கண்ட நொடியில் காதலிக்குஒரு கடிதம்
கண்ட நொடியில் காதலிக்குஒரு கடிதம்
முதன்முதலாக மனதில் ஒரு பூகம்பம் ,
எதனால்?
புதிதாய் ஒரு ஆரம்பம்,
உன்னால்.
உனக்காக சில வரிகள்
காதலால், ஆதலால் ஒரு கடிதம்.
உன்னைக் கண்ட நொடியில் உறைந்துவிட்டேன்.
உறைபனிக்கட்டியாய் நான்,
காதல் கடலில் மூழ்கியும்,
கரையாமல், கரையேர
உன் கைகளுக்காக காத்திருக்கிறேன்.
உன்னைக் கண்ட கணத்தைப் பற்றிக்
காகிதக் கல்லில் பேனா உளியைக் கொண்டு
செதுக்கும் போதே சில உன்மைகள் புரிந்தன.
என் வாழ்வில், நான் வார்ணிக்க
இயலாமல் தடுமாறியது
இதுவரை இருமுறை.
என் தாயின் பாசத்தை
வார்ணிக்க முயன்ற பொழுது,
என் தாய் மொழியின் இனிமையை
வார்ணிக்க முயன்ற பொழுது,
இப்பொழுது மூன்றாவதாய் நீ.
முடியாமல் தவிக்கும் நான்.
உன்னைப் பார்த்த நொடியில்
உன்னைச் சுற்றிப் பல அதிசியங்களைக் கண்டேன்.
நீ நிற்கும் நிலம்
உன் காலடிகளைக் கண்டு
பொறாமையில் கதறுவதைக் கண்டேன்.
வீசும் காற்று உன் உடலைச் சுற்றிய
ஆடையின் மேல்
ஆத்திரம் கொள்வதைக் கண்டேன்.
சுடும் சூரியன் உன் சூடாமணி சூடிய
நெற்றியில் உள்ள இரு விற்களின்
மையத்தில் மையம் கொள்ள,
மையல் கொள்வதைக் கண்டேன்.
கரையும் காக்கை
உன் கார்குழலைக் கண்டு
கதறி சாவதைக் கண்டேன்.
பாவம் நக்கீரர்,
அன்று உன்னைக் கண்டிருந்தால்
பொருட்பிழை உள்ளதென்று
பொங்கிருக்க மாட்டான்.
"உன் இதயச் சிறையை
அடைய நான்
என்ன தவறு செய்ய வேண்டும்?",
என்று மனது தவிக்கிறது.
கண் விலங்கைக் கொண்டுக்
கைது செய்து, தயவு செய்து
சாவியைத் தொலைத்துவிடு என்று
இதயம் உன்னைக் கெஞ்சுகிறது,
உன்னைத் தொலைத்துவிட கூடாதென்று
உள்ளம் அஞ்சுகிறது.
"காதலின் தீபம் ஒன்று"
என்று ராஜாவும்,
"என்னவளே அடி என்னவளே"
என்று ரகுமானும்,
என்னைத் தொல்லைச் செய்ய,
உன்னிடம் ஒரு வார்த்தையாவது
பேசிட உதடு துடிக்கிறது.
உன்னிடம் மயக்கம் கொண்ட
காரணத்தால் தான் என்னவோ
மனது தயக்கம் கொள்கிறது.
காலை வேளை, உன் கழுத்தில்
மாலை சூட்டும் நாளை,
இன்றே எண்ணி எண்ணி
மனது கற்பனைக் கடலில் நீந்துகிறது.
எனக்குள் பூத்தக் காதல்
உனக்குள் என்று மொட்டு விடும்?
இன்று சந்தித்த இரு மனங்களும்
என்று இணையும்?
இணைந்த மனங்களுக்கு என்று
திருமணம் ஆகும்?
கேள்விகள் என்னிடம் பல உண்டு.
பதில்கள் உன்னிடம்.
கிடைக்குமா?
பதில்கள் மட்டுமல்ல,
நீயும் தான்.