வண்ணக்கோலம்
வண்ணக்கோலம்


வாசலை அடைத்து வண்ணக்கோலம் போட்டுவிட்டு, அப்படியே ஓரமாக நின்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, வெள்ளை கோலமாவில் மீண்டும் வெளி இழைகளை போட்டு நிமிர்ந்தார் உமாதேவி.
பளிச்சென்று கண்ணைக் கவர்ந்தது கோலம். ஓடி வந்த மகனிடம், " கோலத்தை மிதிச்சிடாதடா தம்பி.பார்த்து ஓரமா போ" என்று ஓரமாக ஒதுக்கி அனுப்பினார். வாசல் தெளித்தது போக, மீதமிருந்த சாணத்தை உருட்டி, பிள்ளையார் செய்து,
சிறிது அருகம்புல்லுடன், வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி மலர்ந்திருந்த சிவப்பு செம்பருத்தியை பறித்து, பிள்ளையாருக்கு வைத்துவிட்டு நிமிர, " என்ன உமா டீச்சர், பூசணிப்பூ கிடைக்கலையா ? செம்பருத்தி பூ வைச்சிருக்கீங்க பிள்ளையாருக்கு?" என்றபடி சென்றார், பக்கத்து வீட்டு ராசாத்தி. "பூசணிப்பூ தானே, கொடி போட்டுடலாம். அடுத்த மார்கழிக்கு, பூசணிப்பூ வைச்சு அசத்திடலாம்" என்றவாறு வீட்டிற்குள் சென்றார் உமாதேவி.
வீட்டிற்குள் வந்ததும், "அம்மா, இன்னைக்கு மழை வரப் போகுதாம். காலையில இருந்தே மழை பெய்யுமாம். இன்னைக்கு போய் கலர் கோலம் போட்டுருக்கீங்க" என்ற மகனிடம், " மழை வந்தா நல்லது தானடா தம்பி, வந்துட்டு போகட்டும்" என்றபடி சென்றார் உமா.
"நீங்க போட்டிருக்க கோலம் எல்லாம் மழையில நனைஞ்சு பாழாகி விடுமே", " பரவாயில்லப்பா, ஒன்றரை மணிநேரம் போட்டு, பளிச்சினு இருக்க கோலத்தை நாளைக்கு காலையில கூட்டி, கலர் பொடி எல்லாம் மலை மாதிரி குமிச்சு, குப்பையில அள்ளி வைக்கிற சிரமத்துக்கு, மழை வந்து நனைச்சு, நாளைக்கு காலையில கோலம் போட, வாசலை பளிச்சினு ஆக்கித் தருது பார். அதுக்கு சந்தோஷப் பட்டுக்குவோம்" என்றவாறு, காபி போட்டுக் கொண்டு வந்து, அன்றைய நாளிதழை எடுத்தபடி அமர்ந்தார் உமாதேவி.
பொறுமையாய், அந்தி சாய்ந்த பின், மழையும் வந்து மண்மகளை நனைத்தது.