அந்திமல்லி
அந்திமல்லி


பகலில் பலரும்
பார்த்திருக்க நுகரப்படும்
வாசமல்லி அல்ல நீ!!
சந்திக்கு அழகூட்டும்
அந்திமல்லி நீ!!
வாசமில்லா உனை
நேசிக்க யாருமில்லை...
நறுமணம் என்னும்
காதலன் தழுவா
நற்குணமல்லி நீ!!
பச்சைக்கம்பளத்தில்
தெறித்து கிடக்கும்
மாணிக்கப்பரல்கள்
உன்னழகு!!
போகத்தில் திளைக்க
வாசமல்லி...
ரோகத்தைக் களைய
அந்திமல்லி!!
நீ பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாவாய்!!
அதனாலேயே எளிதில்
துவண்டு விடாமல்
நிற்கிறாய்,
சாலையோரங்களிலும்,
யாருமற்ற தனிமையிலும்,
பொய்களும்,
வேடதாரிகளும்
கூடிக் கலந்திடும்
சபைகளில்
சஞ்சலத்தோடு நின்றிடும்
மதிப்பற்ற
நல்லவர் போல்...!!
வாசப்பூக்கள்
வசசீகரிக்கும் மாலைகளிலும்,
சரங்களிலும்
கர்வமான ஓரிடம் உனக்கில்லை!!
நீயும் என் போல்
தனித்துவமானவள்!!
ஏனெனில் உன்
ஆளுமைையை
நீயே தெரிவு
செய்கிறாய்!!
எளிதாக எவர்
பார்வையிலும்
நீ படுவதில்லை!!
அதுவே உன் கற்புக்கு
நீ போடும் காவல் நிலை!!
வறண்ட பிரதேசங்களூடான
வாகனப் பயணத்தில்
சட்டென்று
விழிகளுக்கோர்
விருந்தாகி,
சடுதியில் மறைவாய் நீ!!
வாச மலரெல்லாம்
மலர்ந்த அன்றே வாடிவிட...
எளிதில் வாடாத
அருமை அந்தி மல்லி நீ!!
அனைவரும் அறிந்த
வாசமல்லிக்கு
கவிமடல்கள் பலவுண்டு...
அரிதான
அந்திமல்லிக்கோர்
அற்புத சந்தம் பாட
நான் வந்தேன் இங்கு!!