புயலும்,பூமியும்
புயலும்,பூமியும்
கடல் தகப்பனின்
ஆரவாரத்தோடு
காற்றுத் தாய் ஈன்றெடுத்த
முரட்டுப்பயல்
நம் புயல்!!
எங்கே முளைப்பான்?
எங்கே திரிவான்?
எங்கே அடிப்பான்?
எங்கே களைப்பான்?
என்ற அளவான
யூகங்களூடே
அளவின்றிப் பயணிக்கும்
அகசாய சூரன்!!
தந்தை தந்த
ஆரவார ஆணவத்தினை
அவனைவிட வேகமாய் தரைமேல் காட்டும்
உன்மத்தன்!!
மானுடத்தின் வாழ்வுதனை
புரட்டிப் போட்டே
புன்னகைப்பான்...
சாரலாயும்....
சரங்காளாயும்....
பெருவெடிப்பாயும்....
பேரிரைச்சலாயும்....
கண்ணீர் உகுப்பான்
மழை என்ற பெயரில்...!
சங்கடத்தையும் சாவையும்
ஒருங்கே தந்து
சமத்துவம் காப்பான்!
சடுதியில் தடுமாற வைத்து
சந்தடியின்றிப்
போய்விடுவான்!!
தோன்றிய திசைவேறு...
பயணிக்கும் தடம் வேறு...
கடக்கும் எல்லை வேறு... என பற்பல
முகமூடிகளின் சொந்தக்காரன்!!
அழிவென்ற வேடிக்கை
ஆண்டுதோறும்
அவன் வாடிக்கை.
ஆனாலும் அவனளிக்கும்
நன்மை ஒன்று உறவின்றி தனித்தீவாய்
உலவுகின்ற மானுடத்தை
உதவி எனும் கரம் கொண்டு ஒன்றாக இணைக்கின்றான் !இற்றுப்போன
நேயமதை,
அற்றுப் போன உறவுகளை,
நேசக்கரம் நீட்டவைத்து
பரிகசித்தே சிரிக்கிறான்!
எல்லைகள் தாண்டி,
மாந்தர் தொல்லைகள்
நீக்க வேண்டி,
ஏதுமற்ற சூழலிலும்
தளிர்க்க வைக்கிறான்
மனித நேயமெனும்
மாசற்ற விருட்சத்தை!!
தான் என்ற
மமதை
மாந்தர்
தன்னிலை அறிய வேண்டி
நிமிடங்களில் பாடம்தனை நிதர்சனமாய் புகட்டுகின்றான் என்ன செய்ய இயலும்
இவனை
வேற்றுமை நீக்கி
மாந்தர்தமை இன்னல் என்றெ பெயரில்
இணையவைத்து
இறுமாப்பை தூளாக்கி
இறையருளைத் தேட
வைக்கும்
இம்சை அரசனே
இன்னுயிர்கள்
இன்புறேவே
இனி அடுத்த முறையாவது
சவலைக் குழந்தையாய் வா
உனை மடியிருத்தி
மகிழ்வோடு
அனுப்பி வைப்போம்
மெண்மையாக!!