உன்னில் நான்
உன்னில் நான்
அன்பே,
சினம் கொண்டு கத்திக் குதித்தேன்...
பொறுமை குணம் கொண்டு புத்தியூட்டினாய்!
கோபம் கொண்டு காலால் உதைத்தேன்
பாசத்தை என் மனதிலே விதைத்தாய்!
கடுஞ்சொற்களை அள்ளி வீசினேன்....
வழு பார்க்காமல் இனிதாய் பேசினாய்!
ஆண்மை பலம் கொண்டு அச்சம் ஊட்டினேன்!
அன்பின் பலம் கொண்டு
வாழ்வில் உச்சம் காட்டினாய்!
உன்னால்..... உன் ஊக்கத்தினால்!
உன் விழி ஒளி குன்றி இருக்கலாம்....
நம் குடி ஒளி பெற்றிருக்கிறது!
சோர்ந்து வீழ்ந்த போதெல்லாம்...
உமையாய் நீ வந்தாய்!
உயர்வை நீ தந்தாய்!
மடியில் எனைத் தாங்கி
மனதில் திடம் சேர்த்தாய்!
உடலுக்கு உரம் அளித்தாய்!
உற்சாகம் தனை ஈந்தாய்!
நரையுற்று கிழப்பருவம் எய்திடினும்....
என் அழகி நீயடி!
அன்புக் காதலியே...
எனை நாளும் உன் கரங்களில்
ஏந்த வேண்டும்!
நான் உன் மார்பினில் தூங்க வேண்டும்!
உன் மடியினில் எனை தினம்
வாங்க வேண்டும்!
இதே காதலுடன்...!
நீ என் தாயாக...
நான் உன் சேயாக!
உன்னால் நான்...
உன்னில் நான்!
என் இறுதி மூச்சு வரை!

