெச்சிருந்தேன்’ என்று மடித்து வைக்கப் பட்டிருந்த தன் சட்டைக் கையைப் பிரித்து, ரயில் டிக்கட்டை எடுத்து, தன் கால்சட்டைப் போட்டுக் கொண்டார்.


புட்டுகளும் புடுசுகளும் ரயிலையும், ப்ளாட் பாரத்தையும் பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்க ரயில் புறப்படுவதற்கான முதல் மணி அடித்தது. சிவகாமி சற்று நெருங்கி நின்று ராமசாமியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.


ஒரு வழியாக ராமசாமி தன் பெட்டியில் ஏறிக் கொள்ள இரண்டாவது மணி அடித்தது.


எல்லோரும் ராமசாமியை ஜன்னல் ஓரத்தில் பார்த்து ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தனர். சிவகாமி இன்னும் சற்று நெருங்கி நின்று ராமசாமியின் கைகளை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

 

ஒரு வழியாக மூன்றாவது மணி அடிக்க ரயில் ‘ஷுக்.. புக்.. ஷுக்.. புக்.. ஷுக்.. பூக்..’என்று கிளம்ப ஆரம்பித்தது.



‘வாழ்க.. வாழ்க.. ‘ கோஷத்தை தலைவருக்கு கொடுத்து விட்டு, அரசியல் கூட்டத்தினர் அருகில் இருந்த அங்கண்ணன் கடை ஹோட்டலில் பிரியாணியை ஒரு பிடி பிடிக்க அவசர அவசரமாக வெளியியேறினர்.


‘ஓ’ என்று கம்பலையும் கண்ணீருமாய் ராமசாமி கூட்டம் வழியனுப்ப, ‘கூஊ..’ என்னும் ரயில் ஹாரன் சத்தம் மற்றொரு புறம் கிளம்ப, ரயில் ‘ஜிக்.. புக்.. ஜிக்.. புக்..’ என கிளம்பியது.


சுமார் பத்து நிமிடம் அங்கேயே நின்று ரயிலின் ‘X’ ஐ பார்த்து விட்டு, ராமசாமி குடும்பத்தினர் கண்ணைக் கசக்கி கொண்டு ஒவ்வொருவராக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர்.

         

‘க்கூ…’ என்ற ரயில் ஹாரனின் சத்தம் விடாமல் ஒலித்து, பின் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருந்தது!



கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Comedy