Saravanan P

Abstract Drama Action

5  

Saravanan P

Abstract Drama Action

தீரச் சிறுவன்

தீரச் சிறுவன்

3 mins
8


உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு‌ எழுதப்பட்ட கதை.

செல்வன் தினமும் பள்ளிக்கு பேருந்தில் செல்வான்.

அவனது வீட்டிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் நடந்து செல்ல 10 நிமிடங்கள் ஆகும்.

நடந்து செல்லும் அந்த பத்து நிமிடங்களுக்குள் செல்வன் தன்னுடைய ஏரியாவில் உள்ள மற்ற நண்பர்கள் அவர்கள் சேர்ந்த பள்ளிக்கு கிளம்பி கொண்டு வீட்டு வாசலில் நின்று காலணி போட்டு கொண்டும்,அம்மா சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பதையும் பார்த்து கொண்டு செல்வான்.

அதோடு மட்டுமல்லாமல் தெரு குழாயில் தண்ணீர் நிற்க போகும் நேரம் அது என்பதால் அங்கு சில பெண்கள் குடத்துடன் சண்டையிடுவதையும்,அதே நேரத்தில் புட்டு, இடியாப்பம் விற்கும் குரல்கள் சேர்ந்து எதிரொலிப்பதையும் கேட்பான்.

செல்வன் இதையெல்லாம் கவனித்து விட்டு செல்ல மாநகராட்சி சுகாதார பணியாளர் குப்பைகள் சேகரித்து செல்ல வண்டியுடன் ஏரியாவில் விசில் அடித்தும், வார்த்தைகளால் சத்தமாக அழைத்தும் செல்வர்.

பள்ளி செல்லும் ஆட்டோக்கள் ஏரியாவில் நடக்கும் பாதையை அடைத்து நிற்க,வண்டியில் செல்வோர் மீதமுள்ள பாதையில் செல்வோர்,வருவோர் என‌ இருபுறமும் நீண்ட நேரம் நின்று கொண்டு இருக்க செல்வன் அப்படியே ஓரமாக நடந்து செல்வான்.

செல்வன் அந்த சத்தங்களை தினசரி‌ கேட்டு கேட்டு அது அவனுக்கு பழக்கமாகி விட்டது,முதலில் எல்லாம் எரிச்சலாக இருந்த சத்தம் இப்போது தினசரி‌ கேட்கும் பிடித்த பாடல் போல் ஆகி விட்டது அவனுக்கு.

பள்ளிக்கு பேருந்தில் செல்ல பஸ் பாஸ் வைத்திருந்தான்‌ செல்வன்.

ஏதோ அவன்‌ உள்மனதில் தனது பையில் பஸ் பாஸ் உள்ளதா? என் தோன்றி கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்து கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தம் அருகில் வந்து விட்டான் செல்வன்.

அப்பொழுது ஓரமாக நின்று பையை திறந்து பார்க்க பஸ் பாஸை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதை செல்வன் உணர்ந்தான்.

உடனே‌ வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மீண்டும் அவனுடைய தெருவிற்குள்‌ நுழைந்து வாகன நெரிசல்,மக்கள் குழுமி இருந்த இடங்களை கடந்து வீட்டை அடைந்து பஸ் பாஸை தேடி எடுத்து விட்டு வெளியே கிளம்பும்‌ போது அவன்‌ அம்மா “சரியா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா? ஒருதடவை சரி பாரு டா* என காலைல இருந்து எத்தனை‌ தடவை சொல்லிருப்பேன் என கூறி விட்டு தன்னுடைய வேலையை தொடர்ந்து கொண்டே பார்த்து போயிட்டு வா என கூறினார்.

செல்வன் தன்னுடைய‌ வாட்சில் நேரம் பார்க்க காலை 08:50 என காட்டியது.

அந்த வாட்ச் பிறந்தநாளுக்கு அவன் அப்பா வாங்கி தந்த வாட்ச்.

செல்வன் அந்த வாட்சை மணிக்கட்டில் இருந்து கைக்கு மேலே இழுத்து விட்டு விட்டு சாலையை பார்த்து கவனமாக நடந்து அவனுடைய தெருவை தாண்டி செல்லும் நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் கையில் இருந்த பையை ஒருவன் பறித்து கொண்டு ஓட தயாராகிறான்.

அதை கண்ட செல்வன் உடனே தன் பையை கழட்டி அங்கு இருந்த ஒரு வீட்டின் படியில் வைத்து விட்டு அந்த அக்கா பக்கத்தில் ஓடி சென்றான்.

செல்வன் வருவதை கண்ட அந்த நபர் பையுடன் ஓட ஆரம்பித்தான்.

செல்வன் அந்த அக்காவிடம் “இருங்க அக்கா” என சொல்லிவிட்டு அந்த நபரை துரத்த ஆரம்பித்தான்.

அந்த நபர் செல்வனுக்கு போக்கு காட்டி வேறு வேறு தெருக்களுக்கு உள்ளும்,சந்துகள் உள்ளும் புகுந்து லாவகமாக ஓடினான்.

