DEENADAYALAN N

Abstract

3  

DEENADAYALAN N

Abstract

வாழ்வியலில் அறிவியல்!

வாழ்வியலில் அறிவியல்!

2 mins
359








அறிவியல் இல்லை என்றால் மனித வாழ்க்கை அறவே இல் என்றாகி விடும். ஆதி மனிதன் கண்டு பிடித்த நெருப்பு தொடங்கி, சக்கரம், மின்சரம் என தொடர்ந்து, இன்றைய கணினி, வலைத்தளம் வரை நம் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம்.


எழுபதுகளின் துவக்கம்! கணினி என்றால் என்னவென்றே பலருக்கு தெரியாது!. அப்போது பட்டப்படிப்பில் கணினி அறிவியல் சம்மந்தப்பட்ட ஒரு பாடப்பிரிவு எனக்கு விருப்பப்பாடமாக (elective) அமைந்தது. புதிய அறிவியல்தளம் என்பதால் ஆர்வத்துடன் படித்தேன். அது முதல் கணினி என் பணியிலும் வாழ்விலும் இரண்டற கலந்து விட்டது. எளிய நிரல்கள் எழுதத்தொடங்கி – தொடர்ந்து விஸ்வரூப வளர்ச்சியில் இருக்கும் கணினி அறிவியல் துறைக்கு ஈடு கொடுத்து, என்னை நானே மேம்படுத்திக் கொண்டு வர வேண்டி இருந்தது.


வேகம் மற்றும் துல்லியம் என்கிற அடிப்படையில் கணினியும் வலைதளமும் தவிர்க்க முடியாத அறிவியல் சாதனங்களாக மாறிவிட்டன. வங்கிப் பரிமற்றம், பயணச் சீட்டு முன்பதிவு, மின்சாரக் கட்டணம், கைப்பேசி மறு ஊட்டம், தகவல் அறிதல் என எந்த தேவைக்கும் தற்போது கணினியையும் வலைதளத்தையும் நம்பித்தான் இருக்கிறேன்.


அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டில் அவ்வப்போது தொய்வுகள் வரத்தான் செய்கின்றன. உதாரணமாக, தொடர்ந்த மின்சாரம் தர முடியாத நிலையில் தடையில்லா மின் வினியோக சாதனம் (UPS) வாங்க நேர்ந்தது. கரி, விறகு போன்ற எரிபொருள்களில் இருந்த பாதுகாப்பு மற்றும் கையாளும் தொய்வை சமாளிக்க திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரி வாயு (LPG) வந்தது. இப்படி கண்டுபிடிப்புகளில் உண்டாகும் தொய்வுகளை சமாளிக்க தொடர்ச்சியாக மேம்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 

 நெருப்பின் பயன்பாடு அறிந்த போது அதன் ‘தீவிபத்து’ ஆபத்து குறித்து அஞ்சியிருப்பார்கள். சக்கரம் வந்த போது அதன் சுழலும் ‘வேகவிபத்து’ குறித்து அஞ்சியிருப்பார்கள். மின்சாரம் வந்த போது ‘ஷாக்’ குறித்து அஞ்சி இருப்பார்கள். என்றாலும் இவைகளின் பயன் பாட்டை நம்மால் நிறுத்தி விட முடியுமா?


பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை-தீமை கலந்தே இருக்கும். பெரும்பாலான கண்டு பிடிப்புகளின் தீமைப் பகுதி உடல் அளவில்தான் பாதிப்பு உண்டாக்கும். ஆனால் சமூக வலைதளத்தின் தீமைப்பகுதி, உடல் மட்டும் இன்றி, உள்ளம், பண்பாடு மற்றும் கலாசாரத்தையும் பாதிக்கிறது! சீரழிவுகள் இன்றி இளைஞர் சமுதாயத்தை காக்க ஒரு தொடர் ப்ரம்மப் பிரயத்தனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


எல்லாத் துறைகளையும் போல அறிவியல் துறையிலும் அல்லவை நீக்கி நல்லவற்றை இருத்திக் கொள்வது பயனாளராகிய நம் கையில்தான் இருக்கிறது.





Rate this content
Log in

Similar tamil story from Abstract