Arivazhagan Subbarayan

Romance Classics

5.0  

Arivazhagan Subbarayan

Romance Classics

தீர்ப்பு...!

தீர்ப்பு...!

2 mins
422



  மிஸஸ் லாவண்யா தன் காரை அந்தக் கோர்ட் காம்பௌண்டுக்குள் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலில் பிற வண்டிகளுடன் சேர்த்து நிறுத்தி விட்டு, துப்பட்டாவைச் சரி செய்து, சிணுங்கிய செல்ஃபோனை ஹாண்ட் பேகிலிருந்து எடுத்து, வருகின்ற அழைப்புக்கு விரல் தொட்டு அனுமதி கொடுத்து, காதருகில் வைத்தார். அப்பாதான்.

  "வந்துட்டேன்ப்பா. அசோக் ஆஃபீஸ் கிளம்பிட்டாரா?"


  "இப்பதான் டிரைவர் வந்து கூட்டிக்கிட்டுப் போனான். உனக்கு ஈவ்னிங் சீக்கிரமா வர சரிப்படுமா? அம்மாவுக்கு டாக்டர். கோபால் கிட்ட ரொட்டீன் செக் அப்புக்கு அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிருக்கேன். சொல்ல மறந்துட்டேன்!"

  "சரிப்பா, நான் வந்து கூட்டிக்கிட்டுப் போறேன். வினோத்தும், மஞ்சுவும் காலேஜ் கிளம்பின பிறகு கதவை நல்லா தாழ் போட்டுக்கங்க!"


  மறுமுனையில் அப்பாவின் 'சரிம்மா' பதில் கேட்டபின், விரல் தொட்டு அழைப்பைத் துண்டித்து செல்லை பேகில் வைத்துவிட்டு அந்த குடும்பநல நீதிமன்றத்தை நோக்கி நடந்தார்.

   தன்னுடைய அறைக்கு வந்து நீதிபதி உடையணிந்து, தன்னுடைய கோர்ட்டுக்குள் நுழைந்தார்.


   இன்று ஒரு விவாகரத்து வழக்கிற்குத் தீர்ப்புக் கூற வேண்டும். வித்தியாசமான வழக்கு! ஆனால், ஆச்சரியமான வழக்கு! 

  "அந்தப் பெண் சுகுணாவையும். அவள் கணவன் சுந்தரையும் கூப்பிடுங்க"

  இருவரையும் பார்த்த நீதிபதி லாவண்யா,"மிஸஸ். சுகுணா நீங்க என்ன சொல்றீங்க? உங்க முடிவுல ஏதாவது மாற்றம் இருக்கா?"


   "நோ மேடம். எனக்குக் கண்டிப்பா விவாகரத்து வேண்டும்!"

  "மிஸ்டர் சுந்தர் நீங்க?"

  "நான் சுகுணாவுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் மேடம்!"

  "மிஸஸ் சுகுணா, விவாகரத்திற்குப் பின் உங்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தீர்களா?" அந்தப் பெண் சுகுணாவின் தீர்மானமான முடிவு அவள் கண்களில் தெரிந்தது.


   "நான் நல்ல வேலையில் இருக்கிறேன் மேடம். என்னை நான் பார்த்துக்கொள்வேன்!"

  "நான் பொருளாதாரத்தைப் பற்றிக் கேட்கவில்லை! உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்கிறேன்!"

  "அது பற்றிக் கவலைப்படப் போவதில்லை மேடம். அது ஆண்டவன் விட்ட வழி! நல்ல வேளையாகக் குழந்தைகள் எங்களுக்கு இல்லை மேடம்!"


  "மிஸ்டர் சுந்தர்! இருவரம் பரஸ்பர விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டதால் தானே உங்கள் கேஸ் இங்கு வந்திருக்கிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் வக்கீல் வைத்து வாதாடலாமே! இப்பொழுது ஏன் திடீரென மாட்டேன் என்கிறீர்கள்?"

  "அப்பொழுதே நான் ஒப்புக் கொள்ளவில்லை மேடம். சுகுணாதான் என்னைக் கட்டாயப்படுத்திக் கையெழுத்துப் போட வைத்தாள். இப்பொழுதும் நான் மௌணமாக இருந்தால், சுகுணாவை இழந்துவிடுவேன் எனப் பயமாக இருக்கிறது மேடம்!"


  "மிஸஸ் சுகுணா இருவரும் காதலித்துத் தானே திருமணம் புரிந்து கொண்டீர்கள்! திடீரென என்ன ப்ராப்ளம்? இப்பொழுது உனக்கு சுந்தர் மீது காதல் இல்லையா?"

  இதைக் கேட்டவுடன் சுகுணாவின் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது. 


  "இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு சுந்தர் மீது காதல் குறையாது மேடம். சுந்தர் மிக நல்லவன். எனக்குக் கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை seizures வந்திருச்சு மேடம். Grandmal epilepsy! என்னால் சுந்தருக்குத் தாம்பத்ய வாழ்வில் திருப்தியைக் கொடுக்க முடியுமாவென்று தெரியவில்லை. விவாகரத்தானால், அவனாவது மற்றொரு திருமணம் செய்து நிம்மதியாய் இருப்பானல்லவா? அதற்காகத்தான் கேட்கிறேன், மேடம்!"


  நீதிபதி லாவண்யா மெய்சிலிர்த்துத் திகைத்துப் போனார். சின்னச்சின்ன ப்ராப்ளத்திற்கெல்லாம், தன்னுடைய ஈகோவிற்காக விவாகரத்துக் கோரும் இந்தக் காலத்தில், இந்தப் பெண் தன் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறாள்!

  "நீங்க என்ன சுந்தர் சொல்றீங்க?"


  "எனக்கு சுகுணா இல்லாமல் வாழ்க்கையில்லை மேடம்! எங்கள் தாம்பத்ய வாழ்வில் எந்தக் குறையும் இல்லை மேடம். நான் வேறு திருமணம் செய்வது என்ற பேச்சிற்கே இடமில்லை மேடம்!"


  இதைக் கேட்டவுடன் சுகுணா,"ஏண்டா இப்படி இருக்கே" 

என ஓடிவந்து சுந்தரை அணைத்துக் கொண்டு விம்மினாள். நீதிபதி லாவண்யா என்ன தீர்ப்பெழுதுவது என்பதை முடிவு செய்துவிட்டார். 



Rate this content
Log in

Similar tamil story from Romance