எக்காலத்துக்கும் உரியவன்
எக்காலத்துக்கும் உரியவன்
எங்கு சென்றாலும்....
எல்லா நேரங்களிலும்....
காற்றோடு கலந்த உம் குரல்....
எம் நினைவில் கலந்து ஊற்றெடுக்கிறது!
மேடையில் உம் கால்கள் போடும் தாளம்
உம் கண்கள் பேசிடும் காதல்....
உம் குரல் தெளித்திடும் சாரல்!
உம் முகம் காட்டிடும் பாவம்...
அடடே... நீ மறைந்து விட்டாயா?
யார் சொன்னது?
எங்கள் மனதோடு கலந்து விட்டாய்!
காற்றோடு கானமாய் கரைந்து விட்டாய்!
நடந்தே சென்றாலும்....
கடந்து செல்லும் வாகனம் உம் தேன் குரலைத் தெளித்து விட்டுச் செல்லும்!
விழாக்களிலும்.... மேளங்களோடு....
தாளமிடச் செய்யும் உம் கானம்!
உற்சாக பானமாய் துள்ளி எழுப்பி...
நடனமாடச் செய்திடும்!
வரவேற்பறையில் நீ பாடிய பாடல்
நாடி நரம்பை மீட்டிச் செல்லும்!
படுக்கையிலும் உன் பாடல்கள்
காதல் ரசங்களைச் சொட்டிச் செல்லும்!
தனிமையிலும் தென்றலாய் மனதை
வருடிச் செல்லும்!
காயப்பட்ட போதும் களிம்பினை
பூசிச் செல்லும்!
பாடுநிலா...
வினைத்தொகை....
முக்காலத்துக்கும் உரியது!
அல்ல.... அல்ல....
எக்காலத்துக்கும் உரியது!
நிலா அடிவானில் மறைந்து.....
மறுநாள் உதிக்கும்!
ஒருநாள் உதிக்கக் கூட மறக்கும்!
அந்நாளில் உலகமே
இருளில் மிதக்கும்!
நீ என்றும் பெளர்ணமி!
வளர்பிறையும் இல்லை!
தேய்பிறையும் இல்லை!
காற்றிருக்கும் வரை உம் கானம் ஒலிக்கும்!
உம் முகம் காணாமல் மனம் வலிக்கும்!
உன் மரணத்தை மனம் ஏற்காது!
உம் கானத்தை மனம் மறக்காது!
இன்று...
ஆறடி குழிக்குள் உம் பூத உடல்
அடங்கிக் கிடக்கலாம் !
உம் தொண்டைக் குழிக்குள் உம் பாடல் முடங்கிக் கிடக்கலாம்!
ஆனால் என்றும்
உலகமே உம் பாடல் பாவங்களில்
கிரங்கிக் கிடக்கும்!
உம் பாடலைக் கேட்ட மழலையும்
இறங்கி ஆடி நடக்கும்!
