ஒற்றைப் பல் பேரழகன்!
ஒற்றைப் பல் பேரழகன்!


என் அறுபதில்...
கண்ணாடி முன் நின்று
என் வாயைத் திறந்திட்டால்
மேல் வரிசை பல் இரண்டு
காணாமல் போயிருக்க
கீழ் வரிசை பல் இரண்டு
வீணாகி விழுந்திருக்க
பக்காவாய் இருந்த பற்கள்
பாழ் பட்டுப் போய் எந்தன்
பொக்கை வாய் பார்த்து
பரிதவித்துப் போனேன்!
அலிபாபா குகையோ
ஆழ் கடலின் இருளோ
அன்னக் குவியலில்
ஆங்காங்கே குருமிளகோ
அன்பு மனைவி யாச்சும்
ஆர்வமுடன் பார்ப்பாளா
அன்னம் தரும் பிள்ளை மார்
ஆசை கொண்டு மதிப்பரோ
அக புற சுற்றத்தார்
முகம் சுழித்து இடிப்பரோ
இள நட்பு வட்டங்கள்
உள மாற சகிப்பரோ
என்றெல்லாம் கவலையிலே
ஆழ்ந்திருந்த வேளையிலே...
என் அழகுப் பேரனுக்கு
ஒற்றைப் பல் உதித்தது!
பொக்கைவாய்ப் பேரனை
பார்த்தாலே பரவசம்
ஒற்றைப் பல் வந்தவுடன்
அவன் அழகு அதிரசம்
சிரிப்பழகன் சிரிக்கும் போது
சின்னக் கண்ணன் தெரிகிறான்
கைபிடித்து இழுத்துச் சிரிக்கும்
கார் வண்ண மேகன்
அழகுமயில் அவன் சிரித்தால்
அழகர் மலைக் கள்வன்
கண்கள் விரிய புன்னகைக்கும்
கள்ளச் சிரிப் பழகன்
முகம்சுழித்துக் கண் சுருக்கும்
உள்ளங் கவர் கள்வன்
அகலமாய் வாய் திறக்கும்
அழகு சுந்தர முருகன்
'ஹஹ்ஹஹ்ஹ' சத்தமிட்டு
அவன் சிரித்தால் அழகழகு
நகைச்சுவை கேட்டது போல்
அவன் சிரித்தால் பேரழகு
கற்றைப் பணம் கண்டாலும்
கண் பாரா என்னுலகப்
பற்றைப் பன் மடங்காய்
பெருக்கிய என் பேரனின்
இரட்டைப்பல் அழகு பார்க்க
இனிமேல் நான் தவமிருப்பேன்!
(கோவை என்.தீனதயாளன்)
என். தீனதயாளன், C-323, நித்யா கார்டன்ஸ் அபார்ட்மென்ட்ஸ், சங்கரலிங்கனார் ரோடு, மணியகாரன் பாளையம்,கோயமுத்தூர்-641006; தமிழ்நாடு
கைபேசி: 99942 91880; 79041 78038 மின்னஞ்சல்: deenajamuna@yahoo.co.in