மகளின் தமிழ்த் தவறுகள்!
மகளின் தமிழ்த் தவறுகள்!


பொன் மகளாம் என் மகள்
அவ்வப்போது வந்து நிற்பாள்
தமிழோடு அவளுக்கு பிணக்கு – அவளுக்கு
உதவும் பொறுப்பு எனக்கு!
அன்றொரு நாள் அருகில் வந்தாள்
அன்னையர் தினக் கவிதை கேட்டாள்
அழகு தமிழில் அற்புதமாய்
அருமையாய் எழுதித் தந்தேன்!
மற்றொரு நாள் வந்து நின்றாள்
தந்தையர் தினக் கவிதை கேட்டாள்
இனிய தமிழில் இலக்கணத்துடன்
பெருமையாய் எழுதித் தந்தேன்!
அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள்
ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள்
எதுகை மோனை ஓசை நயத்துடன்
எளிய நடையில் எழுதித் தந்தேன்!
பிப்ரவரி பதினாலு முந்தாநாள் வந்தாள்
என்னிடமே காதலர்தினக் கவிதை கேட்கிறாள்
என்னவென்று சொல்வது எப்படி சொல்வது
யோசிக்கிறேன் இப்போதும் யோசிக்கிறேன்!