செல்வன் போகும் வழியெல்லாம் திருடன், திருடன் பிடியுங்க என கத்தியும் சிலர் திரும்பி பார்த்தனரே தவிர யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை.

செல்வன் ஒருவழியாக அந்த நபரின் சட்டையை இழுத்து தடுத்து நிறுத்த முயன்றான்.

அந்த நபர் செல்வனின் கையை பின்புறமாக பிடித்து சாலையில் வேகமாக தள்ளினான்.

கீழே விழுந்த செல்வன் சிராய்ப்புகள் மற்றும் காயங்களுடன் எழுந்தான்.

ரத்தம் சொட்டினாலும் அந்த நபரை மீண்டும் துரத்த ஆரம்பித்தான்.

செல்வன் தன் முழுபலம் கொண்டு தனது இரு கைகளாலும் அந்த நபரை தடுத்து நிறுத்தினான்.

அந்த நபர் தனது இரு கைகளாலும் செல்வனை தாக்கி கொண்டே இருந்தான்.

செல்வனின் கையில் இருந்த வாட்சை பிடித்து இழுத்து பிய்த்து எறிந்தான்.

செல்வன்‌ ஒருவழியாக அந்த நபரிடமிருந்து பையை மீட்டு எடுத்து விட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விடுகிறான்.

செல்வன் அந்த பையை அந்த அக்காவிடம் சென்று தர அந்த அக்கா கண்ணீர் மல்க அவனுக்கு நன்றி கூறி விட்டு சென்றார்.

செல்வன் அவன் வீட்டுக்கு அவனுடைய பள்ளி பையுடன் சென்று கதவை தட்டி விட்டு நின்றான்.

வீட்டு கதவை திறந்த அவன் அம்மா பையனை இந்த நிலையில் கண்டதும் உள்ளே அழைத்து நடந்ததை கேட்க செல்வன் நடந்ததை கூற “உன்னை யாரு‌ டா இதெல்லாம் பண்ண சொன்னது?” என கேட்டு விட்டு காயங்களை கழுவ தண்ணீர் மற்றும் காயத்திற்கு போட மருந்துகளுடன் வந்தார்.

செல்வனின் அப்பா அவன் பக்கத்தில் அமர்ந்து அவனுடைய தோளை தட்டி கொடுத்து,தலையில் இருந்த மண்ணையும்,சட்டையில் முதுகு பக்கம் ஓட்டி இருந்த மண்ணையும் தட்டி விட்டு “யாரும் உனக்கு ஒத்தாசை பண்ண வரலையா?” என கேட்டு விட்டு அவன் இடது கையை பார்த்து விட்டு அமர்ந்திருந்தார்.

நான் திருடன்‌,திருடன் அப்படினு கத்தியும் யாருமே வரலை அப்பா என செல்வன் கூறி விட்டு வலியை அப்பொழுது அதிகமாக உணர்ந்து,வலியில்‌ முனகி கொண்டு இருந்தான்.

செல்வனின் அப்பா உடனே “இங்க எல்லாருமே தங்களுக்கு ஒரு பிரச்சனை வராது அப்படினு உறுதியா இருந்தா மட்டும் தான்‌ மத்தவங்களுக்கு உதவி பண்ணவே முன் வருவாங்க.

அடுத்தவர்களுக்கு உதவி பண்ற‌ விஷயத்திலும் ‘நமக்கு’ அப்படிங்கற சுயநலம் கலந்து இருக்கு” என கூறிவிட்டு இன்னைக்கு முக்கியமான வேலை ஏதும் பள்ளியில் தரலைனா போக வேண்டாம்,ஆஸ்பத்திரி போகனும்னா போன் பண்ணு என கூறிவிட்டு சென்றார்.

மாலை வீட்டிற்கு வந்த செல்வனின் அப்பா அவனுக்கு ஒரு வாட்ச் பிறகு அவனுக்கு பிடித்த சாப்பாடு பார்சல் வாங்கி வந்தார்.

இரண்டையும் செல்வன் கையில் கொடுத்து வெளியே போனா கொஞ்சம் பார்த்து போயிட்டு வா என கூறிவிட்டு டிவி ரிமோட்டை எடுத்து கொண்டு அவருடைய நாற்காலியில் அமர்ந்தார்.

செல்வன் அடுத்த சில தினங்கள் பள்ளிக்கு செல்லும்போது அவன் அப்பா அவனுக்கே தெரியாமல் அவனை பின் தொடர்ந்தார் அவன் பாதுகாப்பாக இருக்கிறானா? என உறுதி செய்து கொண்டார்.

செல்வனின் அம்மா தினமும் அவனை இந்த மாதிரி இனிமேல் செய்யாதே,செய்யாதே என திட்டினாலும் மற்றவர்களிடம் என் பையன் எப்படி ஒரு திருடன் கிட்ட இருந்து ஒரு பொருளை மீட்டான் தெரியுமா? என பெருமையுடன் பேசுவார்.

செல்வனின் இந்த தீரச் செயலை காவல்துறை தெரிந்து கொண்டு செல்வனை நேரில் அழைத்து பாராட்டி பரிசு கொடுத்து கவுரவித்தனர்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract