தீர்ப்பு
தீர்ப்பு
தீர்ப்பு.
விக்கி அழுது கொண்டே பள்ளியின் வாசலில் இறங்கினான். அழாமல் போ என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.தாத்தா சிவன்.
அவருக்கு அந்த வார்த்தைகளை தவிர வேறு ஒன்றும் சொல்ல தெரியவில்லை.விக்கி அழுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.தினமும் குழந்தைகளை அதன் தந்தை அல்லது தாய் பள்ளியில் இறக்கிவிட்டு கன்னத்தில் முத்தம் இட்டு செல்வார்கள்.அவர்களுடைய கொஞ்சலும் கெஞ்சலும் பார்த்து கொண்டே இருக்கலாம்.
தினமும் இதை வேடிக்கை பார்க்கும் விக்கிக்கு தன்னை இப்படி கொஞ்ச யாரும் இல்லையே.அதை நினைத்து தான் பள்ளியின் வாசலுக்கு வரும் போது அவனையரியாமல் அழுகை வந்து விடுகிறது.அந்த அழுகை அந்த வாசலை தாண்டும் வரை தான்.வாசலின் உள்ளே நிற்கும் மிஸ்
பார்த்தால் கேட்பார்கள்.
சாப்பிடும் போதும் அம்மா எனக்கு veg rice செய்து கொடுத்தார்கள்,சப்பாத்தி குருமா செய்வார்கள்,நான் கேட்டது வாங்கி கொடுப்பார்கள்,விளையாட மாலுக்கு போனோம் என்றெல்லாம் மற்ற குழந்தைகள் சொல்லும் போது விக்கிக்கு ஏக்கமாக இருக்கும்.இவனுக்கு யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம்.parents meeting நடக்கும் போது அவன் சார்பாக யார் கலந்து கொள்வார்கள் என்று அவனுக்கே தெரியாது.
சின்ன குழந்தையாக இருந்தாலும் அவன் ஒரு வளர்ந்த பையனை போல யோசிப்பான்.எனக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு.கடவுள் என்று ஒருத்தர் இருக்காரா.இரவு தூங்கும் போது கதை கேட்க முடியாது.
விக்கிக்கு சாப்பிட என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதும் யாருக்கும் தெரியாது.
அவனுடைய ஏக்கத்தை யாரிடமும் சொல்ல மாட்டான்.யார் எது சொன்னாலும் சிரித்து கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விடுவான்.நண்பர்கள் இவனை கேலி செய்வார்கள்,யாராவது இவனுடைய பெற்றோர்களை பார்த்து இருக்கிறீர்களா,ஆனால் இவனுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறான்.ஆனால் பார்ப்பது இல்லை என்றும் சொல்கிறான். எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டால் தெரியாது என்றும் சொல்கிறான்.இப்படி யாராவது சொல்வார்களா,இவன் ஒரு பைத்தியம் என்று அவன் காது பட பேசும் போது,அவனுக்கே இதை யாரிடம் சொல்லி அழுவது என்று கூட புரியாது.
அப்படி என்ன தான் இவன் வாழ்க்கையில் நடந்தது.
அப்பா விஜயன் அம்மா விஜி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.அதுவும் ஐந்து வருடம் காதலித்து,அதில் இரண்டு வருடம் live in partner ஆக வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.அந்த திருமணத்திற்கு இருவரது பெற்றோரும் பூர்ண சம்மதம் சொன்ன பிறகு தான் திருமணம் நடந்தது.இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை விட சம்பந்தி கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாரா வாரம் சந்தித்து விருந்து சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள்.காதல் ஜோடியை விட இரு சம்பந்தி குடும்பமும் அவ்வளவு அன்னியோநியமாக இருந்தார்கள்.
திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் விக்கி பிறந்தான்.அவன் பிறக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அவன் பிறந்து ஒரு வருடம் ஆன போது அவனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா நடத்தினார்கள்.
அப்போது அந்த கூட்டத்தில் விஜி விக்கி என் அப்பா மாதிரியே இருக்கான் என்று சொல்லி விட்டாள்.அதற்கு விஜயன் இல்லை அவன் எங்க அம்மா ஜாடை என்று மறுத்து பேசினான்.ஆனால் சம்பந்தி இருவரும் கடவுள் கொடுத்த வரம் அழகான பேரன் என்று மட்டும் பேசி குதூகலமாக இருந்தார்கள்.
