வாய்க்குமோ?
வாய்க்குமோ?
புத்தம் புதியவளாய்...
என் கரங்களில் நீ தவழ்ந்ததும்...
உன் அழகில் மயங்கி...
உன்னை அங்கங்களைத்
தொட்டுத்தொட்டு மகிழ்ந்ததும்...
உன்னுள் மயிலிறகை பதுக்கி வைத்ததும் ...
உன்னுள் ரூபாய் நோட்டுகளை ஒளித்து வைத்ததும் ...
உன்னுள் ரோஜா பூக்களை படிய வைத்ததும்...
உனக்கு அ(ச)ட்டையிட்டு...
என் மார்போடு உனை அணைத்து!
உன் இதழோடு என் இதழ் பதித்து
முத்தமிட்டதும்!
என்னைப் பிரிந்து விட்டால்...
என் இட(தய)ம் வந்து சேர
என் முகவரி இட்டு...
உனக்கு அடையாளம் பதித்ததும்!
உன்னை புரட்டி புரட்டி படம் பார்த்து நண்பனோடு மகிழ்ந்திருந்ததும்!
அவ்வப்போது அழகாய் அடுக்கி அடுக்கி வைத்து உன்னை ரசித்ததும்!
உன்னை சுமந்து சென்ற மஞ்சள் பைகளும்!
அலுமினிய பெட்டிகளும்! தலையணையோடு உறுதுணையாய் உறங்கும் போதும் எனக்கு இணையாய் என்னோடு நீ கலந்ததும் ...
என் சிந்தையை நிறைத்ததும் ...
உன் வாசம் என்னை தூண்டியதும்...
என் சுவாசந்தனை தீண்டியதும்...
இளைய தலைமுறைக்கு வாய்க்குமோ? இணையவழி சேர்க்குமோ?
படிக்கும் ஆர்வத்தை தூண்டுமோ?
