1000 ரூபாய் பரிசு
1000 ரூபாய் பரிசு


பொங்கல் பண்டிகை வருவதால் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அனித்தா. அவள் சுத்தம் செய்யும்போது ஒரு டைரி கண்ணில் பட்டது, அதை எடுத்து என்னவா இருக்கும்னு புரட்டி பார்த்தாள். அது அவள் கல்லூரியில் படித்த கடைசி வருடம் அவள் தோழிகள் அவளுக்கு ஆட்டோகிராப் எழுதி கொடுத்த டைரி.
அந்த டைரியில் அவளைப்பற்றி அதிகம் இருந்த வார்த்தைகள், எல்லார்கிட்டையும் ஜாலியா பேசுவ, நல்லா காமெடி பன்னுவ, நீ இருக்க இடமே கலகலனு இருக்கும் என்பது தான். ஆனால் இப்பொழுது நாம் ஏன் இப்படி அமைதியாக, யாரிடமும் சரியாக பேசாமல் அதற்கு எதிர்மாறாய் இருக்கிறோம் என தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
அந்த டைரியை படிக்க ஆரம்பித்தவளின் எண்ணங்கள் அவளை கல்லூரிக்கே அழைத்துச் சென்றது. அவள் எம்.ஏ ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தாள்.
பேராசிரியர் சபியுல்லா அவர் எழுதிய ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிப் பெயர்க்க சொல்லி மாணவிகளிடம் கொடுத்தார். சிறப்பாக மொழிப் பெயர்ப்பு செய்வோருக்கு மதிப்பெண் வழங்கி, முன் நடத்தப்பட்ட போட்டிகளின் மதிப்பெண்களோடு சேர்த்து வெற்றி பெறுபவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக
கூறினார்.
அனித்தா பல முறை இது போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறாள். இம்முறை 1000 ரூபாய் பரிசை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறப்பாக எழுதினாள்.
எதிர்பார்த்தவாறே வெற்றி பெற்றாள், 1000 ரூபாய் பரிசை பேராசிரியர் சபியுல்லா வழங்கினார். அனித்தாவிற்கு மிக்க மகிழ்ச்சி 😃.
அன்று மாலையே அந்த பணத்தை வைத்து ரொம்ப நாளாக வாங்க நினைத்த புத்தகங்களை வாங்க தன் தோழி ஆனந்தியுடன், டவுனுக்கு சென்றாள் அனித்தா. அங்கு சென்றால் அந்த புத்தகம் ஷ்டாக் இல்லை இரண்டு நாள் கழித்து வாங்கனு சொல்லிட்டாங்க.
ஆங்கில இலக்கிய புத்தகங்கள் ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்கு தெரியும் என்பதால் வீட்டுக்கு செல்ல பேருந்தில் ஏறினர்.
டிக்கெட் டிக்கெட் என கன்டெக்டர் கேட்கும்போது பர்ஸை திறந்தவளுக்கு அதிர்ச்சி 😳. அவள் பரிசாக வாங்கிய 1000ரூபாய் நோட்டை காணவில்லை. நல்ல வேலை டிக்கெட் எடுக்க பணம் இருந்தது.
அவளும் ஆனந்தியும் சேர்ந்து அவள் பேக்கை கிழிக்காத குறையாக மறுபடி மறுபடி தேடிப் பார்த்தனர், அந்த 1000 ரூபாய் நோட்டு எங்கும் இல்லை.
பணம் கல்லூரியிலேயே காணாமல் போனதா? இல்லை வேறெங்கும் தொலைந்ததா என தெரியவில்லை.
நல்ல வேலை வாங்க சென்ற புத்தகம் இல்லை, இல்லனா கடைக்காரரிடம் மானம் போயிருக்கும்.
அனித்தா ...அனித்தா...என ராஜ் கூப்பிட அந்த நினைவுகளிலிருந்து வெளிவந்தாள் அனித்தா.
இதோ வரேன்...
அனித்தா இப்போ வேலைக்கு போயி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறாள், ஆனாலும் பரிசாக வாங்கி தொலைத்த அந்த 1000 ரூபாய் நோட்டு அவளுக்கு இன்றும் பெரியதாய் தான் தோன்றுகிறது. பணம் என்பதை விட பரிசு என்பது பெரிய விசயம் அல்லவா
அந்த டைரியில் இருந்த கலகல அனித்தாவாக
இனி வலம் வர உறுதி கொண்டு டைரியை மூடினாள்.