ஆசிரியர்களே!
ஆசிரியர்களே!
ஆசிரியர்களே….
பள்ளி என்னும் வயலிலே….
நடப்படும் நாற்றுகள் மாணவர்கள்!
கற்பித்தல் என்னும் ஆயுதம் கொண்டு…
பாசத்தை பாத்தியாக்கி!
அன்பெனும் நீர் பாய்ச்சி…
நல்லொழுக்கம் என்னும் உரமிட்டு..
தீயொழுக்கம் என்னும் களை நீக்கி….
சோம்பல்… அலட்சியம் என்னும் பூச்சிகள் நீங்க…
அறிவென்னும் மருந்தை தெளித்து….
நல் வேலியாய் இருந்து காத்திடுங்கள்!
நல்ல மகசூலைப் பெற்று…
இந்த சமூகம் ஆரோக்கியமாக வாழட்டும்!
ஒரு வேளை……
அவன் கரடு முரடான கற்களாக இருப்பின்….
மனம் தளராதீர்கள்!
ஒரு சிற்பி கரடு முரடான கற்களைத் தான்…..
உளி கொண்டு செதுக்கி…..
சுத்தியலால் தட்டி…
உயிரற்ற கல்லுக்கு உயிரூட்டுகிறான்!
அவ்வண்ணமே….
அறிவென்னும் உளி கொண்டு….
அன்பென்னும் சுத்தியலால் தட்டுங்கள்!
உங்கள் கரங்கள் கட்டப்பட்டாலும்…..
கண்ணைக் கட்டிக் கொள்ளாதீர்!
அழகிய சிலையாய் வார்த்தெடுங்கள்!
இந்த சமூகம் கண
்டு மகிழட்டும்!
ஒரு வேளை அவன் ……
கரித்துண்டாக இருப்பின் கவலைக் கொள்ளாதீர்கள்!
பதப்படுத்தி பட்டைத்தீட்டுங்கள்!
சிறந்த வைரமாக ஒளிவீசுவான்!
இந்த சமூகம் தன் கிரீடத்தில் வைத்து
அலங்கரித்துக் கொள்ளட்டும்!
ஒரு வேளை அவன் …
தங்கமாக இருப்பின்….
வளைத்து நெளித்து…. கம்பிகளாக்கி
அழகிய ஆபரணமாக்குங்கள்!
இந்த சமூகம் அணிந்து பெருமைக் கொள்ளட்டும்!
ஒரு வேளை அவன்...
களிமண்ணாக இருப்பின் கலங்க வேண்டாம்!
அளவாய் பாடமென்னும் நீரூற்றி
பக்குவமாய் பேச்சால் பிசைந்து….
வாழ்க்கைச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி….
அழகிய பாத்திரங்களாய் வார்த்தெடுத்து…
அறிவென்னும் சுடரால் வெப்பமூட்டுங்கள்!
இந்த சமூகம் பயன்படுத்தி மகிழட்டும்!
ஆசிரிய சமூகமே….
உன்னால் முடியாது என்பது….+எதுவும் இல்லை!
அறிவென்னும் மருந்தை…அன்பென்னும் மந்திரத்தால்
உம் முயற்சி என்னும் ஆயுதம் கொண்டு அளவாய் புகட்டு!
நல்ல சமுதாயம் உன்னால் தான் அமையும் என்று காட்டு!