அன்று இரவு விக்கியை தூங்க வைத்து விட்டு படுக்கை அறைக்கு வந்த போது , விஜயன் கொஞ்சம் குடித்து இருந்தான்.அந்த போதையில்,எப்படி விக்கி உங்க அப்பா ஜாடை என்று சொல்லலாம் என்று சண்டைக்கு வந்தான்.அப்போது விஜி பேசாமல் தூங்குங்க,இது ஒரு பிரச்சனையா,சரி உங்க அம்மா ஜாடை போதுமா என்று லேசான கோபத்தில் பேச,பதிலுக்கு அதை நான் சொல்லும் போது ஒத்து கொள்ள வேண்டியது தானே,எல்லோருக்கும் முன்னிலையில் எனக்கு அவமானமாக போய் விட்டது என்று சத்தம் போட,அது தான் இப்போது சொல்லிவிட்டேன்,பேசாமல் தூங்குங்க,மயக்கத்தில் பேசுகிறீர்கள் என்று சொல்ல அப்போ என்னை குடிகாரன் என்று சொல்கிறாய் என்று வேகமாக கதவை சாத்திவிட்டு வெளியில் போய் விட்டான்.
காலையில் இவள் எழுந்து வரும் முன்,புறப்பட்டு அலுவலகம் சென்று விட்டான்.போனில் பல முறை கூப்பிட்டும் பதில் பேசவில்லை.இரவு வீடும் திரும்பவில்லை.இவர்கள் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.அன்று இரவு அவனுடைய பெற்றோர் வீட்டிற்க்கு சென்று விட்டான்.திரும்ப வரவே இல்லை.
அன்று ஆரம்பித்த பிரச்சினை இன்று வரை முடிவிற்கு வரவில்லை.
ஒருவாரத்தில் விவாக ரத்து நோட்டீஸ் அனுப்பினான்.வழக்கு நடந்தது.வருடம் ஐந்து ஓடி விட்டது.கோர்ட் கொடுத்த அவகாசத்தில் ஒன்று சேரவில்லை.இருவருக்கும் விவாக ரத்து தீர்ப்பு வழங்கும் நேரத்தில் புதிதாக விஜி தன் குழந்தையின் படிப்பு செலவிற்கு ஐம்பது லட்சம் வேண்டும் என்று மனு கொடுத்தாள்.பதிலுக்கு விஜயன் குழந்தையை என்னிடம் ஒப்படைக்கட்டும் என்று பதில் மனு தாக்கல் செய்தான்.அது முடியாது அவர் என்னுடன் சேர்ந்து வாழட்டும் என்று விஜி வாதாட, இரு வக்கீல்களும் சேர்ந்து குழந்தை அவனுடைய தாத்தா பாட்டி,அதாவது ஒரு மாதம் விஜயன் அப்பா அம்மா,ஒரு மாதம் விஜியின் அப்பா அம்மா வீட்டில் இருக்கட்டும்.விஜயன் விஜி இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வரும் வரை இருவரும் அந்த குழந்தையை பார்க்க கூடாது என்றும் கோர்ட் தடை செய்தது.கோர்ட் இருவரும் ஒன்று சேர வேண்டும், பிரிந்து வாழ எந்த முகாந்திரமும் இல்லை என்று கருதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதற்கான கெடுவும் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது.விக்கிக்கு இப்போது எட்டு வயது.அந்த விசாரணை தேதியும் வர,கோர்ட் அனைவரையும் வர சொல்லி இருந்தது.வழக்கம் போல வக்கீல்கள் தத்தம். வாத திறமையை வெளிப்படுத்த அதில் திருப்தி ஆகாத நீதிபதி,விக்கியை கூப்பிட்டார்.உனக்கு என்ன ஆசை என்று கேட்க,எனக்கு அப்பா அம்மா வேண்டும் என்று சொல்ல,நீதிபதி விஜயனை விஜியை இருவரையும் நோக்க,மீண்டும் என்னிடம் தான் என்று புராணத்தை ஆரம்பித்தார்கள்.
அப்போது நீதிபதி,உன்னுடைய அப்பா அம்மா சண்டை முடிவுக்கு வரவில்லை.உனக்கு யாரு கூட இருக்க ஆசை என்று மீண்டும் கேட்க,
எனக்கு இருவரும் வேண்டும்,அப்படி முடியாவிட்டால் என்னை அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுங்கள்,நான் அங்கு தங்கி கொள்கிறேன் என்று கூறி விட்டு அழுதான்.
இதை கேட்ட நீதிபதி,இதில் யாருக்கும் விட்டு கொடுக்க விருப்பம் இருப்பதாக தெரியாத காரணத்தால்,விக்கியின் இரு தாத்தா பாட்டிகளும் அவனை ஒரு நல்ல அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாம்.குழந்தை யாரை பார்க்க பிரிய படுகிறான் என்பதை பொறுத்து யார் வேண்டுமானாலும் அவனை போய் பார்த்து வரலாம்.அவன் அனுமதியின்றி அவனை யாரும் பார்க்க கூடாது என்று தீர்ப்பு வழங்குகிறேன் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.கோர்ட் மிகவும் அமைதியாக இருந்தது.
அந்த தீர்ப்பை மீறி யாருக்கும் எதுவும் சொல்ல வாய்ப்பு இல்லை.
இப்படி ஒரு தீர்ப்பு வேண்டுமா என்று பிரிந்து வாழும் அத்தனை தம்பதிகளும் நினைத்து பார்க்கட்டும்.
முற்றும்.
